www.gamblinginsider.ca

31 October 2014

நிறைகுறைகள்...!! - Mano Red

மனிதர்களை விட
மரங்கள் அதிகம்
இருக்கும் இடம்
நிம்மதியாகவும்,
உண்மையாகவும்
இருக்கிறது ...!!

உலக அளவில்
எல்லா மனிதர்களுக்கும்
ஒரு முறையாவது
நம்பிக்கை துரோகம்
செய்திருக்கும்
ஒரே ஒரு ஆள்...
கடவுள் மட்டுமே ...!!

பெண்களுக்கு
கைவந்த கலை இது,
பக்கத்து வீட்டிலிருக்கும்
அநாவசிய பொருளை
அத்தியாவசிய பொருளாக
மாற்றி நினைக்க....

அம்மாக்களுக்கு
பிடித்தமான
பொழுதுபோக்கு
"கவலைப் படுவது"...
குழந்தை முதல்
குடும்பம் வரை நீள்கிறது இது...!!

விலைவாசி....!
பெயர் சரியாகவே
பொருந்தி விடுகிறது,
பல நேரங்களில்
விலையை வாசிக்க
மட்டுமே முடிகிறது..!!

இப்படி
எப்படியோ
பாதி வாழ்க்கையை
கடந்து விட்டேன்,
மீதியையேனும் சரியாக
வாழ்ந்து விட வேண்டும்..!!

29 October 2014

வயசுக் கோளாறு..!! - Mano Red

கள்ளமில்லா
வயது தான் இது,
இருந்தாலும்
மெல்ல மெல்ல
கள்ளத்தனம் ஒன்று
மனதினுள்ளே குடியேறும் ..!!

பேருந்துப் பயணத்தில்
உடுத்திய
வெள்ளை சட்டையாய்,
பட்டும் படாமல்
அழுக்கேறி நிற்கும்
இளமையில் மனம்..!!

அர்த்தமில்லாமல்
அவன் பார்க்கும்
ஒவ்வொரு பார்வையும்,
இரட்டை அர்த்தங்களாகவே
காட்சிப் பொருளாகும்..!!

தெரிந்து தொடுதலுக்கும்,
தெரியாமல் படுதலுக்கும்,
வித்தியாசம் அறிவான் அவன்,
இருந்தாலும்
தெரிந்து தொடுதலை
தெரியாமல் படுதல் போல
செய்யத் துடிப்பான்..!!

வயசுக் கோளாறினால்
சூடு சொரணை
இல்லாதவனுக்கு கூட
உணர்ச்சி நரம்புகள்
சூடாகி கொதிக்கும்,
உள்ளுக்குள்ளே
கேவலமான
ஒரு உலகம் பிறக்கும்..!!

எல்லாம் தெரிந்தாலும்
பாலியல் பற்றி
பகுத்து அறிந்து கொள்ளாத
பருவ வயது இது,
வெளிச்சம் தேட
மின்சாரத்தில்
கை வைக்கும்
சமாச்சாரம் அது...!!

26 October 2014

நிர்வாணம்...!! -Mano Red



யாருமில்லா தனிமையில் 
அவள் 
நிர்வாணமாகி இருந்தாள்,
யாருமே இல்லை 
அது நிர்வாணமும் இல்லை....
இப்படியாக முடிகிறது 
ஒரு கவிதை..!!

உடை நீங்குவது தான்
நிர்வாணமெனில்,
மானமென்னும் 
உடை நீங்கி
உயிர் போவதற்கு
என்ன அர்த்தம்..??
 
நிர்வாணமென்பது
அசிங்கத்தில் இல்லை,
அடிபணிந்து
அசிங்கப்பட்டு நிற்கையில்
நிர்வாண நிலை புரியும்..!!

உடுக்கை இழந்தவனின்
கையறுநிலையில் 
இடுக்கண் கலைந்தால் 
நிர்வாணம் மூடி விடுமா..?
இலைமறை காய்
மறைவெல்லாம்
இன்னலில் தென்படுமா..??

அவமானத்தில் 
அவலமாய் நிற்கும் நிலையே
நிர்வாணத்தில் உச்சம்,
இது 
மிச்சமிருக்கும் உயிரை 
துச்சமாய் தின்னும்..!

மனம் நிர்வாணமெனில் 
ஆசைகள் களைந்து 
ஆன்மாவாக அலையலாம்,
மானம் நிர்வாணமெனில்
ஆடைகள் கிழிந்து 
நடை பிணமாகலாம்..!!

நிர்வாண நிலை
யாருக்கும் புரிவதில்லை,
ஆடை துறந்த
துறவிக்கும்,
ஆடை கிழிந்த
இழி பிறவிக்கும்
தெரிந்த புரிந்த நிலை அது..!!

19 October 2014

மீண்டும் படிக்கவும்....!! -Mano Red




ஓட்டமும் 
நடையுமாக 
நனைந்து கொண்டே 
நடுவீதியில் 
நடுங்கி வந்தபோது 
நீரில் கிடந்தது அது..!!

அது என்னவாக இருக்கும்.?
அதில் என்ன இருக்கும்.,?
கசங்கி கலங்கிய நிலையில்
மழைநீரிலும் 
மனம் திறந்து 
கண்ணீர் விட துடித்தது அது..!!

என்னிடம் எதோ சொல்ல 
ஏங்கித் தவித்தது,
எதனாலோ என்னவோ 
எனக்குள்ளும் ஒரு ஆசை 
என்ன அது சொல்ல போகிறது..??

மீண்டும் அதை 
மழை நனைக்காதவாறு 
நான் நனைய துணிந்து
அதை கையோடு 
அணைத்துக் கொண்டேன்..!!

உள்ளங்கை சூட்டில் 
உண்மை சொன்னது அது,
காதலியின் கையினால்
கசக்கப்பட்டவன்,
கடமை முடிந்ததும் 
கழிக்கப்பட்டவன் நான் என்றது..!!

பிரித்துப் படித்ததில்
தெரிந்தது,
புரியாமல்
பிரிந்தவளுக்கு வந்த 
காதல் கடிதம் அது..!!
மழைநீர் வடிந்து முடிகையில்
கடிதத்தின்
கண்ணீர் மழை புரிந்தது..!!

16 October 2014

வேடிக்கை பாருங்கள்..!! - Mano Red

**நீங்கள் சிரியுங்கள்**
நீங்கள் அங்கே
சிரித்து குலாவிக்
கொண்டிருக்கும் போது தான் ,
அனாதை சிறுவர்கள்
அம்மாவைத் தேடி
அழுது கொண்டிருப்பார்கள்..!!

**நீங்கள் உண்ணுங்கள்**
நீங்கள் வயிறுமுட்ட
உண்டு முடித்த நேரம் தான்,
பச்சை குழந்தையொன்று
பாலுக்காக ஏங்கியே
வெறும் வயிற்றில்
இறந்திருந்திருக்கும்..!

**நீங்கள் நடங்கள்**
நீங்கள் நேற்று
நடந்து சென்ற
இந்த வீதியின் இருளில் தான்,
பள்ளி மாணவி ஒருத்தி
பலவந்தமாக கடத்தப்பட்டிருப்பாள்..!!

**நீங்கள் காதலியுங்கள்**
நீங்கள் உலகம் மறக்க
காதல் கொண்டு
கொஞ்சிய நிமிடங்களில் தான்,
கொடூரன் ஒருவனால்
பெண்ணின் முகம்
எரி அமிலத்தில் வெந்திருக்கும்..!!

**நீங்கள் வேண்டுங்கள்**
நீங்கள் உங்களுக்காக
இறைவனிடம்
பிச்சையெடுத்த
அந்த நிமிடங்களில் தான்,
கர்ப்பிணி பெண் ஒருத்தி
கருவை கலைக்க
கடவுளை அழைத்திருப்பாள்...!!

யார் எப்படி போனாலென்ன..?
நீங்கள்
நீங்களாகவே இருங்கள்,
உங்களுக்காக மட்டுமே
வாழுங்கள்,
யாருக்காகவோ இரக்கப்பட்டால்
உங்களுக்கென்ன லாபம்..?
வேடிக்கை பாருங்கள்..!!

14 October 2014

அறிவு இல்லையோ...?? - Mano Red

ஒரு கதவு மூடினால்
இன்னொரு கதவு
திறக்குமாம். !!
நாம் நினைத்ததை
கதவுகளே கேக்காத போது
காலம் எப்படி கேக்கும். ??

ஒரு சூடாவது
வைத்துப் பார்த்தால் தான்
'நல்ல மாடு' என்ற
பெயர் தரும் உலகம்...!!
மாட்டிற்கே இந்த கதியெனில்
நல்ல மனிதனென
எப்படி பெயர் வாங்குவது..??

காய்ச்சலில் கிடந்த போது
விபூதி வைத்து
நெற்றி தடவினார் அப்பா..!!
அவரிடம் எப்படி
கடவுள் மறுத்து
நாத்திகம் பேச முடியும்...??

புத்தர் பற்றி
பெருமை கொள்ளும் போது,
சித்தார்த்தனின் மனைவி
குடும்பம் பற்றி
கொஞ்சம் கூட
கவலைப்படாமல் இருப்பது
யாருடைய ஆசை...??

சிலர் பணத்துக்கு
மதிப்பில்லை
என்பதை புரிந்து கொள்ளவே,
அதிக பணம்
சம்பாதிக்கிறார்களாம்..!!
சம்பாதித்த பின்
என்ன செய்வார்களோ..??

உலகம் நிச்சயம்
மகிழ்ச்சியாக
இருக்கும் போது,
நாம் ஏன்
உலகை நினைத்து
கவலைப்பட வேண்டும்..??
ஒருவேளை நமக்கு
அறிவு இல்லையோ..??

12 October 2014

செருப்'பூ'க்கள்...!!-Mano Red




பூ கொடுத்து
மடியாத காதல்,
செருப்'பூ' காட்டலில் 
முடிந்து விடுகிறது...!!

காதலுக்கு சாட்சி 
பூவாக இருந்தால்,
மோதலின் சாட்சியாக 
செருப்'பூ'வே வருமென்கிறது
காதல் நீதி...!!

பூக்கள் கொண்டு 
கோவில் போனாலும்,
வாசலில் விட்ட 
செருப்'பூ'க்களில் தான் 
மனம் கிடக்கிறது..!!
வாசத்தில் ஒன்றுமில்லை
வாசலில் தான் இருக்கிறது..!!

பூக்கள் தோற்கும் 
மெல்லிய பாதமென 
வர்ணிக்கும் போதெல்லாம்,
செருப்'பூ'க்களின்
செருக்கு கூடி நிற்கிறது...!!
பெண்களின் பாதம் காத்த
பெருமையுடன்..!!

வன்முறை விளக்க 
காட்சிகளில் 
செருப்'பூ' மிதிக்க
பூ நசுக்கி கசக்கிப்
நடிக்க வைக்கப் படுகிறது..!!
பூவிற்காக அழுவது என்னவோ 
செருப்'பூ'வாகவே இருக்கிறது..!!

பூ-விற்கும்,
செருப்'பூ'-விற்கும் 
மனிதனுக்கு தெரியாது,
பூவிற்கும் 
செருப்'பூ'விற்கும் 
இடைவெளி என்பது 
தலை கால் புரியாத 
தூர அளவு மட்டுமே...!!

09 October 2014

இறந்த பின்....!! - Mano Red

இறப்பதை தவிர
வேறு எதுவும்
அவன் செய்யவில்லை,
அவன் இறப்பு குறித்து
பேசும் போதாவது
துயரத்தை விடுங்கள்..!!

எவனோ தந்த பூமாலையை
எமன் கவர்ந்த அவன்
மார்பில் வைப்பதற்கு மாறாக,
நீங்கள் வளர்த்த ஒரு பூவை
உடல் நீங்கி சென்றவனிடம்
கொடுத்து வாருங்கள்..!!

இருக்கும் போது அவனை
போற்றாத நீங்கள்,
இறந்த பின்பாவது
தூற்றாமல் இருங்கள்,
எதையாவது சொல்லி
பொய்க் கண்ணீருக்காக
யாரையும் தூண்டாதீர்கள்..!!

இறந்த அவனுக்காக
உண்ணா விரதம்
இருக்க வேண்டாம் நீங்கள்,
அறுசுவை விருந்து
உண்ணாமல்
இருந்தால் போதும்...!!

இதுவரை இறந்தவனுக்கு
எதுவும் செய்யாத நீங்கள்
இனிமேலும்
எதுவும் செய்யாதீர்கள்,
மௌன அஞ்சலி என்ற பெயரில்
அவன் தனிமையை கொல்லாதீர்கள்..!

குறைந்தபட்சம் அவனின்
இறுதி ஊர்வலத்தை
விளம்பரம் செய்யாமல்
வீடு வந்து சேருங்கள்,
இறக்கும் முன்பு
அவனும் மனிதன் தானே.!!

07 October 2014

அய்யோ பசிக்குதே....!! - Mano_Red

ஆமாம்
இது உண்மை தான்,
அரைவயிறு உணவு உண்டு
அதிக காலமாகி விட்டது,
பசி கண்ட இடமெல்லாம்
வெந்து அழிகிறது...!!

அந்த உணவகத்தின் அருகே
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
சிதறிக் கிடந்த
சோற்றுப் பருக்கைகளைப்
பார்க்கும் போது
பாவப்பட்ட வயிறு
பசியில் புலம்புகிறது...!!

சமூக ஆர்வலர்களின்
பசி பற்றிய
போராட்டங்களுக்கு மட்டும்
அட்டைப் பட விளம்பரமாய்,
வசந்த காலம் தொலைத்து
பலவீனமாக நாங்கள்..!!

ஈரக்குலை துடிக்கிறது,
நாவறண்டு கிடக்கிறது,
இருந்தாலும் இங்கே
கடவுள் குளிக்க மட்டும்
பால் மிச்சம் இருக்கிறது,.!!

உணவில்லையெனில்
உலகை அழிப்பதாக
ஒருசேர உச்சமாய்
கூக்குரல்கள் எழுந்தாலும்,
பசிக்கு உணவு தர
ஒரு குரலும் வருவதில்லை..!!

இப்போது கூட
எங்கோ ஒரு வயிறு
சத்தமில்லாமல்
சொல்லியிருக்கும்
அய்யோ பசிக்குதே...!!

05 October 2014

நிலா வேட்டை..!! -Mano Red



நிழலாடியே
தேய்கிறாள்
நகல் இல்லா நிலா...!!

முன்புறமும்,
பின்புறமும் 
கருப்பு இல்லாத 
கண்மை விரும்பாத
அந்தப்புரத்து பால் அழகி...!!

பருவமெய்திய 
பாதி இரவில்
பாலாடை துறந்து
பகலில்லாத துணிச்சலில்
பார்வை வீசும் கெட்டிக்காரி..!!

தேய்பிறையில் 
அறைகுறை ஆடையுடன் 
அலையாடி 
விளையாடும் 
அனுபவ கிறுக்கி...!!

வெட்டவெளி 
பொட்டலில்
வெளிச்சம் களவாடிய
உண்மையை 
ஒப்புக் கொண்ட 
வெள்ளை திருடி...!!

இருள் தனிமையின்
அந்தரங்கம் 
எட்டிப்பார்த்து,
வெக்கத்தில் 
மேகம் மறையும் 
கூச்ச குழந்தை..!!

நிர்வாண
நிலை மறைக்க,
நட்சத்திர 
இலை பறிக்கும் 
நிலா வேட்டைக்காரி...!!

03 October 2014

பிராந்தி தேசம்..!! -#Mano_Red

கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
மரணம் தெரிகிறது,
மதுக்கடைகளின் வாசலில் நின்று
குடிக்க அழைக்கிறது..!!

நல்லதுக்கும்
கெட்டதுக்கும்
நடுவில் என்ன நடந்தாலும்,
மது தேடும் அவனை
மண்ணில் புதைக்க வேண்டும்..!!

தன் குழந்தையின்
எதிர்காலத்தை
ஏலத்தில் விட்டு விட்டு,
குடித்தபின்
ஏப்பம் விடும் அவனை
அடித்துக் கொல்ல வேண்டும்..!!

நகையை அடகு வைத்து
சாராயம் குடித்து,
மனைவியை அடித்து
துன்புறுத்தும்
கையால் ஆகாதவர்களை
கல்லால் அடிக்க வேண்டும்..!!

நல்ல ஆணாக
இருக்க தவறிவிட்டான்
தள்ளாடும் குடி மகன்,
இந்த பிழைப்பிற்கு
தற்கொலை செய்யலாம்
யாருக்கும் துன்பமில்லை..!!

கத்தியின்றி
ரத்தமின்றி
அவன் குடித்தாலும்,
ரத்தம் ரத்தமாக
சாகப் போவது என்னவோ
விரைந்து நிச்சயம்..!!

காந்தி வாழ்ந்த தேசம்
தொலைந்து விட்டது,
நல்ல 'குடி'மகன்கள் வாழும்
பிராந்தி தேசம்
காலூன்றி விட்டது..!!