www.gamblinginsider.ca

22 September 2018

நிர்வாணம் பழகுதல்: 'ஆப்பிளுக்கு முன்' நாவலை முன் வைத்து...

நிர்வாணம் பழகுதல்: 'ஆப்பிளுக்கு முன்' நாவலை முன் வைத்து...

டிஸ்கி: புத்தக விமர்சனங்கள் அதிகம் எழுதியதில்லை என்பதால் அதற்கான வரையறைகள் ஏதுமின்றி வாசிக்கும்போது நேர்ந்த அனுபவத்தையும் மனதில் பட்டதையும் இங்கே முன்வைக்கிறேன். 

இரண்டு பெண்கள் தாங்கியபடி காந்தி நடந்து வரும் புகைப்படங்களைப் பார்த்தும் வேறு சில கதைகள் கேட்டும் ‘காந்தி ஒரு சல்லிப்பயல், அவர் எப்படி மகாத்மா ஆனார்?’ என்றெல்லாம் வரலாறு தெரியாமல் நண்பர்களுடன் பேசியதுண்டு. ஆனாலும், தெரிந்தோ தெரியாமலோ ஆங்காங்கே அரைகுறையாக காந்தியின் நிர்வாண சோதனைகள் இன்றும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இது அவரது மகாத்மா நிலையை எந்த அளவுக்குத் தாக்கியது, எந்த அளவுக்குத் தூக்கியது என்பதற்கான விளக்கமும் தெளிவும் இந்த நாவலில் கிடைக்கிறது. இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை, எது வரலாறு என்பதை எல்லாம் விட்டுவிட்டு ரைட்டர் சொல்லியது போல் வரலாற்றுப் புனைவாகவே அணுகிப் படிப்பது நல்லது. அதற்கேற்றார்போல் மசாலா சேர்த்திருப்பது இன்னும் மணமாகவே இருக்கிறது.

ரைட்டர் மீது ஃபேஸ்புக்கில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து, நண்பர்களும் நல விரும்பிகளும் குறைபட்டுக்கொண்டனர். 'பெண்களை மையமிட்டு நகைச்சுவையாக எழுதும் சமூக வலைதள பிம்பம் அவரது புத்தகங்கள் வாங்க, வாசிக்கத் தடையாக இருக்கிறது' என்ற கருத்தின் அடிப்படையில் கூறி இருந்தார்கள். புத்தக வெளியீட்டு நிகழ்வில் ரமேஷ் வைத்யா சார் கூட இது பற்றிச் சொல்லும் போது, ‘விடலைத்தனம் இன்னும் அவரை விட்டுப் போகவில்லை’ என்றார். சமூக வலைதள இயக்கங்களை மட்டும் முன் வைத்து யாரையும் மதிப்பிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் காந்தியின் நிர்வாண கோலம் பற்றி ரைட்டர் வரைந்திருக்கும் இந்த நாவல் குறை சொல்பவர்களின் பார்வையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பெண்கள் அதிகமாக வலம் வரும் கதைக்களத்தில் அழகான கவிநயத்துடன் தேவதைகளாக உலாவ விட்டிருக்கிறார். 'சற்றே பூசின உடல், வெளிறிய சருமம், சாஸ்வத மந்தகாசம், விளைந்து வளைந்து நிற்கும் வளமான மக்காச்சோளம் போல் தோன்றினாள்’ போன்ற வர்ணனைகளே அதற்கு எடுத்துக்காட்டு. இனி நாவலுக்குள் போகலாம்.
சத்தியமும் அஹிம்சையும் வாசம் செய்யும் ஆசிரமத்தில் ஓர் அற்ப விஷயத்தின் பொருட்டு வதந்திகள் பரவ அதைக் காந்தியே விளக்க முன்வருகிறார். தொடக்கமே இப்படி என்பதாலும் அந்த அற்ப விஷயம் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றியது என்பதாலும் நாவலின் உயிரோட்டம் தெளிவாகப் புரிந்துவிடுகிறது. அதனால் காந்தியின் வேறு அரசியல்களையும், சுதந்திரம், கலவரம், வெள்ளையர்கள் போன்ற கிளைக் கதைகளையும் இதற்குள் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. முழுக்க முழுக்க காந்தியையும் அவரது உடலுக்கான உதவியாளர்களையும் சுற்றியே கதை வட்டமடிக்கிறது. ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேஇதுதான் ஒன்லைன்.

கஸ்தூரி பா உயிருடன் இருக்கும்போதே காந்தி இந்தப் பரிசோதனைகளைத் தொடங்கி இருந்தாலும் இதில் நாயகி அவர் இல்லை. மகளாக வரும் மநுவுக்கும் காந்திக்கும் இடைப்பட்ட உறவு. மநுவுக்கு முன்பு பிரபாவதி, சுஷீலா நய்யார் போன்ற சீடர்களும் பரிசோதனையில் காந்தியுடன் ஈடுபடுகிறார்கள்.

பா இறந்த பிறகு, காந்தி மநுவிடம் 'நீ உன் கனவுகளை இனி என்னிடம் சொல்’ எனும் போதும், பாவின் அணிகலண்களை மநு அணிந்து கஸ்தூர்பா போல் உணரும்போதும் இருவருக்குமான அலைவரிசை ஒரே கோட்டில் சேர்ந்து கதை பயணிக்கத் தொடங்குகிறது. அந்த வேதிப் பிணைப்பில் ஆசிரமவாசிகள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு மநுவும் பா இருந்த இடத்தில் காந்தியிடம் நிரம்பிவிடுகிறாள்.

மநு வருகைக்கு முன்பு காந்தியின் உடலுக்கு மருந்தாக சுஷீலா இருந்தார். போகப் போக மநு முழுதாக அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் போது அவர்களுக்குள்ளான அரசியல் ஆரம்பிக்கிறது. இதை ‘உடல் அரசியல்’ என்றே சொல்லலாம்.

பதின்ம வயதில் மநுவிடம் இல்லாத உணர்வுகள் கண்டு காந்தி அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்கிறார். தன்னால் கட்டுப்படுத்த முடியாத நிர்வாண நிலையை மநு எப்படி எதிர்கொள்கிறாள் என சுஷிலாவும் வியக்கிறாள். இப்படி மநு எல்லா வகையிலும் எல்லோராலும் கவனிக்கப்படும் ஆளாக மாறுகிறாள்.

காந்தியத்தில் காந்தியை விடவும் உறுதியாக இருக்கும் மநுவை காந்தியிடம் இருந்து பிரிக்கப் படாத பாடு படும் சுஷீலா தனது அண்ணன் ப்யாரேலால் (ப்யார்னா காதல் தான?) மநு மீது கொண்டுள்ள காதலை ஆயுதமாக்கி மநுவை எதிர்கொள்கிறாள். ப்யாரேலாலும் தன் பங்குக்கு பலவித காதல் முன்னெடுப்புகளை எடுத்து காந்தியிடம் தோற்கிறார். ஆசிரமத்தின் பல காதல்களைப் பிரித்த காந்தி இதையும் பிரித்துவிடுவார், எல்லாப் பெண்களையும் காந்தியே ஈர்த்துக் கொள்கிறார் என்கிற ப்யாரேலாலின் குமுறல் காந்தியின் இன்னொரு முகத்தை நமக்குக் காட்டுகிறது. இந்தக் காதல் விவகாரத்தில்தான் மநு தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற பொசசிவ் உணர்வை காந்தி வெளிக்காட்டுகிறார்.

காந்தி அங்கிருக்கும் எல்லாருக்கும் தந்தையாக இருந்து மநுவுக்கு மட்டும் அன்னையாகிறார். இறுதிவரை மநு கன்னியாகவே இருக்க வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பம் அதற்காக ஏகப்பட்ட சோதனைகளும் வைக்கிறார். அதில் தனது சாமர்த்தியமான செயல்களாலும் முதிர்ச்சியான சிந்தனையாலும் காந்தியே வியக்கும் அளவுக்கு மநு நடந்து கொள்கிறாள்.

ஒரு கட்டத்தில் காந்தி தான் குற்றவாளியாக்கப்படுவதை உணர்ந்து தன்னுடைய செயலுக்கான விளக்கத்தை தான் எதிர்பார்ப்பது போல் யாராவது சொல்ல மாட்டார்களா என ஏங்குகிறார். அதற்காக, உறவினர்கள், நண்பர்கள், சீடர்களிடம் தன் செயலைச் சொல்லி விளக்கம் கேட்கிறார். அதன் நீட்சியாக வரும் தக்கர் பாபாவுடனான உரையாடல்தான் நாவலின் கிளைமேக்ஸ். ஆனால் அதுதான் நாவலின் மையம். இதை நோக்கியே கதை நகர்த்தப்பட்டு இருக்கிறது. தன் பக்கத்து நியாயங்கள் எல்லாவற்றையும் காந்தி எடுத்து வைக்க, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேறொரு கருத்தை பாபா முன் வைக்கிறார். அஹிம்சைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என அவர் கேட்க, ‘தென்னாட்டில் சித்தர்கள் உடல் என்பதை மெய் என்கிறார்கள். அதனால் இந்தப் பிரம்மச்சரியப் பரிசோதனையும் என் சத்தியசோதனையில் ஒன்றுதான்’ என்கிறார். அப்போது, ‘ஏவாள் ஆப்பிள் தின்றதற்கு முந்தைய கனத்துக்குப் போக விரும்புகிறீர்களா?’ என பாபா கேட்க, ஆம் என்று சொல்லும் காந்தி அதுவே மானுட குலத்தின் பொற்காலம் என்கிறார்.

தனது நோக்கத்தைக் கைவிடாத பாபா, மநுவிடம் வேறொரு உத்தியைப் பயன்படுத்தி அந்தச் சோதனையில் இருந்து விலக வைக்கிறார். காந்தியே எதிர்பாராத இந்த முடிவில் பாபா வென்று காந்தி தோற்கிறார். இந்தச் சோதனைகளைக் கைவிட்டதால் தான் மக்கள் மனதை மாற்றும் சக்தி எனக்கு இல்லாமல் போனது என மநுவிடம் காந்தி உடையும்போது எந்த அளவுக்கு அதன்மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பது புரிகிறது.

கண்ணும் கருத்துமாக காந்தியைப் பார்த்துக்கொண்ட மநுவின் ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாக காந்தி தின்று கொண்டிருந்தார் என்பதில் காந்தியின் சுயநலம் தெரிகிறது. தனது கொள்கைகளுக்காவும் தான் கொண்ட சத்தியத்துக்காகவும் யாரையும் பலிகொடுக்க அவர் தயாராக இருந்திருக்கிறார். இறுதியாக ‘இந்த மகத்தான தியாகத்தில் நீ என் வாழ்க்கைத் துணை ஆகிப் போனாய் மநு’ என்று காந்தி சான்றழிக்கிறார். தன்னை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மநுவுக்கு பா, காந்தி இருவரது இறப்பையும் மடியில் தாங்கிய பெருமை கிடைத்திருந்தாலும் காந்தி இல்லாத வெறுமையை யாராலும் அவளுக்கு ஈடுகட்ட முடியாது என்பதாக நாவல் முடிகிறது.

நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்
* சிறுவயதிலேயே பெரும் இழப்புகளைச் சந்திப்பவர்கள் பக்குவமடைந்து விடுகிறார்கள். அது ஒருவகையில் வரம்தான்.
* சிறுபிள்ளைத்தனங்களில் சிலாகிக்க ஏதுமில்லைதான். ஆனால் அவை சில சமயங்களில் அதிசயங்களை நிகழ்த்தி விடுகின்றன.
* காந்தியின் மூளையில் ஒரு முலை முளைத்து மநுவுக்காகச் சுரந்து நின்றது.
* உறவுக்குதான் பரஸ்பர சம்மதம் தேவை. துறவுக்கு அல்ல
* அந்தக் கட்டிலின் கீழும் மேலும் நான்கு கால்களும் பிரிந்தேதான் இருந்தன.
* உடை அவிழ்க்கையிலே புலன்கள் ஒவ்வொன்றும் திறந்துகொள்கின்றன. இது ஒரு கொடூரமான தண்டனை
* காந்தியின் அந்திமக் காலத்தின் ராணித் தேனீயானாள் மநு
* காமம் இல்லாத மனிதன் என்பது ஒரு புனைவு

(நல்ல தமிழில் நிறைய சொற்கள். அழகான நடை. கவிதை நடையில் ஒரு நாவல் எழுத ரைட்டர் முயற்சிக்கலாம். ஒரு, ஓர் சரியாகக் கையாண்டதற்கும் ஒற்றுப் பிழைகள் அதிகம் இல்லாமல் இருந்தற்கும் தனித்த கைதட்டல்கள்.)


ஆசிரமம் தாண்டி சில இடங்களுக்கு நாவல் பயணிக்கிறது. அப்போது ஓர் ஊரை வர்ணிக்க, ‘கர்ப்பமுற்ற பெண்ணின் அழகு பெருகித் தெரிவதைப் போல் குளிர்காலத்தில் பனிக்கிடையே கூடுதல் பச்சை வனப்புடன் மிளிர்ந்தது’ என்பது போன்ற அழகியல் பார்வைகள் வாசகன் முகத்தில் அவ்வப்போது தண்ணீர் தெளித்தது போல் இருக்கிறது.

மொத்த நாவலையும் படித்த பிறகு 'ஆப்பிளுக்கு முன்' என்கிற தலைப்பு பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றினாலும் தலைப்பைப் பார்த்து புத்தகம் வாங்க நினைப்பவர்களுக்கு காந்தியை முன்நிறுத்துவது சிரமமாக இருக்கும். முதலில் யோசித்த தலைப்பான 'நிர்வாணப் பக்கிரி' இன்னும் அழுத்தம் திருத்தமாக காந்திக்கு அருகே நின்றிருக்கும்.

காந்தி உண்மையிலேயே மகாத்மா தானா? சுதந்திரப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற நிர்வாண முயற்சிகள் தேவையா? இந்த முயற்சி எந்த வகையில் அவரது போராட்டங்களுக்கு ஒத்துழைத்தது? இதில் வெற்றி பெற்றால் என்ன கிடைக்கும் என நினைத்தார்? அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவும் புதுமையான அனுபவத்துக்காகவும் வாசிக்கலாம். இதற்காக தேடித் தேடிப் படித்துச் சேகரித்த தகவல்களை நூல்ப் பிடித்தது போல் எந்த இடத்திலும் பிசகாமல் அழகாகக் கோத்திருக்கிறார். அதிகமாக யாரும் தொடத் துணியாத கதைக்களம், உண்மையையும் புனைவையும் கயிறு மேல் நடப்பது போல் நடத்திக் கூட்டி வருகிறார். மொத்தத்தில் ‘ஆப்பிளுக்கு முன்நாவல் உடல் நினைவில் காடுள்ள மிருகம்.

மனோ ரெட்
22.9.2018