யாருடையதெனத் தெரியவில்லை
அனுமதியின்றிப் பிரிக்கவும் மனமில்லை.
கவனிக்க ஆளில்லாமலும்
தனியே கிடப்பதாலும் வந்த
ஆக்கிரமிப்பு எண்ணம் இது.
எல்லாப் பக்கமும்
அடைக்கப்பட்டிருந்தும்
அதிலிருந்த சிறு கிழிசல்
புன்னகையுடன் வரவேற்றது.
கையில் எடுப்பதற்கு
மெல்லிய எதிர்ப்பையும்
‘திற’ என்பதற்கான
அனுமதி பாவனையையும்
ஒருசேர மாறி மாறி வழங்கியது.
புகுதலுக்கான சந்தர்ப்பத்திற்கு
ஏங்கிக் கிடந்ததால்
காற்றடிக்கும் நேரத்தில்
உட்புக முடிந்தது.
அவசரம் எதுவுமின்றி
உள் சொருகியிருந்த
மயில் தோகையை அகற்றி
எழுத்துகளை முகர்ந்து
வரிவரியாய் அனுபவித்து
இறகால் நீவுவதுபோல
பக்கங்களைப் புரட்டி
அள்ளிப் பருகி ருசித்தபோது
அந்தப் புத்தகம் வாய் திறந்து
எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்லி
வார்த்தைகளை விரித்தது.
‘உன்னைத் திருட்டுத்தனமாக வாசிக்கிறேன்’ என்று
நான் சொன்னதுதான் தாமதம்
அத்தனை கதவுகளையும்
படாரென அடைத்துக்கொண்டது.
இனி எந்தப் புத்தகமும்
எனக்காகத் திறக்காதென்று
காற்றில் கரைந்து
நான் எரிந்து கொண்டிருந்தபோது
புத்தகங்களின் சாம்பல்நெடி
மூக்கில் ஏறியது.