www.gamblinginsider.ca

27 November 2015

அவள் எனக்கானவள்!- Mano Red




அவளின்
விரல்கள் வருடிய
கன்னத்தில்
உண்டான வெப்பம்,
ரேகையுடன் சேர்த்து
மயில் தோகையையும்
வரைந்து சென்றதில்
நிமிடத்தில் மறைந்து பிறந்தேன்.

அங்கங்கே அவிழ்ந்து கிடக்கும்
சோக முடிச்சுகளை
ஒருசேரக் கட்டமைத்து
ஒழுங்காக்கிய
தொடுதலிலே எத்தனை சுகம்.

முகத்தில் பரவியிருந்த
வேதனை முடிகளை
விவரமான நுட்பத்தில்
சவரம் செய்தது போல
பளபளப்பாக்கியது
அந்த வருடலின்
உயிர் பரவல்.

இதற்குமேலாக
ஆணி அறைய முடியாது
எனத் தெரிந்து,
வலிகளின் ஊடாக
மெல்லிய காகிதப் பூக்களை
நடுவது போல்
தொட்டன விரல்கள்.

இளமையின் கொடிய
கண்ணீர் துளிகளை
நக கண்கள் வழியாக
கவர்ந்து எடுத்த அவள்
எனக்கானவள்.

(முற்றிலும் கற்பனையே- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது)

23 November 2015

என்னில் அடங்காத மயிர்கள்! -Mano Red



யாரிடமும் இதுபற்றி
கேட்டதில்லை,
கேட்குமளவுக்கு அது
தலை போகிற விசயமில்லை
முடி போகும் விசயமே.

திருமணச் சந்தையிலும்
பல் பிடித்துப் பார்த்தால்
தப்பிவிடலாம்,
முடி இழுத்தல்லவா பார்க்கிறார்கள் என்று
ஒருவர் சொன்னதே 
மண்டையில் நிற்கிறது.

தலையைச் சொறிந்தபோது
முடி உதிர்ந்தது,
மயிர்தானே
போகட்டுமென்று சொல்ல
நானொன்றும் முடி துறந்தவனல்ல.

வட தென் துருவ
காந்தப்புல அறிவியலை
நான்கு சுவருக்குள்
சொல்லிக் கொடுத்தத முடிகள்
உதிரச் சிந்தியதே தவிர
உதிரம் சிந்தவில்லை.

இப்போதெல்லாம்,
கண்ணாடி பார்த்து
சீவுவதை விட
பார்த்துப் பார்த்து சீவுவதே அதிகம்.

எண்ணில் அடங்காத மயிர்கள்
என்னில் அடங்காதவரை
மலை இழுக்கும் முயற்சியெல்லாம்
மந்தமாகவே இருக்கும்.

20 November 2015

பசிக்கிறது.! - Mano Red

அவனுக்கு வயது இருக்கிறது
அவனுக்கு வயிறும் இருக்கிறது
வெக்கம் மானம்
சூடுடன் சேர்ந்த பசியும்
கொஞ்சம் இருக்கிறது

வயிறுக்கு
என்ன தெரியும்
பசிப்பதைத் தவிர.?
மிஞ்சிப் போனால்
கிள்ளி ரசிக்கத் தெரியும்
உள்ளிருந்து சிரிக்கத் தெரியும்.

அவன் யாரையும்
குற்றம் சொல்லமாட்டான்
குறையும் சொல்லமாட்டான்
அவனுக்கு நன்றாகவே தெரியும்
தேவை இருக்கும்வரை
பசியும் இருக்குமென்று.

நிச்சயம் அவனால்
புலியாக இருக்க முடியாது,
பசித்தால்
புல்லையும் கல்லையும்
புசித்தே ஆக வேண்டுமென்பதில்
உறுதியாக இருக்கும்போது.

பசி வந்தால்
பத்து மட்டுமல்ல
பதினொன்றாவதாக இருப்பதும்
பறக்கும்.
பறப்பதற்கு
இப்போதைய தேவை
இறக்கையல்ல,
இரைப்பை நிறைய உணவு.

17 November 2015

தூரத்தில் யாரோ? -.Mano Red

இதுதான்
இன்றைக்கு
எழுதப்பட்ட உண்மை.

அநேகமாக,
அது இரவில் எடுக்கப்பட்ட
புகைப்படமாகவே இருக்கும்
எனக்குத் தெரியாமல்
யாருக்குப் பின்னாலோ
நான் நின்று கொண்டிருக்கிறேன்.

கதவின்
பின்புறத்தில் இருந்து
சத்தம் வருகிறது
எட்டிப்பார்ப்பது அநாகரீகம்
பல்லிகள்
பள்ளிகொண்டிருக்கலாம்.

தூரத்தில்
யாரோ நிற்பதாக
ஓர் உள்ளுணர்வு
அருகில் சென்று பார்த்தால்
தெரிகிறது என் கற்பனை..!

ஒரு ஆழ்ந்த யோசனை
என் நிமிடங்களைத் தின்றது,
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவில் வரவில்லை
இப்போது மறுபடியும் பசிக்கிறது.

பளிச்சென ஒரு முகம் வேண்டி
நம்பிக்கையின் கண்ணாடியை
அழுத்தித் துடைத்த போது
கிடைத்தது
நொறுங்கிய கனவுகளோடு
என் ஆதி முகங்கள்.

15 November 2015

கல்லாய் மாறும் அகலிகைகள்!- Mano Red

செவ்வாய் நோக்கிய பயணத்திற்கு
செவ்’வாய்’ கொண்ட
அழகிகள் தேவை
என்ற விளம்பரத்தை
’ப்ச்’ கொட்டாமல் ரசித்து
வேகமாகச் சுற்றியது பூமி.

சகுனத்தடை ஏதுமின்றி
சிலநொடி
இளைப்பாற நின்றது
உலகின் ஒரு ஓரத்தில்.

சாக்கடையில்
விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத
செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி நிற்க...

மிச்சமான எச்சில் சோற்றை
இல்லாதவனுக்கு
கொடுக்க மறுத்த
முடி(வி)யில்லா முதலாளிகள்
கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க...

பெற்றெடுத்த வயிற்றில்
பெட்ரோல் ஊற்றுவது போல
முதியோர் இல்லம் சேர்த்துவிட்டு
முண்டங்களாய்
பிள்ளைகள் மாறியிருக்க...

பஸ்ஸில் அலையும் ஆண்கள் சிலர்
உரசித் தேய்க்கும் போதெல்லாம்
அகலிகையாய்
பெண்கள் மீண்டும்
கல்லாய் மாறத் துடிக்க...

நின்று வேடிக்கை பார்த்த பூமியோ
புதிதாக எதுவும் மாறவில்லை
கொஞ்சம் வழிவிடுங்கள்
என்றபடி
பண்பாட்டிற்கு புது விளக்கம் சொல்லி
திரும்பிப் பார்க்காமல் நகர்ந்தது.

06 November 2015

ஹா ஹா..காதல்.! - Mano Red



அவனுக்கு வயது
இருபத்தி ஆறு இருக்கும்.
இருந்து என்ன செய்ய
காதல்தான் இன்னும்
கதவு தட்டவில்லை.

ஜயதேவர் போல
ரசனைகளில் ஊறி
ரசம் பிழியும் வரிகளில்
ஆயிரம் கவிதை
அடுக்கடுக்காய் அள்ளி எறிவான்
இருந்தும் காதலி இல்லை.

எதிர்வரும் பெண்களை எல்லாம்
ஏற்றுக் கொள்வான் 
காவியக் காதலிகளாக,
கண்ணில்படும் குமரிகளை எல்லாம்
கற்பனையில் காதலிப்பான்
தேவையில்லாத தேவதைகளாக..

குளிக்கப் போனால் கவிதை
சாமி கும்பிட போனால் கவிதை
பல்லுத் தேய்த்தால் கவிதை
பாட்டி அழைத்தாலும் கவிதை
கவிதை கவிதை என
கழுதையாய் திரிந்தான்.

அவன் அப்பன் செய்த புண்ணியமல்ல.
எவன் செய்த புண்ணியமோ
அவள் அவனிடம் சிக்கினாள்
கவிதையை ரசிப்பவளாம்.
இவனும் குறைந்தவனல்ல
இடி மழை போல
கவிதை உரைத்தான்
காதலும் வேறு வழியின்றி மலர்ந்தது.

நன்றாகவே கடந்தது நாட்கள்
கவிதைகளும் கரைபுரண்டு ஓடின.
ஆறுதல் காதலி 
மாறுதலாய், கவிதை வேண்டாம் 
கானம் வேண்டுமென்றாள்.
மானே தேனே பொன்மானே சேர்த்து
தலை சொறியும் கானம் இவன் பாட
காதலியும் தெறித்து ஓட
இனிதே காதல் முறிந்தது
இது தேவையா.?

02 November 2015

அவள் ஓடிவிட்டாள்.! -Mano Red



இரு,
இதோ வந்துவிடுகிறேன்
என்று சொல்லிவிட்டு
திடுதிடுவென
ஓடிப் போனாள் அவள்.

படாரென கதவிழுத்து
தலை தெறிக்க ஓடியதில்
சமநிலை திரும்பாமல்
இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது
பழைய தகரக் கதவு.

வழக்கம்போல
ஓடும் ஓட்டம் என்பதால்,
தெருவில் யாரும்
அவளைக் கவனிக்கவில்லை,
அவர்கள் யாருக்கும்
அதுபற்றிய
கவலையுமில்லை.

இடம் வந்தும்
இளைப்பாற நிற்காமல்
அங்கிருந்த
நெடும் வரிசையில்
தானும் நிற்கிறாள்,
அதற்காகவே
ஓடியும் வந்திருக்கிறாள்.

ஏன் ஓடினாள்
எங்கு ஓடினாள்
எதை வாங்க ஓடினாள்
யாரை இருக்கச் சொல்லி
ஓடினாள் என
எழும்பியிருக்கும்
ஏகப்பட்ட கேள்விகளின் பதில்
இறுதியில் கிடைக்கும்
பசியுடன் காத்திருப்போம்
அந்தத் தாய் வீடு திரும்பும்வரை.