அப்பட்டமாகத் தெரிந்தது
அழுக்கேறி இருந்த
அவரின் உடை.!
இடதுகையின்
முதிர்ந்த தோளில்
மாட்டியிருந்த
பெரிய கோணிப்பையில்
நிரப்பிக் கொண்டே சென்றார்
பிளாஸ்டிக் அல்லாத
காகிதங்களை..
அவருக்குள்ளாகவே
போதுமென நினைத்து
மரத்தின் அடியில்
முருகா! எனச் சொல்லி அமர்ந்து
பொறுக்கிய காகிதங்களை
வகைப்படுத்த தொடங்கினார்.
காகிதங்களில்
தமிழ் வலதுகை பக்கம்
வேறு மொழிகள் இடதுகை பக்கம்
எழுதப்பட்டது ஒருபக்கம்
எதற்கும் ஆகாதது மறுபக்கம்
என்றவாறு அலங்கரித்தார்.
பொறுக்கிய
தமிழ்க் காகிதங்களை
நாக்கு குளிரப் படித்துவிட்டு,
தலையில் துண்டைப் போட்ட
மகன்களை நினைத்தபடி
முகத்தில் துண்டை மூடி
தூங்கிவிட்டார்.
சட்டைப்பையின்
கிழிந்த ஓரத்தில்
தூங்காமல் தொங்கிக் கொண்டிருந்த
பேனா சொல்லியது
நான்கு மகன்களையும்
படிக்க வைத்த
அவரும் படித்தவர் என்பதை...