இணையம் தேடலில் இடறி விழுந்த இதயம் ஒன்று இதயம் விட்டு போக மறுக்கிறது..!!! அறிவியலின் இஷ்டப்படி கிடைத்த அவளோ, அழகியலில் எப்படியென கற்பனைக்கும் எட்டவில்லை..!!
விசைப்பலகையின் தாளத்தில் விரல்கள் வீணை மீட்டி, கைப்பிடி எலியை சிலிர்க்க செய்தால், தசம எண்களின் வழியே தேவதை அவள் வெளி வருவாள்..!!
எந்த தேடு பொறியிலும் சிக்கிவிடாத மெல்லினமொன்று, என் விரல் தேடலில் சிக்கி முகப்பு பக்கம் அலங்கரிக்கிறது..!!
துள்ளி வரும் சாளரமாய் துணுக்கு செய்திகள் அவள் சொல்வாள்..!! நடு நடுவே பேச்சில்லா பொம்மை முகமும், எழுத்தில்லா வெற்றிடமும் அனுப்பி அர்த்தமின்றி அர்த்தம் புரிய வைப்பாள்..!!
மின்னஞ்சலில் மின்னலாய் வந்து, தரவிறக்கம் செய்யாமல் மழை பெய்து என் முகவரி நெறிமுறை மாற்றி தன்னுள் தரவேற்றி கொள்வாள்..!!!
கணினியின் ஓர வஞ்சனையால் சில நொடிகள் இணைப்பு தவறினாலும், இதய ஓடையில் வெற்றிடமாய் புகுந்து நிரல்களை இடம் மாற்றி விடுவாள்..!!
அவளின் சிணுங்கல் வரிகளுக்கு எழுத்துக்கள் உயிர் பெற்று, உலகளாவிய வலையையும் தாண்டி என்னை சேரும் போது உலகம் என் கைப்பிடியில் இருந்தது...!!
இணைய விளம்பரங்கள் அழகிகளுடன் ஆங்காங்கே உலாவி கொண்டிருக்க, என் அழகியோ எழுத்துக்களில் சிரிப்பு புகுத்தி கணினியையும் காதலிக்க வைப்பாள்..!!