www.gamblinginsider.ca

24 July 2015

தாமரை இலை ஆசைகள்...!! -Mano Red

ஆசை போட்ட சாலையில்
ஆரம்பித்த மனிதப் பயணம்
அவர்களின் பையிலில்லை
ஆசையின் கையிலிருக்கிறது..!!

ஆசையின் மையப்புள்ளியை
ஓசையின்றி சுற்றியே
பாழாய்ப்போன மனிதனின்
வாழ்க்கை ஓடுகிறது..!!

வேண்டும் என்கிற எண்ணம்
மீண்டும் விரிவடைகிறதே தவிர,
சாகும் வரை இதுவே
போதுமென மனம் சொல்வதில்லை..!!

ஒரு ரூபாய் கிடைத்தால்
நூறு கிடைக்கும் வரை
ஆசை சும்மா விடுவதில்லை
தரையைப் பார்த்து நடக்க வைக்கிறது.!!

மண்ணாசைக்கு கொலையும்,
பொன்னாசைக்கு பழியும்,
பெண்ணாசைக்கு பாபமும்,
சுமப்பது தான் மிச்சம்...!!

சகலமும் துறந்து
யாசிக்கும் துறவி ஆகவேண்டாம்,
இருப்பது போதுமென
யோசிக்கும் மனிதப் பிறவி போதும்..!!

சலனமும் சபலமும்
தாமரை இலைத் தண்ணீர் போல்
கொஞ்சம் இருந்து
நஞ்சு ஆகாதவரை நல்லதே..!

எதிர்பார்ப்பைக் குறைத்தால்
எதிர்வருவதெல்லாம் நிறையே,
மொத்தத்தில் ஆசை
மொழிகளற்ற தீய பாஷை...!!

14 July 2015

மீந்துபோன உறவுகள்..!! -Mano Red

படுத்தவுடன்
படுக்கையை பகிர்ந்தது
நெருடலுடன் ஒரு கனவு. !!

காண்பதற்கு ஏதுமில்லாத
காட்சிப் பிழையுடன்,
கல்லெறிந்த குளம் போல
கனவின் முகம் காட்டாமல்
கண்ணாமூச்சி ஆடியது மனம்...!!

உருண்டு புரண்டதில்
உருவான கனவு
உள்ளத்தை உழுது விதைத்து,
உறவுகளின் உலகத்தில்
ஊர்ந்து வர தொடங்கியது..!!

கையில் பூ இருந்தாலும்
மூக்கை ஜன்னலில் நீட்டி
வேறு மணம் தேடும்
கையறு மனம் போல்,
உறவென எல்லாம் இருந்தும்
சருகென தவிக்க விட்டதாய்
கனவின் ஜீவன் பேசியது..!!

மீந்து போன
பழைய உணவாய்
சொந்த பந்தங்கள்,
உண்ணவும் முடியவில்லை
உதறவும் வழியில்லை என
கனவின் பதற்றத்துக்கு
உடல் வியர்த்து சிலிர்த்தது..!!

அந்தரத்தில் பறந்தாலும்
பம்பரத்தில் சுழன்றாலும்
உறவின் சூழலில்
இதுதான் நிச்சயமென
விதி சொன்ன பின்பு
வருந்தி என்ன செய்ய
விரும்பி தான் ஏற்போமென
கனவு மீள் பதிவிட்டது..!!

விழிப்பு தட்டியதும்
கண்ட கனவு
துண்டு துண்டானதாய் நினைவு,
யோசித்து பயனில்லை என
தண்ணீர் குடித்த போது
கண்ணீர் வந்தது
கைகழுவிய உறவுகள் நினைத்து...!!

08 July 2015

பதினாறாம் நாள்...!! -Mano Red

அந்த ஊர்க் காக்காய்கள்
எல்லாத்துக்கும்
கிடா மீசைக்காரர்
இவரை நல்லாவே
அடையாளம் தெரியும்...!!

அனுபவித்த சோதனைக்கெல்லாம்
சனிபகவான் காரணமென
யாரோ சொல்ல ,
அன்று முதல்
காக்காய்களை வெறுத்து
விரட்ட ஆரம்பித்தவர்
இன்னும் நிறுத்தவில்லை..!!

காக்காய்களின் அறிவுக்கும்
மீசை முகம் எட்டியிருந்தது,
அவர் எட்டிப் பார்த்தால் போதும்
எட்டி ஓடுமளவு
பழகி பிழைத்திருந்தது..!!

மீசைக்காரருடைய
அம்மா செத்து
பதினாறாம் நாள் விசேசம்.
காக்காய்க்குச் சோறு வைக்க
நடந்து வரும் போதே
நிலைமை புரிந்தது ஊருக்கு..!!

கா காவென காக்காய் போல
கத்தினார்கள் பயனில்லை,
சனியன் என்று திட்டிக் கொண்டே
திரும்பிவிட்டார்,
காக்காய்களுக்கும் பசிதான்
என்றாலும்
சோத்துப் பக்கம் முகம் திருப்பவில்லை..!!

மனிதனுக்கு என்ன புரியும்..?
காக்காய்கள்
சோறு எடுத்தால் தானே
பந்தி நடக்கும்
வயிறும் நிறையும்.
நேரமாக நேரமாக
அன்னாந்தே பார்த்திருந்தனர்..!!

யோசனையுடன்
வேறு இடத்தில் சோறு வைக்க
வேறு ஆள் வந்தது,
தெறிந்து வந்து
சோறு உண்டது காக்காய்கள்,
அப்பாடா என்று பெருமூச்சு விட்ட
உறவினர்களின் நடுவே
பேச்சு மூச்சின்றி அமர்ந்திருந்தார்
அந்த மீசைக்காரர்..!