இறுதியில் அதுவும்
கல்லறை வந்து சேர்ந்தது,
கருவறை துறந்து
ஒரே ஒரு வருடம் ஆன குழந்தை..!!
புன்னகையுடன்
பூங்கொத்து கொடுத்து
வரவேற்கக் காத்திருந்தான்
சுடுகாட்டு இறைவன்..!!
அவனுக்கு என்ன கவலை,...
அவன் தொழிலில்
நஷ்டம் என்பதும்
நஷ்ட ஈடு என்பதும்
மனித உயிர்கள் தானே..!!
என்ன நினைத்ததோ குழந்தை
இறவா வரம் வேண்டுமென
இறைவனைக் கேட்டது,
இளித்துக் கொண்டே
அவன் நகர்ந்து சென்றான்...!
புதிய குழந்தையின்
புல்லாங்குழல் உதடுகளில்
புயல் வீச,
கடுமையான வார்த்தையுடன்
கடவுளுக்கு கேள்வி பறந்தது ..!!
ஏன் பிறந்தேன் என
நான் அறியும் முன்னே
வெடுக்கென உயிர் பறிக்க
உத்தரவிட்டது ஏனோ..??
இது தான் பிறப்பென
தெரிந்து கொள்ளும் முன்பே
தேடி வந்து என்
உயிர் கேட்டது ஏனோ ..??
இரக்கமில்லாத உன்
சட்டையைப் பிடித்து
நியாயம் கேட்பார்கள் என
முன் அறிந்ததால் என்னவோ
இறைவா நீ சட்டை துறந்தாய்..??
மரத்துப் போன இதயத்திற்கு
மரித்துப் போகப் பயமில்லை,
கருவிலே இருள் பார்த்த எனக்கு
கல்லறை இருள் புதிதில்லை..!!
போய் வருகிறேன் என சொல்லி
குழந்தை இறைவனாகி மறைந்தது..!!