அந்நாள் அரிதினும் அரிது,
தன்னிலை திரிதலில்
அடுக்கடுக்காய் ஐம்புலம் சலித்து
மன்னவனின் மனம் ஒப்ப
நிழல் சரியப் பணிந்து
விழி நுண் கூடலில் காத்து கிடந்தோம்..!!
அய்யயோ போதும் போதும்
என்ன வார்த்தை இது,
கவிதையா இது..??
ஆமா கவிதை தான் இது..!!
என்னமோ சொல்றீங்க...
எல்லாமே சரி அந்த
மானே தேனே பொன்மானே காணோமே..!!
கோட்டை கொத்தளமும்
வேட்டை உணவும்
புணர்தலும் போக
எஞ்சிய பொழுதுகளில்
பாடிக் குலவி விஞ்சிய
கார்காலக் காலம் அது...!!
கொற்றவன் முதல்
குறவன் வரை கூத்தாடி மகிழ்ந்தனர்..!!
இது கொஞ்சம் பரவாயில்லை
கெட்ட வார்த்தை மாதிரி இல்ல
இருந்தாலும் எதோ புரில,
நாங்கலாம் இந்தக் காலம்
சும்மா இப்படி பொலம்பாம
வேற எதாவது சொல்லு..!
வேல்தமிழ், வெல்தமிழ்
பண்புத்தமிழ் ,புறத்தமிழ்
மழைத்தமிழ்,நிலாத்தமிழ்
புலித்தமிழ் ,புலத்தமிழ்
கனித்தமிழ்,அறிவுத்ததமிழ்
படைத்தமிழ்,பாய்ச்சல்தமிழ்
வாகைத்தமிழ்,வேங்கைத்தமிழ்
குடைத்தமிழ்,கொஞ்சுதமிழ்
ஈரத்தமிழ்,ஈழத்தமிழ்
புரட்சித்தமிழ்,பிஞ்சுதமிழ்
தங்கத்தமிழ்,பொங்குதமிழ்
மழலைத்தமிழ்,காதல்தமிழ்
வண்ணத்தமிழ்,வள்ளுவத்தமிழ்
மானத்தமிழ்,அன்புத்தமிழ்
இசைத்தமிழ்,கன்னித்தமிழ்
அன்புத்தமிழ்,ஔவைத்தமிழ்...!!
ஆ......!!
என்னய்யா தமிழ் இது
அழகா இருக்கே...!
மூச்சுவிடாம சொல்ற,
இத்தனை தமிழ் இருக்கா..??
ஆமா இவ்ளோ தமிழ் பேசுற நீ
தமிழுக்காக
என்னத்த கிழிச்சுட்ட...!!?