நட்ட நடு
வீதியின் பாதையில்,
கட்டாமல்
பாதியில் நின்றுபோன
தனித்துவிடப்பட்ட
வெட்டிச்
சுமைதாங்கி
அந்தக் குட்டிச்
சுவர்..!!
வயது வித்தியாச
பேதமில்லை,
காலநேரக்
கவலையில்லை,
சாதி மதம்
தேவையில்லை,
காலாட்டி
திமிராய் அமர்ந்தாலும்
கால் வாரிவிடாத
நம்பிக்கை மேடை..!!
தகப்பன்
திட்டிய
தண்டச் சோறுகளையும்,
எதற்கும்
உதவாதவனையும்
தரிசாய்ப்
போனவனையும்,
தனக்குள்
ஈர்த்த தனிக் கட்சி..!!
மொட்டை வெயிலுக்கும்,
சட்டையில்லா
குளிருக்கும்,
பேசத்தடை
சொன்னதில்லை,
ஊரே கழுவி
ஊற்றினாலும்
பேச்சின்
நீளம் குறைத்தில்லை..!!
அந்த குட்டிச்
சுவருக்கு தன்னைப் பற்றி
அதிகம் தெரிந்த்திருக்க
வாய்ப்பில்லை,
அரசியலின்
ஆராய்ச்சிக் கூடம்,
அனுபவங்களின்
அரைகுறை உருவம்
அரும்புக்
காதலின் வழிகாட்டி என
அச்சுவர்
குட்டிச் சுவராய் மட்டும் தெரியவில்லை..!!