பொத்திப் பொத்தி வளர்த்த மகள், பொங்கும் பாசம் வைத்த மகள், தாயைப் போல் கண்ட மகள், தவிக்க விட்டு போன மகள்..!!! எவனோ ஒருவன் வேண்டுமென்று தாயுமான தகப்பன் என்னை திக்கு தெரியாத காட்டில் விட்டு தவிடாக்கி தொலைந்த மகள்..!!
ஆதி முதல் அந்தம் வரை அவதானிப்பு கொண்டு அன்பாய் வளர்த்த மகள், அகவலிமை நானிழந்து அந்தகாரம் என்னை சூழ அதர்மமாய் விட்டு போன மகள்..!!
சண்டியர் போல நான் நடந்து சொந்த பந்தம் புடை சூழ சீர்வரிசை தட்டு வைத்து சுயம்வரம் நடத்த ஆசைப்பட்டேன், சூளுரை எடுத்த தேதியிலே சூது சுமந்து நீ ஓட சீழ் பட்டு நிற்பதென்னவோ நானே..!!
ஆசையாய் அறுவடை செய்ய நினைத்த ஆயிரம் காலத்து பயிரின் மேலே ஆலங்கட்டி மழை விழுந்து ஆட்டம் போடுமென நினைக்கலையே..??
பூச்சூடி நின்ற போது, புத்தாடை கேட்ட மகள், புது வாழ்க்கை தொடங்க புருஷன் வேண்டுமென கேட்கலையே..??
சுயநலமாய் முடிவெடுத்து உன்வாழ்க்கை அமைத்த மகளே, நீ சிரிக்க நான் சிரித்து, நீ அழுக நான் அழுது உனக்காகவே வாழ்ந்த என் நட்களிடம் என்ன சொல்லி சமாளிப்பது..??
தகப்பனின் தலையெழுத்தில் தறிகெட்ட மாற்றங்கள் தான் பிள்ளை உன்னை சூழ்ந்ததென என்னை ஏமாற்றி கொள்கிறேன் நீ போய் வா மகளே...!!!