எடுத்துவைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
கருப்பும் சிவப்பும் பழுப்பும் கலந்த
கால்தடங்கள்.
பார்வையை ஈனும்
கருவிழிகள் இரண்டும்
நெளிந்து வளைந்தோடி
பார்க்குமிடமெல்லாம் துரத்துகின்றன.
உடல் முழுக்க வெள்ளை ரத்தங்கள்
உயிர் முழுக்க குறுகுறுப்புகள்
பெட்டிகளிலும் அலமாரிகளிலும்
கால் சுருக்கி கை மடக்கி
வசிக்கப் பழகுகிறேன்
அசுத்தங்கள் அனைத்தையும்
அள்ளி அப்பியபடி
சுவரில் ஏறுகிறேன்
ஆக்சிஜனை வடிகட்டி
பிரத்யேகக் குழாயின்வழி
மூக்கிலேற்றினாலும்
ஆறு நரம்புக் கால்களுடன்
ஏதோவொன்று
நாசி துளைத்து மூளை அருகில்
அமர்ந்துகொள்கிறது.
பக்கத்து வீட்டுப் பூச்சிமருந்தின்
வேதியியல் நெடி
நெஞ்சு துளைக்கிறது.
சோற்றுப் பருக்கையை
பிசையும் விரல்களில்
கண்ணாடி கலந்த இறக்கை
முளைத்துப் படபடக்கிறது.
இப்படி ஒவ்வொரு கணமும்
தலையை வெட்டி எடுத்து
இரண்டு வாரங்கள்
முண்டமாய் வாழ்வதுபோல
தீர்க்கதரிசனம் பெறுகிறேன்.