www.gamblinginsider.ca

02 January 2015

பசி மொழி...!! - Mano Red

பசிதான் மானுடத்தின்
சரளமான பொது மொழி,
இது வெற்று வயிறு சுமக்கும்
பாறை சூழ் வெட்டவெளி...!

பசி... சோழ நாட்டு விவசாயியை
சோறில்லாமல்
தவிக்க விடுகிறது,
காடு மேட்டில் வாழ்ந்தவனை
கண்ணீர் விட வைத்தே
தற்கொலைக்கு தூண்டுகிறது..!

பசி..
காலத்தையும்,கோலத்தையும்
அரித்துக் கொண்டு ,
அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே
ஊர்ந்து கொண்டே இருக்கும்
நிதர்சனக் கரைப்பான்...!!

மானுடத்தின் பொது மொழி
பசி என்றால்,
பசியின் பொதுமொழி
கண்ணீர் தான்..!!
ஒவ்வொரு உயிரும் பசியை
உலகுக்கு அறிவித்தே பிறக்கிறது..!!

குழந்தையின் பசியை உணர்ந்து
தூக்கம் விழிக்கும்
தாய்மையின் கருணையில்
தொடங்குகிறது
ஒவ்வொருக்கான உலகமும்,
ஆனாலும் பிறர் பசியை
பலர் உணர மறுக்கிறோம்...?

உலகச் சிறப்பு பெற்ற
புகைப்படமாம் அது..!
பசியில் சாகக் கிடக்கும்
குழந்தையைத் தின்ன
காத்துக் கிடக்கும் கழுகு..!
இதில் பசி என்பது
இருவருக்குமான சாபமாகும்..!!

உலகின் ஆதி இனம்....
விதைத்து,அறுத்து,
உழைத்துத் தின்னும்
கலாச்சாரம் உருவாக்கிய இனத்தை,
முள்வேலி முகாம்களிலும்,
வதை கூடங்களிலும்,
நிலமற்ற துயர பரப்புகளிலும்
அலையவைத்த பசி கொடுமையை
எந்த சாபம் தண்டிக்கப்போகிறது..?