www.gamblinginsider.ca

30 November 2014

கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red



இம்மாதிரியான
மழை நாளில்
பழையதைத் தேடி
பழகிக் கொள்ள தோன்றியது..!!
அப்படி தேடிப் போனது
முன்னொரு நாள் வாழ்ந்த
மூத்தவர்களின் பழைய அறை..!!

தயங்கி தயங்கி
நூலாம்படை வலைக்குள்
நூதனமாய் நுழைந்த போது,
சிக்கல் உலகில்
சிலந்திகளின் வாழ்க்கை
சுகமாகவே இருந்தது..!!

கை வைத்த இடமெல்லாம்
கைரேகை பதியுமளவு
காலச்சுவடுகளின் தூசுகள்,
தூசு தட்டியதில் தெரிந்தது
தூரத்தில் வாழ்ந்த
தாத்தா பாட்டிகளின்
தங்கம் பூசிய முகமும்,
அங்கம் பேசிய அழகும்...!!

இரும்பு பெட்டியின்
இரும்பு வாயை
தற்செயலாய் திறந்த போது,
மூக்குப்பொடி டப்பா முதல்
உடைந்த மூக்குத்தி வரை
அலட்டிக் கொள்ளாமல்
அத்தனை கதை சொன்னது..!!

மாமிச வீச்சமடிக்கும்
மாடி அறை,
அதிகார தோரணையில்
ஆணியில் தொங்கிய
ஆதி விலங்குகளின் முகம்..!!
அன்பின் பெருவெளியை
அங்கே சமன்படுத்த
வார்த்தை எதுவும்
எனக்கு சிக்கவில்லை..!!

எதேச்சையாக
படிக்க நேர்ந்தது,
செல்லரித்த காகிதத்தில்
புல்லரிக்க செய்யும்
காதல் கவிதை..!
கொஞ்சம் பழைய கவிதை தான்
இருந்தாலும் அவர்களின்
இளமை காதலை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்த
என்னை
மன்னித்து விடட்டும் அவர்கள்..!!