மனித சட்டை கழற்றி பிணமென்ற புத்தாடை அணிந்து சுதந்திர மகிழ்வில் சுடுகாட்டை நோக்கி வருகையில் சாவும் சந்தோசமே...!! எதற்கோ பிறந்த உடல் எதை எதையோ தேடி, வந்த வழி மறந்து வராத வழி சென்று வரும் வழி சேர்ந்து மடிகிறது..!!
சொந்த பந்தம் சூழ செழிப்பாய் வாழ்ந்த உடல், செத்துப் போவோமென தெரியாமல் செதுக்காத வாழ்வில் தொலைகிறது..!!
மண் பொன் என ஆசை பல கொண்ட உடல், ஆவி விட்டுப் பிரிகையில் ஆடை அகலுமென தெரியாமல் ஆடிக்கூடி கூத்தடிக்கிறது..!!
சாதி மத பேதமெனும் சாக்கடையில் குளித்து சாதிப்பதாய் வாழும் உடல், சாவு வரின் பிணசாதி ஆவது புரியாமல் சாதாரணமாய் மிதக்கிறது..!!
இன்முகம் காட்டாமல் இரக்கமில்லா நெஞ்சுடன் இழிவாய் பரிணமிக்கும் உடல், இறப்பு வரும்போது ஏதும் இருக்காதென புரிய மறுக்கிறது..!!
வாழ எத்தனை வழி இருந்தும் வாழவும் தெரியாமல் வாழவும் விடாமல் வாழ்ந்து மடியும் உடலே வாழ்க்கை முடிவில் நீயும் உதவாப் பிணமே..!!