தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! (26.11.16) 😍 😍😍
-
சிசேரியன் என்பதால், 'பிறந்தது' என்பதைவிட வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன் உறவுமுறை அக்காக்களும், தோழிகளும் சிசேரியன் பிரசவத்தினால் பட்ட கஷ்டம் பார்த்து, “நான் சுகப்பிரசவத்தில்தான் பிள்ளை பெற்றுக்கொள்வேன்” என்று அடம்பிடித்தவளாக தாயாகத் தயாரானாள். இதுல நான் ஏதாச்சும் சொல்லணுமே, "38 வயசுல உலக அழகியா இருந்த ஐஸ்வர்யா ராயே சுகப்பிரசவத்துலதான் குழந்தை பெத்துகிட்டாங்க, உனக்கு 25 வயசுதான ஆகுது" என்றேன். அவளும் அதற்கேற்றவாறு சரியான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, நடைபயிற்சி, சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்வது என்று நடைமுறைப்படுத்திக் கொண்டாள். எல்லாம் சரியாக இருக்க, இரண்டு நாட்களுக்கு முன் பிரசவ வலி வந்து, ஊரின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். எந்தப் பெண்ணுக்கும் தொடர்ச்சியாக பிரசவ வலி எடுக்காது. 45 விநாடிகள் வலி எடுத்தால் அடுத்த 3 நிமிடங்களுக்கு வலி இருக்காது. மீண்டும் 45 விநாடிகள் வலி, 3 நிமிடங்கள் வலியின்மை என்று தொடரும் வலி மிகுந்த தருணத்தில் அந்த 3 நிமிடங்கள் மட்டுமே வலியில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியுமாம்!
அவளுக்கு வலியும் சரியாக ஒத்துழைக்காததால் எல்லாரும் பயந்து சிசேரியன் செய்துவிடலாம் என்றிருக்கிறார்கள். அப்போதும் அவள் மறுத்து மறுநாள் வரை காத்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறாள். நேற்றிரவும் அதுபோல விட்டு விட்டு வலி வர, இந்த வலி சுகப்பிரசவத்திற்கு ஒத்துழைக்காது என்று சொன்ன மருத்துவர்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக அனுப்பி இருக்கிறார்கள். அங்கே இரவு 2மணிக்கு சிசேரியன் செய்து குழந்தையை நல்ல முறையில் எடுத்து இருக்கிறார்கள். நல்லவேளையாக, நல்ல நேரம், ராசி, நட்சத்திரம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கலாம் என்று குடும்பத்தினர் யாரும் சொல்லவில்லை. அதுவரை சந்தோஷம்.
இப்போதெல்லாம், தாய்மை அடைவதே பெரிது என்றும், வயது கூடக்கூட பிரசவத்தின் சிரமங்களை பெண்களால் தாங்க முடியாது என்றும் உருவாக்கப்பட்ட நவீன தோற்றங்களால் அதிக பிரசவங்கள் சிசேரியனில் முடிகின்றன. இளம்பெண்களும், சுகப்பிரசவ வலியை (மனித உடல் தாங்கக்கூடிய வலியின் அதிகபட்ச அளவு 45 டெல். ஆனால், சுகப்பிரசவத்தின் போது பெண்ணுக்கு 57 டெல் வரை வலி ஏற்படும். இது, 20 இடங்களில் ஒரே சமயத்தில் எலும்பு முறிந்தால் ஏற்படும் வலிக்குச் சமம்) தாங்க முடியாது சிசேரியன் செய்யலாம் என்று குடும்பத்துடன் ஓ.கே. சொல்லிவிடுகிறார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மருத்துவமனைகளும் இப்போது சுகப்பிரசவத்தில் அதிகம் ரிஸ்க் எடுப்பதில்லை.
இயற்கையின் அழகான ஆச்சர்யம் பிரசவம்! பெண்ணுக்கு இன்னொரு பிறப்பு. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும் அவள் பெறும் வலிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எந்த முறையில் பிரசவித்தாலும், அதனால் பல பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தையும் சகித்தே தன் குழந்தையின் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்றுக்கொள்கிறாள் ஒரு தாய்! 😍 😍