ஒன்றிலிருந்து ஒன்பது
எட்டிலிருந்து எழுபது
இப்படி கணக்கு வழக்கில்லாமல்
ஏட்டிக்கு போட்டியாக
தாவுகிறது பாவி மனம்...!
முயலைப் பார்த்ததும்
ஓட்டமாய் ஓடுகிறது,
ஆமையை நினைத்தாலே
அடக்கமாய் அடங்கி விடுகிறது,
நிமிடத்திற்கு ஒரு முகம்
நொடிக்கு ஒரு மனம் என
குரங்காய் கூத்தடிக்கிறது...!!
நன்றாகவே யோசிக்கிறது
அதிலொன்றும் குறையில்லை,
நேற்றிரவு
சரியென ஆமோதித்த ஒன்றை
இன்றிரவு
தவறென அவமதித்து
வேறு ஒன்றிற்கு
பாய்ந்து விடுகிறது..!!
துன்பம் கண்டு
எளிதில் இறங்கினாலும்
யோசிக்காமல் மீண்டும்
அங்கேயே ஏறி நிற்கிறது,
என்ன செய்தாலும்
பாதியில் தொங்கி
ஆட்டம் போடுகிறது..!!
ஆசைப்பட்டதையெல்லாம்
பறித்துப் புடுங்க
ஆளாய்ப் பறந்தாலும்,
முடியா சூழ்நிலைகள்
சூழும் போதெல்லாம்
பிரச்சினை கண்டு
பறந்து ஓடி ஒளிகிறது..!!
ஆகவே
இன்று புரிந்தது
மனிதன் குரங்கிலிருந்து
வரவில்லை,
குரங்கு இனத்திலிருந்து
விரட்டப் பட்டிருக்கிறான்...!!