www.gamblinginsider.ca

28 October 2015

வெந்தும் வேகாத சாவு..! -Mano Red



உடலுக்கு என்ன கவலை
அதுபாட்டுக்கு அது இருக்கும்
அதற்கு நிச்சயிக்கப்பட்ட
மரணம் வரும்வரை !

மரணத்தின் போது
துணைக்கு யாரை
அழைக்க முடியும்.
நமக்கான மரணத்தை
நாம்தான் சந்தித்தாக வேண்டும்.

மூச்சை அடக்கி
அத்தனையும் ஒடுக்கி
மரணமடைந்தது போல
மல்லாந்து பாருங்கள்
உண்மைநிலை புரியும்.

இறந்த பின்
சுடுகாடு சேர்ந்தால்
உடல் அழிந்துவிடுமா.?
நிச்சயமாக அழியாது
நான் எனும் ஆணவம்
இருக்கும் வரை.

நான் நான் என்று
பொங்கியெழும்
ஆவேசப் பூரிப்பு
இந்த உடலை
எரிக்கவோ
புதைக்கவோ விடாது.

நான் எனும்
இப் பெரும் பூதமே
வாழ்நாள் முழுக்க 
உடலெனும் கூட்டை
ஆட்டி வைக்கிறது..

நான் எனும் பேருணர்வை
போர்த்தி நிற்கும்
எண்ணங்கள செயல்கள் நினைவுகள் 
இவை அத்தனையும்
அழியும் வரை
மரணம் என்பது
வெந்தும் வேகாத நிலையே.!

24 October 2015

அவள் ஆடை ரத்தம்...! - Mano Red



அந்த நாட்களின் கொடுமை
அவளையும் விடவில்லை,
முள் மீது படுத்தவளாய்
முழுங்க முடியாத எச்சிலுடன்
முனகிக் கொண்டிருந்தாள்.

உடலும் மனமும்
வலியுடன்
பேசிக் கொண்டிருப்பதால்
யாருடனும் பேச மனமின்றி
சுருண்டு கிடந்தாள்.

உணவு கொள்ளவில்லை,
நடக்கத் தெம்பில்லை,
உயிர் அத்தனையும் சுருக்கி
ஒரு புள்ளியில்
நிறுத்தி
வெறுத்து அமர்ந்திருந்தாள்.

அவள் உடலின் மேல்
போர்த்தப்பட்டிருக்கும்
பெண் என்பவளை,
சமுதாயமும்
ஆணாதிக்கக் கற்பிதங்களும்
அன்றுவரை தீட்டாகவே எண்ணி
அருவெறுத்து ஒதுக்கியிருந்தது.

அவள் ஆடை படியும் ரத்தம்
அசுத்தமானது அல்ல,
மனித உடல் கிழித்த
ரத்தம் போல் தூய்மையானது.
தீட்டானவளைத் தெய்வமாக்கும்
கருவின் ஆரம்பம் இது.

அவளுக்கான உலகம் அன்று
உளறிக் கொட்டினாலும்
அவளுக்கான நாட்கள் அன்று
நகர மறுத்தாலும்
அவளுக்கான நிமிடம் அன்று
நின்று எரிந்தாலும்
அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....


22 October 2015

ஜானி ஜானி யெஸ் பாப்பா..! -Mano Red




தொண்டைத் தண்ணீர் வற்ற
மேடையில் அவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள்,
நதிநீர் இணைப்பையும்
வற்றிப் போன
ஏரி குளங்கள் பற்றியும்

அரைகுறை ஆடையணிந்த
கவர்ச்சி அழகி ஒருத்தி
கண்ணீர் மழ்க
கவிதை படித்துக் கொண்டிருந்தாள்,
கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காகவும்
பெண்ணிய சுதந்திரத்திற்காகவும்

மாடாய் கத்திப் பேசி
களைத்துப் போனதில் கலைந்தார்கள்,
மாட்டுக்கறி வேண்டுமென
ஒரு கூட்டமாகவும்
பசுவதையைத் தடை செய்ய
இன்னொரு கூட்டமாகவும்

கக்கத்தில் சொருகியிருந்த
அக்வாஃபினா பாட்டில் நீரை
அடிக்கடி குடித்து
நெகிழ்வாகப் பேசி அமர்ந்தார்,
நெகிழி ஒழிக்கும் சங்கத்தின்
மூத்த போராளிகளுள் ஒருவர்.

அவர்கள் எல்லாம்
எக்கேடோ கெட்டுப் போகட்டும்,
எந்த அக்கறையும் இல்லாமல்
பக்கத்து வீட்டு குழந்தை பாடும்
”ஜானி ஜானி யெஸ் பாப்பா ”
இன்னொருமுறை கேட்குமா?
சன்னலோரத்தில் 
காது தீட்டியபடி நான்.

15 October 2015

பாவம் அவர்கள்...!- Mano Red



இரக்கப்படுகிறோம்
அவர்கள் இந்தியாவில்
பிறந்ததற்காக அல்ல,
வல்லரசாக்காமல் இறந்து
கடமையைச் சரியாக
செய்யாமல் போனதற்காக..

அவர் அப்படி
இவர் இப்படியென
எவரும் எவரைப் பற்றியும் பேசலாம்,
இருக்கும்போது
இறக்கச் சொல்லும் நாமே
இறந்த பின்பு அவர்களை
இருக்கச் சொல்கிறோம்.

பாச வேசங்களினால்
பட்டை தீட்டப்பட்ட
பகுத்தறிவுக்கு
நினைவுகூறல் என்பது,
தற்காலிக அழுகையில்
கண்ணீர் சுரந்து
பொழுது சாய்ந்ததும் பல் இளிக்கும்
நாடகம் போலத்தான்.

போற்றுவதற்கும்
போட்டு உடைப்பதற்கும்
சந்தர்ப்பம் கிடைக்காத
சந்தர்ப்பவாதிகள்
நேரம் நாள் பார்த்து
நாகரீகமாக காத்திருக்கிறார்கள்
சிரித்து அழுவதற்கு...

தயவுசெய்து
உங்களின் சோக மூட்டைகளில்
தீயை வைக்காதீர்கள்.
காற்று மாசுபடுமென்ற
கவலையில் அல்ல,
காற்றில் கலந்திருக்கும்
கலாம் போன்றவர்களுக்கு
மூச்சடைக்கும் என்பதை
மனதில் வைத்தாவது..


06 October 2015

உள்ளுணர்வில் ஓர் ஊஞ்சல்..! Mano Red



அவளை நான்
நன்கு அறிவேன்.

நான் காத்திருக்கும் 
இடத்தில்தான் 
அவளும் காத்திருப்பாள்
எனக்காக அல்ல
பேருந்திற்காக..

வர்ணிக்க ஒன்றுமிருக்காது,
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
முகம் மறைத்தவளின்
கண்கள் மட்டும்
காட்டுத்தீயாய் இருக்குமென
அவ்வப்போது உணருவேன்
என் பக்கம் திரும்பும் போதெல்லாம்.

அவளுக்கு பாடல் பிடிக்குமா
எனத் தெரியாது,
மனதுக்குள் முனகினாலும்
சட்டெனத் திரும்புவாள்
தான் ரசித்ததையும் காட்டிக்கொள்ளாமல்..

அவளுக்கு என் முகம் தெரியுமென்பது
அடிக்கடி முகமூடி கிழிக்கும்
எனக்கும் தெரியும்,
அழைப்பது போல
அலைவரிசை காட்டிவிட்டு
தொலைவில் நின்று விலகுவாள்.

அவளின் உள்ளுணர்வு நூலில்
ஊஞ்சல் கட்டி
ஆடத் தெரிந்த எனக்கு,
அவளின் மனதைக் கட்டியிழுக்க
காரணக் கயிறு கிடைக்கவில்லை.

நிறுத்தம் வந்தது
அவளும் இறங்கிச் சென்றுவிட்டாள்,
ஆனாலும்,
அவள் கண்கள்
இன்னும் இறங்கவிடவில்லை
அடுத்த நிறுத்தம் வரை...