அந்தரங்கமாக சில சலனங்களை
எனக்குள் உருவாக்கியிருந்தான் அவன்!
மிகவும் பரிச்சயமான சாயலில்
போதிய உணவின்றி
பால்யத்தைக் கழிக்கும்
குழந்தை போலத் தெரிந்தான்.
எனக்கு நானே சமாதானம் சொல்லி
அவன் நினைவுகளிடமிருந்து
நழுவ முற்பட்டபோதுதான்
வேகமாக உள்ளிழுத்தான்.
அவன் துயரம் கண்டு
ஒவ்வொரு நாளும்
தொலைவிலேயே நிற்கும்
ரயிலோசை பற்றித் தெரியாமல்,
வனாந்திரத்தில்
காற்றின் ஓசையைக் கிழித்தபடி வரும்
ரயிலைப் பார்க்க வேண்டுமென்கிற
அவனுடைய அதிகபட்ச ஆசையை
என்னிடம் பகிர்ந்தான்.
ஈரக்களிமண்
காலில் ஒட்டியது போல
அவனுடைய பகல் இரவுகளால்
இன்னும் வசீகரித்தான்.
வறுமையின் கொடிய நிழல்
ஆசைகளை இருளுக்குள் அமிழ்த்தினாலும்
நிராதரவான வாழ்வும் மரணமும்
பாராமுக அன்பின் கண்ணீர்த்துளிகளுக்காக
இன்னும் இன்னும்
ஏங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.