வானம் தன் குங்குமம் அழித்து
கரு மையைச் சூடிக்கொள்ள
ஆரம்பித்த நேரம்.
மெழுகுவர்த்திச் சுடர் சூழ
விருந்துண்டு கழித்த
நாட்களை எண்ணியபடி
பூங்காவின் கல் மேசையில்
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தேன்.
இன்னும் அவள் வந்திருக்கவில்லை
காதல் தவ வாழ்வில்
காத்திருப்பது ஒரு புள்ளிதானே!
என்ன சொல்வாளோ தெரியவில்லை
கடந்த காதல் நாட்களின் கடுமை
அவள் நெஞ்சில்
புரையோடிருக்கும்
இதோ அவள் வருகிறாள்
வெப்பமான தென்றல் வீசுகிறது
இரவின் குளுமையில்
கந்தகம் தகிக்கிறது
நட்சத்திரங்கள் சுடுகின்றன
பச்சைப் புற்கள் எரிந்து எரிந்து அணைகின்றன
தீ கக்கும் பாறைப் பற்களில்
சொற்களை அணிந்து
அக்னிக் குழம்பென நெருங்கி வருகிறாள்
எதை ஊற்றி அணைப்பதெனத் தெரியாமல்
கட்டி அணைக்க முடிவு செய்து
அவளை நெருங்கும்வேளை
கசப்பின் சுவையை
சொற்களால் செய்த வாள் கொண்டு
காதுகளுக்கு உணர்த்தி
காதல் முறிவுக்கு ஆதாரமாக
பூமிப் பந்தை வலமிருந்து
இடமாகச் சுற்றிவிட்டாள்.
எதுவும் புரியாத பூமியும் நானும்
ஒருசேரச் சுழன்று நின்றபோது
அவளைத் தவிர எல்லாம்
அருகில் இருந்தன.