www.gamblinginsider.ca

14 August 2017

ஞாயிறு உளறல் 2

-
ஆதிகாலத்து மலர் எப்படி இருந்திருக்கும்? குரங்கிலிருந்து மனிதன் வந்தான் சரி?! மலரின் பரிணாமம் எதிலிருந்து தொடங்கியிருக்கும்? எந்த வடிவத்தில், என்ன மணத்தில், என்ன நிறத்தில் இருந்திருக்கும்? இந்தக் கேள்விகளை மனதில் எழுப்பியது அன்று சாப்பிட்ட பழைய சாம்பார். முந்தைய நாள் இரவில் செய்த சாம்பாரை சுட வைத்து மறுநாள் மதியம் சாப்பிட்டதுண்டா? கெட்டுப் போக விடாமல் சுட வைத்து சுண்டச் செய்துகொண்டே இருந்தால் அதன் சுவையும் மணமும் மாறிக் கொண்டே இருக்கும். இப்படித்தான் மலரும் மனிதனும் மற்றவையும் பரிணாமத்தின் சூடு தாங்காமல் தற்போதைய வடிவத்தில் இருக்கலாமென்கிற பதிலும் சாம்பாரிலேயே கிடைத்தது.
மனிதனின் பரிணாமம், என்ன வளர்ந்து என்ன லாபம்? தனக்குத் தேவையானது கிடைத்துவிட்ட பிறகு, 'யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்கிற மனநிலை மனிதர்களைச் சந்திக்கும்போது பரிணாமம் என்பது சமூகம் சார்ந்ததா, தனிப்பட்ட மனிதன் சார்ந்ததா? என்று குழப்பமாக இருக்கிறது. அடிமையாக மாறி அனுதாபத்தையும் அபிமானத்தையும் பெற்று மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல் தன் காரியத்தில் சுயநலமாக இருப்பவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்களாம்! 'தேவைக்காக சுயநலமாக இருக்கிறேன்' என்று சொல்பவர்களே 'எல்லையிலே ராணுவ வீரர்கள்...' என்று சொல்ல ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். இந்தக் காலத்தில் சுயநலமாக இருப்பது தற்காப்பு விஷயமென நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
ஆனால், 'தற்காப்பை விட தன்மானமே முக்கியம்' என்று முரசொலி பவள விழாவில் #கமல் பேசியிருக்கிறாரே. மற்ற இடங்களில் எப்படியோ சொந்தக்காரங்க வீட்ல இரண்டும் செல்லாது. 'விருந்தாளிக்கு பொறந்த பய' என்பது பழமொழியா, வசையா, சொலவடையா என்று அர்த்தம் தெரியாமல் சொந்தக்காரங்க வீட்டுக்குள் காலடி வைக்கும்போதுதான் டிவியில் கூட்டுக் குடும்பம் பற்றிய பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருக்கும்.
கற்காலத்திலேயே மனிதன் கூட்டுக் குடும்பமாகவும், வீட்டு விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கிவிட்டான். ஆனால் இந்தப் பொற்கால கூட்டு குடும்பத்தில் விரிசல் விழுந்துவிட்டது; குருவி கட்டிய கூடும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் 'அந்தப் பரணி பயதான்' என்று சொல்ல மனமில்லை. 'காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி'. பிக்பாஸ் பார்த்தாவது கூட்டுக் குடும்ப முறைகள் மீண்டும் தளைக்கும் என எதிர்பார்த்தால் காயத்ரியிடம் #பிக்பாஸ் கேட்ட கேள்விகளும், #Sarahahவில் நம்ம ஆள்கள் கேட்ட கேள்விகளும் எதிர்காலத்தை இன்னும் தனிமைப் படுத்தி இருக்கின்றன.
தனிமை மோசமானது. சுற்றிலும் வெண்மை இருந்தாலும் கருமையை உணர வைக்கும். உள்ளிருக்கும் சிறிய கடவுளையும் கொன்று பெரிய மிருகத்தை வளர்த்தெடுக்கும். இந்தத் தனிமைதான் கடந்த வாரம் Prabhu Versioni நண்பனைப் பலி வாங்கியது. பெருமைக்கு இல்லையென்றாலும் பேச்சிற்கு சொல்கிறேன். ஃபேஸ்புக்கில் 4000 நண்பர்கள் இருந்தும் அவனது தனிமையை ஆற்றுப்படுத்த அவனருகிலோ, போன் உரையாடலிலோ ஒருவரும் அவனுடன் இல்லை. இருந்திருந்தால் தற்கொலை முடிவுக்கு போயிருக்க மாட்டான். Virtual உலகம் வேறாகவும் நம்மைச் சுற்றியுள்ள விருப்ப உலகம் வேறாகவும் இருக்கும்போது, தனிமை மரணத்தையும் ருசிக்கக் கேட்கிறது.
மரணம் என்றதுமே ஒருவித கிளர்ச்சி எல்லோருக்கும் ஏற்படும். என்னைப் பொறுத்தவரை மரணம் எப்படி இருக்க வேண்டுமெனில், விளையாட்டு பற்றிய சினிமாவின் இறுதிக் காட்சிகளில் போராடி வெற்றி பெற்று ஜெயித்தவன் ஆர்ப்பரிப்பானே, அதை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் அந்த நொடிகளில் நம் உடலும் புல்லரித்து, கண்களில் நீர் ததும்பி, ரத்தமெல்லாம் வெடித்துப் பாய்ந்து, மொத்த உடலும் படபடத்து சிறகு முளைத்துக் கொண்டிருக்கும்போது உயரமான மாடி மீதேறிக் குதித்து பறந்தபடி மரணத்தை உணர வேண்டும். 😍 #உளறல்_தொடரும்
Mano Red / 13.8.17