www.gamblinginsider.ca

28 April 2017

கடைசியில் ஒரு நியாயம் - Mano Red


கொலைகாரக் கண்களை
மெல்லிறகால் பொத்தி
உபன்யாச நூல்களைப் பார்க்கச் செய்தோம்
காற்றில் கலைந்த பக்கங்கள்
கிழியத் தொடங்கியதால்
கண்களைக் கருங்கல்லால் குத்தி
ரத்தத்தால் கழுவினோம்.
பாவம் செய்த கைகளில்
சிலுவை மாலை கொடுத்து
ஸ்தோத்திரத்துடன் உருட்டச் சொன்னோம்
வெப்பம் தாங்காத மணிகள்
கழன்று ஓடுவதைப் பார்த்ததால்
அவ் விரல்களை நறுக்கி
தீர்த்தத்தில் புனிதமாக்கினோம்.
வசவு பாடிய வாயை
சூஃபி இசையால் நிரப்பினோம்
ஏக இறைவனின் அழுகுரல்
எதிரொலியாகத் திரும்பியதால்
நாக்கைப் பிடுங்கி எறிந்துவிட்டு
கள்ளிச் செடியின் விதை தூவி
ஊசி நூலால் வாயைத் தைத்து
அவனை அருள் பெறச் செய்தோம்.
அழுக்குகள் அனைத்தும்
ஒருசேர நீங்கி
ஒளி பொருந்திய ஆன்மாவாக
அவனை மாற்றிவிட்டோமென்ற
களிகூர் தருணத்தில் வெளியேறி
வன்மத்துடன் வேகமாகத் துடித்த
அவனது இதயத்தை
நான்காகப் பிரித்து
ஆளுக்கொரு சட்டைப்பையில் போட்டு
அமைதியாக வந்துவிட்டோம்.