www.gamblinginsider.ca

27 July 2014

ஆசை அறுபது நாள்...!!(Mano Red)




எதேச்சையாக 
எங்கோ கேட்டது 
எங்கோ பார்த்தது
என எல்லாமே
எதிர்பார்ப்பதற்கு மட்டுமே ...!!

நிகழ்காலத்தின்
நிதானமான
நிகழ்வுகளெல்லாம்
நிச்சயமாக
நிர்வாணமாகி விடுகிறது...!!

ஆசைகள் எல்லாம்
அநியாயத்திற்கு
அலை பாயும் போது,
எண்ணங்கள் எல்லாம்
ஏமாறத் துடிக்கிறது ..!!

மானத்துடன்
மரியாதை போனாலும்
மனம் கொண்ட ஆசைகள்
தினம் தினம்
வானம் ஏறவே நினைக்கிறது ..!!

இருக்கின்ற ஒன்று
இறக்கும் போது தான்,
பறந்து செல்வதை
பறிப்பது போல
பகல் கனவு வருகிறது...!!

பேராசை சுமக்கும்
பெரு நோயென்பது
அறுபது நாளில்
ஆயுளை இழந்து
அனாதையாகி விடுகிறது...!!

சுடுகாட்டு இறைவன்..!!( Mano Red)



இறுதியில் அதுவும் 
கல்லறை வந்து சேர்ந்தது, 
கருவறை துறந்து 
ஒரே ஒரு வருடம் ஆன குழந்தை..!! 

புன்னகையுடன் 
பூங்கொத்து கொடுத்து 
வரவேற்கக் காத்திருந்தான் 
சுடுகாட்டு இறைவன்..!! 

அவனுக்கு என்ன கவலை,... 
அவன் தொழிலில் 
நஷ்டம் என்பதும் 
நஷ்ட ஈடு என்பதும் 
மனித உயிர்கள் தானே..!! 

என்ன நினைத்ததோ குழந்தை 
இறவா வரம் வேண்டுமென 
இறைவனைக் கேட்டது, 
இளித்துக் கொண்டே 
அவன் நகர்ந்து சென்றான்...! 

புதிய குழந்தையின் 
புல்லாங்குழல் உதடுகளில் 
புயல் வீச, 
கடுமையான வார்த்தையுடன் 
கடவுளுக்கு கேள்வி பறந்தது ..!! 

ஏன் பிறந்தேன் என 
நான் அறியும் முன்னே 
வெடுக்கென உயிர் பறிக்க 
உத்தரவிட்டது ஏனோ..?? 

இது தான் பிறப்பென 
தெரிந்து கொள்ளும் முன்பே 
தேடி வந்து என் 
உயிர் கேட்டது ஏனோ ..?? 

இரக்கமில்லாத உன் 
சட்டையைப் பிடித்து 
நியாயம் கேட்பார்கள் என 
முன் அறிந்ததால் என்னவோ 
இறைவா நீ சட்டை துறந்தாய்..?? 

மரத்துப் போன இதயத்திற்கு 
மரித்துப் போகப் பயமில்லை, 
கருவிலே இருள் பார்த்த எனக்கு 
கல்லறை இருள் புதிதில்லை..!! 
போய் வருகிறேன் என சொல்லி 
குழந்தை இறைவனாகி மறைந்தது..!!

கள்ள மௌனம்...!!( Mano Red)



யாருமில்லாத 
தனிமை என்பது 
மனிதன் வாழ முடியாத 
வேற்று கிரகம்..!! 
ஆனால் அதுதான் 
தனிமையை உட்கிரகிக்கும் 
புது உலகம் ...!! 

தனிமை 
இருளாக இருந்தாலும், 
இதமான வெளிச்சத்தை 
தனித்திருப்பவருக்கு தந்து 
தவமிருக்கிற அனுபவத்தை 
தாராளமாக சொல்லும் ..!! 

தனிமை 
தன்னைத் தானே 
அதிகாரம் செய்யும், 
தள்ளி நின்ற 
தவறுகளை எல்லாம் 
தனக்காக வம்புக்கு இழுக்கும்..!! 

தனிமை 
அதிசிறந்த புத்திசாலி தான்..! 
ஆனாலும் 
அடி முட்டாளாக்க 
அவ்வளவு சுதந்திரத்துடன் 
ராஜ தந்திரமாக நடிக்கும்..!! 

தனிமையை கொல்வதற்கு 
எத்தனை இனிமை வந்தாலும் 
அத்தனையையும் 
கொன்று விட்டு 
தனிமை தனியாகவே நிற்கும்..!! 

தனிமை 
யாரையும் தேடுவதில்லை, 
இருந்தாலும் 
தனிமையை நிரப்ப 
யாராவது வருவார்களா என 
தேடிக் கொண்டே இருக்கும்.!! 

தனிமை 
வாய்விட்டு சிரிக்காது, 
கண்ணீர் விட்டு அழாது, 
வெற்றிட சுவற்றை 
வெறுத்து பார்க்க வைத்து 
உம்மென்று இருக்கும் 
கள்ள மௌனமாக...!!!

கடவுளின் தவறு...!( Mano Red)



யார் செய்த பாவமோ..? 
பசி மயக்கத்தில் 
உயிர் போகும் உயிர்...!! 
தாயின் எச்சில் சோறு தின்ன 
கொடுத்து வைக்காத 
பாவப்பட்ட வயிறு ..!! 

செயற்கை பூசிய 
உருண்டை உண்டு வாழும் 
பசியறியாத 
வேற்று கிரக வாசி போல 
இயற்கை துறந்த 
பிறப்பாக பிறந்திருக்கலாம்...!! 

இங்கே 
உணவு காணாதது 
பிறப்பின் தவறா..?? 
இல்லை 
உண்ண வழியில்லாத 
வறுமையின் தவறா..?? 
இல்லை 
கைவிட்டுப் போன 
கடவுளின் தவறா...?? 

பசியாறிய வயிறுக்கு 
எப்படி தெரியும் 
பசித்த போது உண்ட 
களிமண் ருசியும் 
காகிதச் சுவையும்..!! 
கடவுள் இல்லையே என 
அழுது புலம்பாமல், 
அடக்கி வாசிக்கிறார்கள்.!! 

அவர்கள் மட்டுமென்ன 
அதிர்ஷ்டமின்றி பிறந்தவர்களா..?? 
அரைகுறை வயிறு வேண்டி 
அடம் பிடித்தவர்களா...?? 
அவர்களுக்கு பசியை 
அறியச் செய்தது யார்..?? 

பளிங்கு கொண்டு வரைய வேண்டிய 
ஓவியங்கள் இங்கே 
பசியில் கிடக்கிறது ..,! 
பிஞ்சு கடவுள்கள் இங்கே 
கை விரித்து தவிக்கிறது..! 
உணவில்லை என்று 
இவர்கள் சொன்னால் 
வயிறு தான் கேட்குமா...?? 

எடுத்து உண்ண 
எதுவும் இல்லை என்பதை 
எல்லாருக்கும் 
எடுத்துக்ககாட்ட 
வறுமையின் இலவச விளம்பரமாக 
இளமையில் குழந்தைகள்..!!

எச்சமில்லா எண்ணங்கள்...!( Mano Red)



எப்போதும் தப்பிக்க 
எதோ ஒரு காரணம் 
எல்லோருக்கும் தேவை..!! 

எதிர் பாராமல் 
எதேச்சையாக 
என்ன நடந்தாலும் 
எதாவது சொல்லி 
எட்டிப் போகிறோம்..!! 

எப்படியெல்லாம் 
எதிர்ப்பு வருமென 
எச்சரிக்கை செய்தாலும் 
எல்லைகள் கடக்கவே 
எத்தனிக்கிறோம்..!! 

எதிர்காலம் தீர்மானிக்க 
எதுவும் வேண்டாம்..!! 
எப்போதும் 
எதுவும் எதிர்பாராத 
எச்சமில்லாத 
எண்ணங்கள் போதும் ..!!

விவரமான ஆளு...!!(Mano Red)

ஓங்கி அந்த குரல்
ஒலிக்க தொடங்கியதும்
எங்கு பார்த்தாலும் அமைதி
காரணம்
அந்த அரசியல் பேச்சு..!!

துரும்பு அசைந்ததா என
தெரியவில்லை
ஆனால்
எறும்பு சத்தம் கேட்குமளவு
ஏமாறப் போகும் அமைதி..!!

முதலில் ஒன்று சொல்லி
அதையே மாற்றி சொல்வது,
பின் அதையே மாற்றி செய்வது
என இதெல்லாம்
அரசியல் கூத்துக்கு சகஜம்..!!

ஒரு சிறு கூட்டம்,
பெரும்பகுதி மக்கள் திரளை
ஆண்டாண்டு காலமாக
சுரண்டி தின்று
கொழுத்து வருகிறது...!!

நமக்கு வாய்த்தது
இப்படித் தான்,
தலைமை போட்ட
பாதையில் தான்
நடக்க வேண்டுமென்ற
கட்டாயம் இங்கே..!

கருத்துப் பேச்சு தான்
திருத்தும் ஆயுதமெனக்
கண்டு உணர்ந்தவன்,
பொடி வைத்து பேசி
மேடையில் கட்டிப் போடுகிறான்..,!!

ஆக மொத்தத்தில்
அடித்தட்டு மக்களின்
கை தட்டலில் வளர்ந்தவன்,
பணம் செய்ய துடித்து
பணி செய்ய மறக்கிறான்..!!

வைரங்களையும்,
தங்கங்களையும்,
தங்கள் மேல் பதிக்க தெரிந்த
விவரமான ஆள் தான்
மக்களை ஆள
மக்களால் தகுதி பெறுகிறான்..!!

வாடி....போடி ..!! (Mano Red)

தயவு செஞ்சு
அவள பத்தி
யாரும் கேக்க வேணாம்,
என்ன சொல்லி
வர்ணிச்சாலும்
எதுமே சரியா வராது...!!

வெக்கம் மானம்
சூடு சொரணை
இதெல்லாம் இருக்கா தெரியல,
ஆனா அவள பத்தி பேசுனா
வெக்கம் மட்டும் வருது..!!

நல்ல கவித
எத வச்சு வரும் புரியல,
ஆனா அவள பாத்தா
கவித மட்டுமில்ல
அந்தக் காவியம்
அப்புறம் அந்த ஓவியம் கூட
நல்லா வரும்னு நெனைக்குறேன்..!!

அவ என்ன சொல்றா
என்ன பேசுறா
எதுமே புரியாது,
அது நமக்கும் தேவயில்ல,
ஆனா அவ என்ன சொன்னாலும்
எதோ ஒன்னு புதுசா இருக்கும்..!!

எல்லாரும் சொல்ற மாதிரி
பொய் கதயில மட்டும் தான்
தேவத வரும்,
நானும் தேவத கத சொல்லி
அவள ஏன
பொய்யாக்கணும்..!!

முக்கியமா ஒன்னு
சொல்ல மறந்தாச்சு,
வாடின்னு சொன்னா
வரவும் யாரும் இல்ல ,
போடின்னு சொன்னா
போகவும் யாரும் இங்க இல்ல..!!

பிழைக்கத் தெரிந்தவர்கள்...!!(Mano Red)

வாய்ப்புக்காக
காத்திருக்கும் காலங்களில்
காலை வாறிவிட்டு
கரை சேரத் துடிக்கும்
நண்டுக் கூட்டங்கள் அவர்கள்...!!

நன்றாக
உற்று நோக்கினால்
நயவஞ்சக நோய் தாக்கிய
சல்லடை இதயம்
கொண்டவர்கள் அவர்கள்...!

எட்டிப் பார்க்கும்
நேரத்தில் ,
எட்டி மிதித்து
தட்டிப் பறிக்கும்
எட்டப்பனை மிஞ்சிய
எம தூதுவர்கள் அவர்கள்..!!

எறும்பு செல்லும்
பாதையிலும்
குழி தோண்ட நினைக்கும்
குள்ள நரியின்
குடும்ப உறுப்பினர்கள்
அவர்கள் ...!!

உருவான திறமைகளை
உறிஞ்சி எடுத்து
உயிர் வளர்க்கும்
உடல் திரண்ட
நஞ்சுப் பூச்சிகள் அவர்கள்..!!

அந்த அவர்கள் தான்
அடுத்தவன் தலையில்
மிளகாய் அரைத்து
உழைப்பைத் திருடி,
தொழில் நடத்தும்
பிழைக்க தெரிந்தவர்கள்...!!