www.gamblinginsider.ca

04 January 2015

வீட்டின் மரணம்...!! -Mano Red



காலத்தின் புழுதியை 
சுவர்களில் அப்பிக்கொண்டு
நெடுநாட்களாக
ஊரை விட்டுத் தள்ளி 
வாழ்ந்து கொண்டிருக்கிறது 
அந்த வீடு...!!

கடந்த காலத்தில்
ஒரு ஓரமாய் அங்கே 
குழந்தை அழுதிருக்கலாம்,
உறவுச் சண்டைகள் 
அரங்கேறியிருக்கலாம்,
அதெல்லாம் அந்த 
வயதான தூண்களுக்குத் தான் தெரியும்..!!

நாட்கள் செல்லச் செல்ல
துரத்தப்பட்ட நாய்களின் 
கூடாரமாகவும்,
நடைபாதையின் நிழலாகவும்,
அதற்குப் பின்
அவசரத்துக்கு ஒதுங்கும் 
மறைவிடமாகவும் மாறி 
மங்கி விட்டது 
ஒரு தலைமுறையின் அழகு வீடு..!!

கரித்துண்டுகளில்
கிறுக்கப்பட்ட 
ஊருக்கு சொல்லாத 
காதல்களை எல்லாம்  
ஊமையாய் சுமந்து,
அழைப்பிதழில் சேருவார்கள் என்று
இன்னும் நம்புகிறது அந்த வீடு..!

ஊரை அடையாளம் சொல்ல 
வழிகாட்டியாய் அவ்வீடு 
மாறிப்போயிருந்தாலும்,
ஆளாளுக்கு
ஒரு கதை சொல்லியதில்
அந்த வீடு 
பேய்களின் உறைவிடமானது..!!

இப்போதெல்லாம் 
அந்த வீட்டின் பக்கம்
ஒரு ஈ,காக்கா கூட காணவில்லை,
துக்கம் விசாரிக்க 
ஒரு சருகு கூட 
உள்ளே செல்வதில்லை,
காற்றும் திரும்பி வருகிறது
அங்கு வரவேற்கவும் யாருமில்லை..!!

உயிர்களின் மரணம் போன்றே
வீட்டின் மரணமும் 
துயரமாகத்தான் இருக்கிறது,
துயரப்பட்டு என்ன செய்ய 
புரிந்து வாழ பழகத்தான் 
மனம் மறுக்கிறது...!!