
27 February 2013
23 February 2013
உயிரில்லா ஓவியமாய் நான்..!!!

நிழலே நிழலே நீ சொல்லு,
நான் இருப்பது நிஜமா பொய்யா..!!
நிஜமென நீ சொல்லிவிட்டால்
அதை பொய்யாக்கி விடுவேன்..!!
உனை என்னோடு நான் புதைத்தேனே,
என்னுள் உனை மறைத்தேனே,
நீ என்னை விட்டு எங்கோ சென்றாய்
போதும் போதும் நான் பாவமாய் நிற்கிறேன்..!!
காற்றின் வழி தென்றலாக வந்தாள்,
மூச்சின் வழி என்னுயிர் கலந்தாள்,
திரும்பி போகையிலே கையில்
என்னுயிர் எடுத்து போனாளே...!!
சிரித்து கொண்டே நான் அனுப்பி வைத்தேன்
அவள் சிதறி போன உயிர் எடுத்து வைத்தேன்..!!
தேவதை அவள் கனவினை தந்தாள்,
கனவை தந்து கற்பனை தின்றாள்,
நிஜத்தினில் வராமல்
நினைவுகளை அழித்தாள்...!!
அழிந்த நினைவை அவள் திருடி சென்றாள்,
திருடிய தடத்தையும் மறைத்து விட்டாள்..!!
உயிர் திருடிய அவளால்,
உயிரில்லா ஓவியமாய் நான்..!!!
Labels:
காதல் கவிதைகள்
22 February 2013
யார் அவள்..???

யாரோ எவளோ எங்கே என்று
தேடி பார்க்காத நாளில்லை...!!
மெய்யோ பொய்யோ கனவா நனவா
என்று வாடி போகாத நிமிடமில்லை..!!
ஆனால் உந்தன் நினைவுகள் மட்டும்
என்னை உரசி பார்க்குதடி...!!!
வானவில்லின் வண்ணம்
உன்னை தேடவில்லையா...???
தூது போன தென்றல்
உன்னை காணவில்லையா...??
சொல்லி அனுப்பிய வார்த்தை
உன்னை சேரவில்லையா..???
சொல்லிவிடடி பதில் சொல்லிவிடடி
உந்தன் சொல்லில் எந்தன் உயிர்
உன்னை சேருமே...!!??
கண்கள் இருந்தும் உன்னை
காணாத கண்கள் வேண்டாமே.!!
உயிர் இருந்தும் உன்னை
சேராத உயிர் வேண்டாமே...!!!
நினைவிருந்தும் உன்னை
எண்ணாத நினைவு வேண்டாமே..!!
சொல்லிவிடடி பதில் சொல்லிவிடடி
உந்தன் சொல்லில் எந்தன் உயிர்
உன்னை சேருமே....!!??
Labels:
காதல் கவிதைகள்
21 February 2013
இதை நான் சொன்னா நம்பமாட்டீங்க....!!!!

சொன்னா நம்பமாட்டீங்க....!!!!
பள்ளியில் படிக்கும் போது நான் தான்
முதல் மதிப்பெண் எடுப்பேன்,
என்று சொல்லியவர்களே அதிகம்..!!
எதை பற்றி கேட்டாலும் தெரியாத போதிலும்,
தெரிந்தது போலவே காட்டிக்கொண்டு
சுற்றும் மேதாவிகளே அதிகம்..!!
அழகான எந்த பெண்ணை பார்த்தாலும்,
அவளை எங்கோ பார்த்திருக்கிறேன்,
என்று சொல்லும் மன்மதன்களே அதிகம்...!!
எனக்கு காதல் பிடிக்கவே பிடிக்காது,
என்று சொல்லி காதலிக்க யாருமே இல்லை என
ஏங்கி தவிப்பவர்களே அதிகம்...!!!
கனவில் மட்டுமே சொகுசாய் வாழ்ந்து,
நானும் ஒருநாள் தொழிலதிபர் ஆவேன்,
என்று தினமும் சொல்பவர்களே அதிகம்..!!!
கடவுளை நம்ப மாட்டேன் என்று சொல்லி,
பயம் வந்தவுடன் கடவுளை அழைக்கும்,
வீர தீரர்களே அதிகம்...!!!
அறிவுரை மட்டுமே சொல்ல தெரிந்து,
அதன்படி நடக்க தெரியாமல் அலையும்,
நடமாடும் நண்பர்களே அதிகம்...!!
இதை நான் சொன்னா நம்பமாட்டீங்க....!!!!
Labels:
சமுதாய கவிதைகள்
20 February 2013
உற்று நோக்கினால் ஆயிரம் அர்த்தங்கள்...!!!

போட்டியில் தோற்பதற்கும்,
விட்டுகொடுப்பதற்கும்,
அர்த்தங்கள் வேறு...!!
நீரில் நீந்துவதற்கும்,
மிதப்பதற்கும்,
அர்த்தங்கள் வேறு...!!
கல்வியை படிப்பதற்கும்,
கற்றுகொள்வதற்கும்,
அர்த்தங்கள் வேறு...!!
பேச்சில் புகழ்வதற்கும்,
பாராட்டுவதற்கும்,
அர்த்தங்கள் வேறு...!!
மனதில் பயத்திற்கும்,
பணிவுக்கும்,
அர்த்தங்கள் வேறு...!!
செய்யும் தப்பிற்கும்,
தவறுக்கும்,
அர்த்தங்கள் வேறு..!!
காணும் கற்பனைகளுக்கும்,
கனவுகளுக்கும்,
அர்த்தங்கள் வேறு..!!
காட்டும் அன்பிற்கும்,
பாசத்திற்கும்,
அர்த்தங்கள் வேறு..!!!
கடவுளே இல்லை என்பதற்கும்,
நம்ப மறுத்தலுக்கும்,
அர்த்தங்கள் வேறே..!!
அழகை ரசிப்பதற்கும்,
உற்று நோக்குவதற்கும்
ஆயிரம் அர்த்தங்கள்..!!!
18 February 2013
கிழிந்த இதயம்...!!!

கடுப்பேறிய அவள் வார்த்தைகள்,
கலங்கி போன என் கண்கள்,
நடுநிசி நாய்களும் நாக்கு வறண்டு
சுருண்டு விட்ட நேரம்,
விசும்பி விசும்பி நான் அழுததில்
வரைந்த என் காதல் கோலம்
கண்ணீர் பட்டு கரைந்து போனது..!!
நிகழ்காலமும் இறந்தகாலமாகிட,
என் உயிரிருந்தும் இறந்தவனாகி,
கிழிந்த இதய ஓட்டையை
அவள் நினைவை கொண்டே பூசி மெழுகி,
மீண்டும் பூப்பறிக்க செல்கிறேன்
என் கல்லறையில் எனக்கு நானே
மலர் தூவி மரியாதை செய்வதற்கு...!!!
16 February 2013
பயமறியா கற்பனை குதிரைகள்....!!!

என் மூளையில் விளக்கெரிய
தொடங்கிய நேரம்,
கையில் பேனாவும்,
பையில் காகிதமும் கொண்டு,
யாருமில்லா காடு நோக்கி
வீறு நடை போட்டேன்..
கவிதைக்கு தலைவன் தனிமை,
என்று யாரோ சொல்ல கேட்டு
வீடு விட்டு காடு சென்றேன்..!!
காதலிக்க யாரும் இன்றி
தவித்து நின்ற தனி மரம் கண்டு,
என் கவிதை கடையை அங்கே விரித்து
மரத்திற்கு ஆறுதல் தந்தேன்..!!
முதல் வரி எழுத முனைந்த போது
மரம் ஒரு இலை உதிர்த்தது..!!
என்னை எழுத ஊக்குவிப்பதாய்
நினைத்து கொண்டே எழுதினேன்..
சற்று நேரம் போகவே,
இலை உதிர்வு அதிகமானது..???
நான் எழுத இலையும் உதிர்ந்தது..
நான் நிறுத்த மரமும் நிறுத்தியது..!!
பயம் என்னை ஆட்கொள்ள,
எழுந்து மெல்ல நடை போட்டு
வேகமாய் வீடு வந்த பின் புரிந்தது..!!
அது உதிர்த்தது இலையல்ல,
எனக்காக எழுதி அனுப்பிய
காதலின் கவி வரிகள் என்று..!!
அப்போது தெளிந்தேன்
என் கற்பனை குதிரைகள்
இன்னும் கட்டவிழ்க்க படவில்லை என்று ...!!!
Labels:
கற்பனை கவிதைகள்
15 February 2013
மெய்யில்லாத உயிர் எழுத்துக்கள்(குழந்தை தொழிலாளர்கள்)...???

துள்ளி குதித்து பள்ளி செல்ல இயலாத
என் தம்பி தங்கைகளை கவனியுங்கள்....!!!!
செம்மண் குழைத்து செங்குருதியிட்டு,
வெப்ப சூட்டில் வெந்து
அக்னிபறவைகளாக பறக்கும்,
செங்கல்சூளை செங்காந்தள் பூக்கள்...!!
கை மருதாணி காயும் முன்பே,
கைரேகை மறைய மறைய
பத்துபாத்திரம் தேய்க்கும்,
பத்தரை மாதத்து தங்கங்கள்...!!
பள்ளி அறியா வயதில்,
துள்ளி குதித்து விளையாடாமல்
கல் சுமந்து உருகி போய்கொண்டிருக்கும்
சின்னஞ்சிறு பிஞ்சு கவிதைகள்...!!
கரி பிடித்துப்போன கைகள்,
கந்தக மலர்களின் வாசம்,
தீயை தினமும் வெறுத்து ரசிக்கும்,
பட்டாசு தோட்டத்து பன்னிர்பூக்கள்...!!!
இன்னும் சொல்லமுடியாத எத்தனையோ
இந்தியாவின் வருங்கால தூண்கள்
தூக்கம் தொலைத்து பசி போக்க
மெய்யில்லாத உயிர் எழுத்துக்களாக
வெம்பி நிற்கின்றன...!!??
மெய்யில்லாத உயிர் எழுத்துக்களை
உயிர்மெய் ஆக்குவோம்...!!!!
Labels:
சமுதாய கவிதைகள்
13 February 2013
அமிலம் கலந்த காதல்....!!!!!

காதல்,
கண்ணில் தொடங்கும்
கல்லறையின் பாதை..!!!
காதல்,
துன்பம் மறைக்கும்
இன்பத்தின் போதை...!!!
காதல்,
பேராசை காட்டும்
இச்சையின் மாயை..!!!
காதல்,
நட்பை கெடுக்கும்
உடைந்த கண்ணாடி பேழை..!!!
காதல்,
உணர்ச்சி புகுத்தி
உயிரை பிடுங்கும் கோழை..!!!
காதல்,
நம்ப வைத்து ஏமாற்றும்
சூனியக்காரியின் வேலை..!!!
காதல்,
புரிந்தவர்களுக்கு சொர்க்கத்தையும்,
திரிந்தவர்களுக்கு நரகத்தையும்,
மாற்றி மாற்றி காட்டும்
நவீன கால எமன்...!!!
காதல்,
பணிய மறுத்தால்
அமிலம் வீசும் தீவிரவாத புயல்..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
12 February 2013
காதலும் காதல் சார்ந்த இடமும்....!!!!!

அழுகை கண்டு,
ஆனந்தம் கொண்டு,
அள்ளி அணைத்து கொள்ளும்
தாய் சேய் காதல்...!!!
முகம் பார்த்து,
குரலை வைத்து,
உண்மை நலம் விசாரிக்கும்
அம்மா மகன் காதல்...!!!!
கை பிடித்து நடை பழகி,
தவறினால் திருத்தி,
தோளோடு தோள் சாய்க்கும்,
அப்பா மகன் காதல்...!!!
அழுதால் ஆறுதலும்,
எப்போதும் விளையாடவும்,
கேட்டவுடன் விட்டுகொடுக்கும்
அக்கா தம்பி காதல்...!!!
திட்டினால் சிரிக்கவும்,
அடித்தால் ரசிக்கவும்,
இறப்பிலும் கூட வரும்
நண்பன் காதல்...!!!
கதை சொல்லவும்,
தூங்க வைக்கவும்,
தன்னலம் மறந்து சிரிக்கும்,
தாத்தா பேரன் காதல்...!!!
யாருக்காகவோ காத்திருப்பதும்,
காத்திருந்து ஏமாறுவதும்,
பார்காமலே பரவசமும் தரும்,
தலைவன் தொண்டன் காதல்..!!!
அழகை அலட்சியமாக்கி,
கண்களில் கவிதை புகுத்தி,
கூடு விட்டு கூடு பாயும்,
காதலன் காதலி காதல்...!!
!
Labels:
காதல் கவிதைகள்
08 February 2013
பெயர்ச்சொல் தேடல்...!!!
http://eluthu.com/kavithai/106090.html
உன் பெயர் எழுதப்பட்ட
காகிதமும் உயிர் பெற்று
உன்னை பார்க்க வரும்,
அழகான பெயர் அழகிகளுக்கு
மட்டுமே என்ற உவமை
பொய்த்து போனதால்...!!!
உன்னை அழைப்பதற்கு
உன் பெயர் தேவையென்றால்,
நான் அழைக்கும் பெயர் எல்லாம்
நீயாக இருப்பாயா...!!!
யாரிடமும் கேட்கலாம்
இவள் பெயர் என்னவென்று....??
இவள் மட்டும் சொல்லமாட்டாள்,
தன் பெயர் இது தானென்று..!!
உன் பெயரை தேடித்தேடி
என் பெயர் மறந்து,
யார் என்னை அழைத்தாலும்
திரும்பாமல் செல்கிறேன்
நீ மட்டும் அழைக்க வேண்டுமென்று..!!!
Labels:
காதல் கவிதைகள்
கையேந்த விடாத கையேந்தி உணவகங்கள்...!!!

ஓடியோடி ஓய்ந்து போன
நடுத்தர வாசிகளின்
நட்சத்திர உணவகம்...!!!
யாரிடமும் கையேந்த
அவசியமில்லாமலும்,
அனுமதிக்கவும் விடாத
சின்ன அட்சய பாத்திரம்...!!!
இல்லையென்று வந்தோரிடம்,
இல்லையென்று சொல்லும்
அடுக்குமாடி குடியிருப்பின்
ஓரத்தில் நின்று கொண்டு
வாரி வாரி வழங்கும்
கர்ண பரம்பரையின் ரதம்...!!
தினம் தினம் புது நண்பர்களை
அறிமுகம் செய்யும்
சமூக வலைதளமும்
சட்டென தடுமாறி போகும்
உண்ண வரும் எங்களுடன்
அவர்களின் நட்பை பார்த்து...!!!
தாயின் நிலாச்சோறு கூட
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்,
இவர்களின் அன்பிலும்
அரவணைப்பிலும்..!!
நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு,
கை தொடாமலும்,பல் படாமலும்
உண்ணும் நாகரீக உணவு,
இவர்கள் புன்னகையுடன்
பரிமாறும் ஒற்றை பருக்கைக்கு
என்றும் அடிமையே....!!
ஆண்டவன் இல்லை என்று
அடித்து கூறியவர்கள்,
ஒருமுறை இவர்களிடம்
உணவு உண்ணுங்கள்..!!
உங்கள் மனம் சொல்லும்
உயிருள்ள ஆண்டவன் யாரென்று..!!!
Labels:
சமுதாய கவிதைகள்
05 February 2013
தேவதைகளின் தேவதை...!!!

தேவதைகள் கூட்டம்...!!
வரிசை நீண்டது
வானிலிருந்து அவள் வீடு வரை...!!!
அவள் பொய் சொன்னதை பார்த்தால்
உண்மைகளும் ஏங்கும்...!!
தாங்களும் அவளால்
பொய்யாகி போவதற்கு..!!!
அவள் நடந்து போனால் ,
அதிசயங்களும் அசந்து போகும்..!!
கால் முளைத்த அதிசயம்
இவள் தானென்று...!!!
அவள் தான் என்
தேவதைகளின் தேவதை...!!!
Labels:
காதல் கவிதைகள்
02 February 2013
மாய கண்ணாடி...!!!

சிரிப்பை நடிப்பாக்கி,
நிமிட சந்தோசம் தரும்
உன் வீட்டு மாய கண்ணாடியாக
இருக்க நான் விரும்பவில்லை...!!
Labels:
காதல் கவிதைகள்
கிறுக்கி....!!!

கிறுக்கி என அவளை
செல்லமாக திட்டிய போதெல்லாம்,
என்னை நானே கிறுக்கனாக்கி கொள்கிறேன்
அவளை புரிந்து கொள்வதற்கு...!!
Labels:
காதல் கவிதைகள்
01 February 2013
சத்தமில்லாத முத்தம்...!!!

அவளிடம் கேட்டேன்,
வெறும் சத்தம் மட்டுமே தந்தாள்
என் கன்னத்தில் அறைந்துவிட்டு...!!!
Labels:
காதல் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)