கல்யாணமாகி
ஆறு வருசம்…!!!!
வயித்துல
ஒரு புழுபூச்சியில்ல
இதுதான் இப்ப
நெசம்…!!
புள்ள பெறக்க
வழியில்ல
எனக்கு நல்ல
வாழ்வில்ல,
எம்பொழப்பு
சிரிப்பா சிரிக்குதே
நான் மட்டும்
அழுகுறேனே…??
ஊரே கூடி
பேசுச்சு
நான் கவலப்படல,
சொந்த உறவும்
இப்படி பேசுதே
நான் இப்ப
என்ன சொல்ல…??
சின்ன வயசு
பொம்ம விளையாட்டுல
பத்து புள்ள
எனக்கு,
யாரு கண்ணு
வச்சதோ
பேரு சொல்ல
ஒத்த புள்ள இல்ல….!!!
வாசமில்லா
பூ என்னய
வாசலில எறிஞ்சுட்டாங்க,
விதையில்லா
பழம் என்னய
வீதியில நட்டுட்டாங்க,
ரோசப்பட்டு
என்ன செய்ய
தாலி நெறமோ
மாறிடுச்சு,
வச்ச பூவும்
வாடிருச்சு,
நல்ல சேதிதான்
எப்ப வருமோ..??
காந்தாரி
கதையும் தெரியும்,
குந்தி கதையும்
தெரியும்,
என் கதை யாருக்கு
புரியும்..??
சாமியே வந்தாலும்
தவமிருக்க
தகுதியில்ல,
ஏழப்பட்ட
பொண்ணுக்கு
வரம் கொடுக்க
யாருமில்ல….??
ஆம்பள அவுகள
குறை சொல்ல
முடியாதே,
பொம்பள புத்திக்கு
ஒழுங்கா
பதில் சொல்ல
தெரியாதே..!!
பாக்கலாம்
அடுத்த வருசம்
எனக்கும்
ஆசயிருக்கு
சொமக்கணும்
பத்து மாசம்…!!!
அரசமரம் சுத்தியாச்சு,
ஆத்தாளுக்கு
கூழ் ஊத்தியாச்சு,
ஆனாலும் லாபமில்ல
பரம்பர மானமும்
பழிக்கு தப்பவில்ல
அனாத புள்ள
எடுத்து வளர்க்க
அதிகாரம்
எனக்கில்ல,
கொடுத்து
வைக்காதவ நான் தானே
யாரத்தான்
குத்தம் சொல்ல…???