www.gamblinginsider.ca

22 August 2015

அகலிகையும், ஐஸ்கிரீமும்..!!! - Mano Red




கையெல்லாம் வழிந்த
முக்கோண ஐஸ்கிரீமை,
பரபரப்பாக
மூக்கை நுழைத்து
தின்று கொண்டிருந்த போது
அவள் என்னை நோக்கினாள்..!!

ருசியில் சுழலும்
என் நாக்கைப் போல்
என்னைப் பார்த்து நின்ற
அவளும் பாவனை செய்தாள்.
அதில் தெரிந்தது
அவளின் ஏக்கமும்  ஏமாற்றமும் ..

அவள் ஏக்கத்தினை
திசை திருப்ப
முகம் திருப்பினேன்,
இருந்தாலும்
அவள் பார்க்கிறாளா இல்லையா
என்றறியத் திரும்புகையில்
இன்னும் ஏமாற்றத்துடன் அவள்..

அவளொன்றும் யாரோ அல்ல,
ரோட்டின் ஓரத்தில்
மூட்டை முடிச்சுடன்
விலாசம் தொலைத்து
கன்னத்தில் கை வைத்து
கவலைப்படும் குடும்பத்தின்
கடைக்குட்டி சிறுமி அவள் .!!

எதையும் யோசிக்காமல்
இன்று ஐஸ்கிரீம் வாங்கித் தந்தால்
நாளை அவள் அடம் பிடிக்கலாம்,
ஒருவேளை தந்தை
ரோஷக்காரனாக இருந்து
நான் கேட்டதற்காக
அவளை அடிக்கலாம்,
'தெருவுல எவன் கொடுத்தாலும்
வாங்கக் கூடாது’ என
அவளின் அம்மா சொல்லலாம்.!

இப்படி
ஐஸ்கிரீம் உருக உருக
எல்லாக் கோணங்களிலும்
யோசித்து நான் நிற்க,
அங்கு வந்த பிச்சைக்காரனுக்கு
கையிலிருந்த ஒரு ரூபாயை
யோசிக்காமல் போட்டுவிட்டு
திரும்பி ஓடி வந்தாள் அவள்...!

அதுவரை
கல்லாய்ப் போயிருந்த
என் அகலிகை மனம்,
அவளின் கால் மிதிக்காக
காத்திருந்தது போல
ஐஸ்கிரீம் வாங்க 
அனிச்சையாய் ஓடியது..!!

12 August 2015

பேயாய் அலைகிறான்..!! -Mano Red



உயிர் எடுப்பது போல 
உணர்வுகளை தீண்டுகிறான்,
உடல் தொட்டு 
உரசிவிட்டு 
உவமைகளில் பேசுகிறான்..!!

நெரிசல் பேருந்தில்
நெருங்கி வருகிறான்,
இடைஞ்சலில்
இடமில்லாத போதும்
இடைசொருகி 
பெண்ணிடை தொடுகிறான்..!!

உக்கிரமாய்
பார்வை வீசி,
வக்கிரமாய்
வார்த்தை பேசுகிறான், 
எச்சில் ஒழுக 
கொச்சையாய் நின்று 
தெருவோரத்தில் சிரிக்கிறான்..!!

இரட்டை அர்த்தத்தில்
விரட்டி அடிக்கிறான்,
இருட்டில் சுற்றும்
மிரட்டல் ஆந்தையாய்
காமக்கண்ணை உருட்டுகிறான்..!!

பெண்வாசம் நுகர
பேயாய் அலைகிறான்,
தாய் தங்கையும் பெண்தானே
தரம் தாழ்த்த மறுக்கும்
தாரமும் பெண்தானே -இதை
பொதுவிடத்தில் உணர மறுக்கிறான்..!!

05 August 2015

மொட்டைமாடி ..!! -Mano Red



மொட்டைமாடிக்கும்
ஒட்டுக் கேட்கத் தெரியும் என்பதாலே
கிசுகிசுப்புகள் கேட்டதும்
பொறாமையில் கதவை அசைத்து  
பயங்காட்டி எச்சரிக்கிறது..! 

மொட்டைமாடியில்  
பூந்தொட்டிக்கு பின்னால்  
கொடுத்த முத்தங்கள் எல்லாம் 
இன்னும் பூக்களாகவே அலைகிறது..!! 

மொட்டைமாடியில் காயும்  
துணிகளுக்கு தெரியும், 
காய்ந்து கிடக்கும் காதலின் ஆசை 
எவ்வளவு என்று ..!!

நிர்வாணமாய் 
வானம் பார்த்து கிடக்கும்
மொட்டைமாடிகளுக்கும்
மானமுண்டு என்பதற்காகவே 
தினமும் காலை சுடுகின்றது..!!

மொட்டைமாடிகளின் வயதை
எந்த முடியை வைத்து சொல்வது..??
சின்ன முடிகள் முதல்
பெரிய முடிகள் வரை
எல்லோருக்கும் பொதுவான தூரத்தில்...!!

நட்சத்திங்கள் எண்ணுகிறோம்
என்ற பொய்க்கணக்கில்
மொட்டைமாடி முழுதும் 
திருட்டு முத்தம் 
நிரம்பி வழிகிறது..!!

சுற்றுப்புறம் அறியாத
அகத்தின் ஆசைக்காக,
வெயிலடிக்கும்
மொட்டைமாடியும் ஒரு 
காதல் நூலகமே..!

02 August 2015

பேசா மனிதம்...!!-Mano Red

அதென்ன அவசரமோ...?
எல்லோரும் போலவே
முண்டியடித்து முன்னால் நின்று
பாட்டிலை வாங்கி
பிசகாமல் திருகி
முட்டக் குடித்து பின் நகர்ந்தான்..!!
*
மதுவாசம் சும்மா இல்லை
ஆவியில் புகுந்து
வெய்யில் காற்றில்
வேர்வையில் கலந்து
மிச்சமிருந்த உயிருடன் சேர்த்து
வெளியான போது
காற்றும் கிறங்கியிருக்கும்..!!
*
ஒற்றை ஆள்
தனியாக வரும் போதே
தள்ளி ஓடும் இந்த மனிதம்,
தள்ளாடி வரும் அவனை
தன்பக்கம் இழுக்கவா போகிறது..??
வழிவிடுகிறேன் என்று
வழிதவறியது மனிதாபிமானம்...!!
*
மிச்ச சொச்சமிருந்த மானமும்
ஆடையுடன் சேர்ந்து அவிழ
அனைவருக்குமே அவன்
முகம் சுழிக்கும் அசிங்கமானான்..!!
ஆனால்
அங்கிருந்த அனைவரும்
மானமுள்ளவர்களா தெரியாது..?!
*
ரோட்டில் படுத்தது முதல்
அம்சமாய் வாந்தி எடுத்து
நாசம் செய்தது வரை
அவனுக்கு நினைவில்லை
ஆனாலும் ஊருக்கு நினைவிருக்கும்,.!
தவழ்ந்து தவழ்ந்து
வீடு வந்து சேர்ந்தாலும்
சோகமும்,புலம்பலும்,வலியும்
குறைந்தபாடில்லை...!!
*
கொஞ்சம் பேசாம
வாய மூடிட்டு இருந்தா என்ன..?
விழப்போற எழவா
கொறஞ்சிடப் போகுது..!!
திட்டிக்கொண்டே போனார்
அவன் அப்பா..!!
*
அவருக்கு தெரியும்
பிணவறையில் தினம்
பிணங்களுடன்
பிழைப்பு நடத்தும் அவனுக்கு
எழவுக்கு மட்டும் குறையே
இருந்ததில்லை என்று..!!

பேசா மனிதம்...!!-Mano Red

அதென்ன அவசரமோ...?
எல்லோரும் போலவே
முண்டியடித்து முன்னால் நின்று
பாட்டிலை வாங்கி
பிசகாமல் திருகி
முட்டக் குடித்து பின் நகர்ந்தான்..!!
*
மதுவாசம் சும்மா இல்லை
ஆவியில் புகுந்து
வெய்யில் காற்றில்
வேர்வையில் கலந்து
மிச்சமிருந்த உயிருடன் சேர்த்து
வெளியான போது
காற்றும் கிறங்கியிருக்கும்..!!
*
ஒற்றை ஆள்
தனியாக வரும் போதே
தள்ளி ஓடும் இந்த மனிதம்,
தள்ளாடி வரும் அவனை
தன்பக்கம் இழுக்கவா போகிறது..??
வழிவிடுகிறேன் என்று
வழிதவறியது மனிதாபிமானம்...!!
*
மிச்ச சொச்சமிருந்த மானமும்
ஆடையுடன் சேர்ந்து அவிழ
அனைவருக்குமே அவன்
முகம் சுழிக்கும் அசிங்கமானான்..!!
ஆனால்
அங்கிருந்த அனைவரும்
மானமுள்ளவர்களா தெரியாது..?!
*
ரோட்டில் படுத்தது முதல்
அம்சமாய் வாந்தி எடுத்து
நாசம் செய்தது வரை
அவனுக்கு நினைவில்லை
ஆனாலும் ஊருக்கு நினைவிருக்கும்,.!
தவழ்ந்து தவழ்ந்து
வீடு வந்து சேர்ந்தாலும்
சோகமும்,புலம்பலும்,வலியும்
குறைந்தபாடில்லை...!!
*
கொஞ்சம் பேசாம
வாய மூடிட்டு இருந்தா என்ன..?
விழப்போற எழவா
கொறஞ்சிடப் போகுது..!!
திட்டிக்கொண்டே போனார்
அவன் அப்பா..!!
*
அவருக்கு தெரியும்
பிணவறையில் தினம்
பிணங்களுடன்
பிழைப்பு நடத்தும் அவனுக்கு
எழவுக்கு மட்டும் குறையே
இருந்ததில்லை என்று..!!