அதைப் பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். அதுதான் இன்றைக்கு எல்லோருக்குமான பேசுபொருள். அதை சாதாரணமான ஒன்றாக கடக்கவும் கூடாது. தினமும் நமக்கு அது வேண்டும். அது இல்லாமல் வாழ்க்கை இல்லையென்கிற போதை நிலையும் உருவாகிவிட்டது. பெரியவர்களுக்கு மட்டுமே அது தேவைப்படும் என்பது மாறி சிறுவர்களுக்கும் அது தேவைப்படுகிறது. அது தவறானதா, சரியானதா தெரியவில்லை. அது பற்றிய விழிப்புணர்வும் அவ்வளவாக இல்லை. வயது வித்தியாசம் இன்றி அது தேவைப்படுகிறது. வயசுக்கு மீறிய விஷயங்களையும் அது தருகிறது. 'அது ஒரு இது' என்று சொல்லுமளவுக்கு அதன் மீது ஆசையும் வெறுப்பும் இருக்கிறது.
இப்படித்தான் அன்று அது இல்லாமல் இருந்த என்னை வேற்றுகிரகவாசி போல மற்றவர்கள் பார்ப்பதை உணர முடிந்தது. எதிரில் வரும் எல்லோரிடமும் அது இருந்தது. அது இல்லாமல் அவர்கள் யாரும் வெளியேறுவதில்லை. அதனுடன் வெளியேற அவர்கள் பழகிக்கொண்டார்கள். என்னைப்போல யாராவது அது இல்லாமல் வருகிறார்களா என்று தெரிந்துகொள்ள எல்லோரையும் நெருக்கமாகக் கடந்தேன். அப்படி யாரும் அது இல்லாமல் இருப்பதாகத் தெரியவில்லை. அது இல்லாமல் உலவுவது விசித்திரமாகவே இருந்தது. இறுதியாக அது இல்லாமல் இருந்த இன்னொருவரைக் காண முடிந்தது. அவரிடம் நேராகச் சென்று 'அது இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்கும் ஆவல் இல்லையென்றாலும் அது இல்லாத அவரைப் பார்த்ததில் சந்தோசம் கிடைத்தது. அந்தச் சந்தோசம் அது தொடர்பான அந்த விஷயத்தில் இன்னொருவர் என்னைப்போல் இருக்கிறார் என்பதால் கிடைத்தது.
அது இல்லாத போது புரிந்தது, அது முழுதாக என்னை இயக்கி இருந்திருக்கிறது. அது தன்னுடைய கட்டுப்பாட்டில் என்னை வைத்திருந்திருக்கிறது. அது இல்லாததால் அன்றைய நாளின் முழு சிந்தனையும் அது பற்றியே இருந்தது. நமக்கான அதுவை யார் தொட்டாலும் கோவம் வரும். அந்த அளவுக்கு அது உறவாடிப் பழகிவிட்டது. தனிமையில் அது உடன் இருந்திருக்கிறது. அது இல்லாத தனிமை வெறுமையாக இருந்திருக்கிறது. அதனுடன் ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல்தான் குடும்பம் நடத்த முடிகிறது.
அசிங்கத்தையும் அழகையும் ஒரே பார்வையில்தான் அது பார்க்கிறது. தகுதிக்கேற்ப அது ஒவ்வொருவரிடமும் ஒரு மாதிரி இருக்கிறது. ஒருசிலரிடம் அது உறைக்குள் இருக்கிறது; ஒருசிலரிடம் அது நிர்வாணமாக இருக்கிறது; ஒருசிலரிடம் அது உயர்ந்ததாக இருக்கிறது; ஒருசிலரிடம் அது போனால் போகிறதென்று இருக்கிறது; ஒருசிலர் அதை வியாபராமாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அதை தொல்லையாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அதை எல்லாமுமாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அது இல்லாமலும் இருக்கிறார்கள்; ஒருசிலர் அது தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். ஒருசிலர் அதைக் கொடுங்கள் பார்க்கிறேன் என்று கேட்கிறாகள்; ஒருசிலர் அது என்னுடையது என்கிறார்கள்; இன்னும் சிலர் 'தொட்டுப்பார்' என்று கைகளில் கொடுக்கிறார்கள். யார் கைகளில் எப்படி இருந்தாலும் அது அதுவாகவே இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சுற்றும் நாம்தான் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். அந்த #அது = செல்போன்.
- Mano Red / 17.9.17