எழுதுகோல்(பேனா) காதலன்...!!!
பேனா..!!
எழுதப்படிக்க தொடங்கிய போதே
ஆறாம் விரலாய் முளைத்து விடும்
உயிருள்ள தோழன்..!!
பேனா..!!
எழுத்துக்களையும் வரிகளையும்
தின்று தின்று கொழுப்பில்லாமல்
மெலிந்தே இருக்கும்..
பேனா..!!
எழுதுபவனை முந்தாமல்
விரல் நுனி உத்தரவுக்கு
காத்துக்கிடந்தே எழுத துடிக்கும்..
பேனா..!!
எழுத்தாளன் யோசிக்கும் போதும்
தனியே கிடத்தி போகும் போதும்
தூங்காது விழித்திருக்கும்..
பேனா..!!
கவிதை எழுதுகையில்
கவிஞனுக்கு தெரியாமல்
வெட்கத்தில் சிவக்கும்..
பேனா..!!
எழுதி முடித்த பின்பு
எழுத்தாளன் தன்னை நினைவு கூற
ரத்தமென மை சிந்தும்..
பேனா..!!
பேசாத வார்த்தைக்கு உயிரூட்ட
தன் உயிர் நோவதை மறந்து
ஒற்றை காலில் தவமேற்கும்..
பேனா..!!
எழுதியவன் தூங்கும் போது
எழுத்துக்களை திருட தெரியாத
தன்மானமுள்ளவன்..
பேனா..!!
காகிதத்தை காதலியாக்க
எழுத்துக்கள் மூலம் தூதனுப்பும்
மன்மத வித்தகன்..
பேனா..!!
எழுதியவனை தவிர,
எழுத்துக்களை சாக விடாது
காக்கும் காவலன்..
பேனா..!!
சட்டைப்பையில் ஒட்டிக்கொண்டு
இதய துடிப்பின் ஓசை கேட்கும்
குட்டிப்பையன்..
பேனா..!!
எழுதியவன் மறந்தாலும்
எழுத்துக்கள் மூலம் தன்னை காட்டும்
கதாநாயகன்..
பேனா..!!
எழுதுபவன் சோர்வடைந்தால்
அடுத்த வரிகளை யோசிக்கும்
கற்பனை கவிஞன்..
பேனா..!!
கூர் ஆயுதமேந்தினாலும்
எதிரிகளை வரிகளில் சாய்க்கும்
சாணக்கியன்..!!