www.gamblinginsider.ca

30 September 2014

குப்பை கோபுரம்..!! - Mano Red

முன் எப்போதும் விட
சோகம் ததும்ப
வெம்பி இருந்தான் அவன்,
காரணம் கேட்டால்
குப்பையில்
பாலித்தீன் பைகள்
ரொம்ப கிடக்கிறதாம்....

சமூக அநீதி கண்டு
அநியாயத்திற்கு
வெகுண்டு எழுகிறான் அவன்,
சுத்தம் செய்யும்
அவனுக்கு தெரியும்
நல்ல குப்பையும்,
குப்பை மனிதர்களையும்....!

ஜனநாயகத்தின்
குப்பை சுவாசத்தை
குடித்து வாழ்ந்த அவனுக்கு
அழுக்கு என்பது
அழகிய ஆடை தான் ..!!

கிழிந்த காகிதங்கள்
சேகரிக்கும் அவனுக்கு,
ஆதிக்க சக்திகள்
அனைத்தையும்
கிழித்தெறிகிற
ஆண்மை இருப்பதில்
அத்தனை ஆச்சரியம் ஏதுமில்லை...!!

அடிமைளுக்கு முன்னால்
உயிர் பிடித்து
தலை நிமிர்ந்து எழுந்து
பிழைக்க தெரிந்த அவனுக்கு,
வாழ்வுரிமையை
தக்கவைக்க போராடும்
அவசியம் இல்லை...!!

நச்சென்று
அவன் சொன்னான்,
இறைவனின் கோபுரம்
பாவம் செய்த
மனிதர்களுக்கு மட்டும் தான்,
பாவப்பட்ட எங்களுக்கோ
குப்பை தான் கோபுரம்
பாலித்தீன் காகிதங்களே
அழிக்க முடியாத கடவுள்..!!