அது விசித்திரமான
தொழில் தான்,
அவளும் ஒரு சித்திரம் தான்..!!
பழக்கப்பட்ட அவளும்
கண்ணீர் சிந்தியிருப்பாள்,
கசங்கிய ரூபாய்க்குள்
கதைகள் ஆயிரம் வைத்திருப்பாள்..!!
கேடு கெட்டவர்களின் முன்
கொஞ்சம் விசேஷமானவள் அவள்..!!
அவள் தெருக்களில் சுற்றியே
வாய்ப்பைக் கவர்கிறாள்,
அவள் எங்கோ இருந்துகொண்டே
தன்னைக் கூவி விற்கிறாள்,
இன்னும் அவள் வேறு எங்கெங்கோ
காத்துக் கிடக்கிறாள்...!!
அவளை வசைபாடும்
உங்களில் யார்தான்
யோக்கியம் இங்கே...??
உடலை விற்பதும்
ஒரு கலைதான் என்பதோடு
சிரமமானதும் கூட...
ஆச்சரியம் தருகிறது
அவள் எப்படி கவர்கிறாள்..!!
நன்றாக இருக்கிறது
நாசமாப்போன நீதி,நியாயங்கள்....
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கற்பு பொதுவென்று
கற்பித்தான் மீசைக்காரன்,
அது நியாயமெனில்
அவள் மட்டுமா முறை தவறியவள்..??
நல்லவனே நீ கொஞ்சம்
வாயை மூடு,
சத்தியம் செய்யலாம்
அவளாக வந்திருக்க மாட்டாள்..!!
யாரோ ஒருவன் அவளை
காதல் ஆசை அது இது என
மோசம் செய்திருப்பான்,
யாரோ ஒருவன் அவளை
கடத்திச் சென்று
ஏமாற்றி விற்று இருப்பான்..!!
ருத்திராட்ச பூனைகளுக்கு
எங்கே தெரியும்..?
அவள் இளமையானவளும் அல்ல,
வயதானவளும் அல்ல,
ஆனால் வெளிப்படையானவள்...
அவள் மரக்கிளையும் அல்ல,
மரத்தண்டும் அல்ல,
ஆனால் மரத்துப் போனவள்...
எப்படிச் சொல்லி முடிப்பது..?
தேம்பித் தேம்பி அழுது
சாயம் போன அவளின்
கண்ணீரின் நாட்களை
முற்றுப் புள்ளி வைக்கத் தெரியாமலே
முடிக்கப் போகிறேன்,
அவளாவது தொடர்கதையாகாமல்
விரைவில் முடியட்டும்,
அவளுக்கும்
மெல்லிய இதயம் இருக்குமே...!!