காதின் வெளியே
நீட்டிக்கொண்டிருந்த மூளையை
கூர் தீட்டி
உண்மைக்குப் புறம்பாக
கொக்கரிக்கத் தயாரானது
ஆடம்பர வாய்மை.
கொலையோ, கொள்ளையோ
கற்பழிப்போ, கருக்கலைப்போ
எதுவாக இருப்பினும்
ஏகப்பட்ட பொய்களை
ஏழ்மைக்கு எதிராக
நா முழுக்கப் பூசி,
கருவாட்டுப் பானையை
எட்டி உதைக்கும்
ருத்ராட்சப் பூனை போல
சட்டங்களை மிதித்து
நீதி தேவதையின் கண் கீறி
தராசு தட்டை விலை பேசியது
ஆள்பவனின் பணம்.
“ஐயா நான் நிரபராதிங்க”
என்று கூண்டிற்குள் நின்று
குரல் கொடுததுக் குறுக்கிட்டவனை
“ஆர்டர்... ஆர்டர்...” என்ற மறுப்புடன்
“நீதிமன்றத்தை அவமதித்து
நீதிக்கு கலங்கமாக எதிர்த்துப் பேசிய
கடும் குற்றத்திற்காக
இரட்டை ஆயுள் தண்டனையுடன்
மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது”
என்று பேனா முள் உடைத்து வெளியேறியது
அன்றைக்கான நீதி.