கன்னித்தீவு - நாவல் விமர்சனம்
இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நிறைய கர்ப்பவதிகளைப் பார்க்க நேர்ந்ததாக முன்னுரையில் ரைட்டர் குறிப்பிட்டிருந்தார். இதே அனுபவம் எனக்குமுண்டு. பிடித்த இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முன் சாலைகளில் எங்கு பார்த்தாலும் அந்த வாகனமே செல்லும். மனதுக்குள் ஒரு விஷயம் உழன்று கனன்று நெருப்பாகத் தகித்துக் கொண்டிருக்கும் போது நிகழும் செயல்கள் அனைத்தும் தற்செயல்கள் அல்ல தீர்மானிக்கப்பட்டவை என்று தோன்றும். அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த நாவல் படைத்தவருக்கும் படித்தவருக்கும் தந்த நிறைவை வைத்து அதை உணர முடிந்தது.
முன்னுரை, பின் அட்டைக் குறிப்பு மட்டுமே படித்துவிட்டு விமர்சனம் செய்யும் ஆட்களை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அவ்வாறு இல்லாமல் அந்தக் குறிப்புகள் உடன் அட்டை ஓவியத்தையும் சேர்த்து வைத்து, கதை இவ்வாறு இருக்குமோ என்று கற்பனையில் சில நொடிகளில் ஒரு கதை ஓடி முடித்த பிறகுதான் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். என் கற்பனைக் கதையில் 'எங்கோ தீவுக்குள் வழி தவறிய கர்ப்பவதி ஒருத்தி காட்டுவாசிகளிடம் சிக்கித் தப்பிக்கிறாள்' அது எப்படி, எவ்வாறு என்பதை இந்தப் புத்தகம் ஒரே பாய்ச்சலில் சொல்லியது.
எழுத்து நடை என்பார்களே அதுபோல் இந்த நாவல் முழுக்க எழுத்தாளரின் நடை. நாயகன் நாயகிக்கு இடையேயான காதல் (பு)பிரிதலை வர்ணிக்கும் வகையில் எத்தனை எத்தனை அழகான வரிகள். அவை மிகவும் ரசனையானதாகவும் கதையின் இறுக்கத்தை தளர்த்தி ரசிக்கக் காரணமாகவும் கை கோத்தபடியே வந்தன. கதையின் நாயகனாக எழுத்தாளரே பிரதிபலித்து நிற்கும்போதுதான் இத்தகைய சிந்தனா சுவாரசியங்களை நிகழ்த்த முடியுமோ என்னவோ!ஆங்காங்கே கலவி பற்றிய தூவல்கள்தான் அதிகப்படியாகத் தெரிந்தன. ஆனாலும், குளுமை!
மானுடவியல் பேசும் நாவல் என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இருந்தது போல் சமகால மனிதர்களுக்கும் கற்காலத்தை விட்டு வெளிவராத தீவு மனிதர்களுக்கும் இடையேயான உறவுகளை அழகாகப் பேசியிருக்கிறது. இடையில் பயணத்தில் வரும் மனிதர்களின் மன சஞ்சலங்களையும் தேவைக்கேற்ப அலசியிருக்கிறது. கதை நீளம் குறைவாக இருப்பதாலோ என்னவோ குறிப்பிட்ட சிலர் மட்டுமே கதை முழுக்க இருப்பதுபோல் தோன்றியது. இன்னும் கொஞ்சம் கதை மாந்தர்கள் வந்து போயிருந்தால் சுவாரசியம் கூடியிருக்கலாம்.
நில, ஜல, வாயு, அக்னி, வான் என பர்வங்களாகப் பிரித்து அதன் ஒவ்வொன்றுக்குள்ளும் பொருத்தமாக நாவலை அடக்கிய உத்தி சிறப்பு. கதைக்குப் பொருத்தமாகவும் துருத்தாமலும் மிக இயல்பான உரையாடல்கள் கதைக்குள் ஒன்ற வைத்தன. "செத்துப் போன உன் மக பேசறேன். ஆனா சொர்க்கத்திலிருந்து." எனக்கு ஆனந்தக் கண்ணீர் கசிந்த இடம். இப்படிப் பல இதிலுண்டு. நாயகன் முருகனும் பல சித்தாந்தங்கள் கொண்டவனாக இருக்கிறான். அவனது பேச்சும் செயலும் மிகையாகத் தெரியவில்லை என்பதுதான் இது பொய்ப் பாத்திரம் இல்லையென்பதைப் புரிய வைத்தது.
தமிழ் நாவல் என்றாலும் ஆங்காங்கே வரும் ஆங்கிலச் சொற்களை 'தங்லிஷ்' ஆக எழுதாமல் ஆங்கிலத்திலேயே எழுத ஆசிரியர்கள் முயற்சிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. இதே நாவலில் பல ஆங்கிலச் சொற்கள் நேரடியான ஆங்கிலத்தில் இடம்பெற்று இருக்கின்றன. ஆனாலும் 'கருவைக் கலைக்கிறது எதிக்கலி தப்பு' எனுமிடத்தில் எதிக்கலி அதிக தடுமாற்றம் தந்தது. ஒருமை, பன்மை பிழைகளும் அதிகம் கவனிக்க வைத்தன.😉
தன்னை துரதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருத்தி, பல சிக்கல்களில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறாள். ஆனாலும் உடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள், இவளை மீட்க அவர்கள் தகவல் சொல்லவில்லையா? காதல் கணவன் காப்பாற்ற வந்துவிட மாட்டானா
என பார்வதியுடன் சேர்ந்து நாமும் தவிக்க வேண்டியிருக்கிறது. அந்த இடங்களில் வாசகனுக்கு ஏற்படும் பரபரப்புகளையும் மீறி கதை தன்போக்கில் செல்கிறது.
தீவுக்குள் சிக்கும் பார்வதியை அவள் நிறைமாத கர்ப்பிணி என்கிற காரணத்தால் உயிருடன் விடுகிறார்கள் அந்த வினோத மனிதர்கள். அங்கே அவளுக்கு புதுமையான மனிதர்களும் அனுபவங்களும் கிடைக்கின்றன. அவளும் தன் பங்குக்கு ஏதாவது இந்த கற்கால மனிதர்களுக்குச் செய்ய நினைக்கிறாள். அதற்காக அவர்கள் அதுவரை அறிந்திடாத நெருப்பின் தன்மையையும் நெருப்பையும் கையாள்வது குறித்து அவர்களுக்குச் சொல்லித் தருகிறாள். அப்போது அங்கே அவள் பற்ற வைத்த ஆதி நெருப்பின் சுவையை அந்த மனிதர்கள் ருசித்த போது வாசகனும் நிமிர்ந்து அமர்ந்து படிக்கிறான்.
பிரசவ வலி அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் என்பார்கள். இங்கே பார்வதி சுயபிரசவம் செய்துகொள்ளும் போது அந்த வலி நமக்கும் தொற்றிக்கொள்கிறது. அந்த முறையை எழுத்தாளர் அங்கீகரிக்கவில்லை என்று பின்குறிப்பில் சொல்லி இருந்தாலும் கதைக்குத் தேவையான இடத்தில் மிக நியாயமாக அதை மிகச் சரியாகக் கையாண்டு இருக்கிறார். அதற்காக ஒரு கைகுலுக்கல்.
அவ்வளவு நேரம் அவளைக் காப்பாற்றி இருந்த சிசு பிரசவித்ததும் அவளுக்கு என்ன ஆகுமோ? அவளையும் கொன்று விடுவார்களோ என்று பதற வைத்தது உச்சம். அவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல அவர்களே ஆதி மனிதர்களின் எச்சம் என்று பறைசாற்றும் விதமாக வெல்கிறது லெமூரியர்களின் மனிதம். அதுவரை அம்மனிதர்கள் பற்றி பார்வதிக்கு இருந்த பல குழப்பங்களுக்கும் விடை கிடைத்தது. அம்மண்ணின் நீர் போல் தெள்வாகிறாள்.
அந்தத் தீவின் கறுப்பின மனிதர்களைக் கண்ட போது கருமன், கருப்பி என்கிறாள் பார்வதி. கருப்பன் என்றில்லாமல் கருமன் எனும்போதே முருகன், கருமன் இந்த இரண்டு பெயர்களின் உருவ அளவில் எங்கேயோ ஒத்துப் போவதுபோல் விளங்கியது. அதன் நீட்சியாகவே கருமனின் ஸ்பரிசத்தை முருகன் என பார்வதி எண்ணியபோது திடுக்கிட வைத்தது.
இறுதியில் பார்வதி நிலநடுக்கம், சுனாமி உட்படப் பல இன்னல்கள் கடந்து மீண்டு வந்து எல்லோரையும் சந்திக்கும் இடம் உயிர்ப்பில்லாமல் இருந்தது. தன்னை வெறுத்து ஒதுக்கிய பெற்றோரையும், பிரிவின் ஒவ்வொரு நொடியிலும் தன் இருப்பை உணர்த்திக்கொண்டே இருந்த காதல் கணவனையும் சந்திக்கப் போகிறாள். அதுவரை அவர்களை நோக்கி அவள் தேக்கி வைத்திருந்த உணர்வுக் குவியல்களை எப்படிக் கொட்டித் தீர்க்கப் போகிறாள் என்பது இறுதிக் கட்ட பரபரப்பாக இருந்து மிகச் சாதாரண நிகழ்வாக ஏமாற்றம் தந்தது.
இந்த நாவல் நிறைய விஷயங்களைப் பேசுகிறது. அறிவியல், மானுடவியல், இயற்கைப் பேரிடர், இறை நம்பிக்கை, சாதி, மதம், காதல், காமம், மனிதம், மிருகம், நம்பிக்கை, தன்னம்பிக்கை என அனைத்தையும் பற்றிக் கொண்டே செல்கிறது. சில விஷயங்கள் இயல்பை மீறியதாகப்பட்டாலும் மரியா மனதில் நிறைகிறாள். ஆரம்பத்தில் பார்வதி எப்படி இருப்பாள் என்று பார்க்க வேண்டும் என்கிற தோன்றிக் கொண்டே வந்து இறுதியில் மரியா எப்படி இருப்பாள், அவளைத்தான முதலில் பார்க்க வேண்டும் என்பதில் வந்து நின்றது.
தவிப்பு, பயம், ஆசை, எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் மீறிய ஒரு குறுகுறுப்பு இந்த நாவலை வாசிப்பவருக்கு ஒவ்வொரு பக்கமும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பதுதான் இதற்கான வெற்றியாகப் பார்க்கிறேன்.
சுற்றி வளைக்காமல், வளைந்து திரும்பாமல், திருப்புமுனைகள் அதிகம் இல்லாமல் நேராக பைபாஸில் பயணிப்பது போலான ஓர் ஓட்டம் வாசகனை எங்கும் அசைய விடாமல் ஒரே இடத்தில் அமரச் செய்கிறது. அதற்கான எழுத்தாளரது உழைப்பும் தகவல் திரட்டும் எங்கேயும் தோற்றுவிடாமல் தன்னை நிருபித்துக்கொண்டே இருக்கிறது.
மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது பற்றி அறிய மனித சமூகங்களின் ஓர் ஒப்பீட்டு ஆய்வாக மானுடவியல் இருக்கிறது. அது வளர்ந்த சமூகங்களை மட்டும் அல்லாமல் பழங்குடியின சமூகத்தையும் ஆராய வேண்டும் என்பதை முன்னெடுக்கும் விதமாக இந்நாவல் தமிழில் மானுடவியல் பேசும் முதல் நாவலாக அமைந்திருக்கிறது.
கன்னித்தீவு - எளிமையான மற்றும் நுட்பமான கண்ணிகளால் பின்னப்பட்ட நூல்.
--
நூல்: கன்னித்தீவு
எழுதியவர்: சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ₹280
பக்கங்கள்: 270