www.gamblinginsider.ca

27 July 2014

கடவுளின் தவறு...!( Mano Red)



யார் செய்த பாவமோ..? 
பசி மயக்கத்தில் 
உயிர் போகும் உயிர்...!! 
தாயின் எச்சில் சோறு தின்ன 
கொடுத்து வைக்காத 
பாவப்பட்ட வயிறு ..!! 

செயற்கை பூசிய 
உருண்டை உண்டு வாழும் 
பசியறியாத 
வேற்று கிரக வாசி போல 
இயற்கை துறந்த 
பிறப்பாக பிறந்திருக்கலாம்...!! 

இங்கே 
உணவு காணாதது 
பிறப்பின் தவறா..?? 
இல்லை 
உண்ண வழியில்லாத 
வறுமையின் தவறா..?? 
இல்லை 
கைவிட்டுப் போன 
கடவுளின் தவறா...?? 

பசியாறிய வயிறுக்கு 
எப்படி தெரியும் 
பசித்த போது உண்ட 
களிமண் ருசியும் 
காகிதச் சுவையும்..!! 
கடவுள் இல்லையே என 
அழுது புலம்பாமல், 
அடக்கி வாசிக்கிறார்கள்.!! 

அவர்கள் மட்டுமென்ன 
அதிர்ஷ்டமின்றி பிறந்தவர்களா..?? 
அரைகுறை வயிறு வேண்டி 
அடம் பிடித்தவர்களா...?? 
அவர்களுக்கு பசியை 
அறியச் செய்தது யார்..?? 

பளிங்கு கொண்டு வரைய வேண்டிய 
ஓவியங்கள் இங்கே 
பசியில் கிடக்கிறது ..,! 
பிஞ்சு கடவுள்கள் இங்கே 
கை விரித்து தவிக்கிறது..! 
உணவில்லை என்று 
இவர்கள் சொன்னால் 
வயிறு தான் கேட்குமா...?? 

எடுத்து உண்ண 
எதுவும் இல்லை என்பதை 
எல்லாருக்கும் 
எடுத்துக்ககாட்ட 
வறுமையின் இலவச விளம்பரமாக 
இளமையில் குழந்தைகள்..!!