www.gamblinginsider.ca

29 April 2015

மழையென்பது யாதென...!! -Mano Red



கருமை சூழ்
கார்மேகங்களுடன்
காரை வீட்டுக்கு
குடை பிடிப்பது போல,
படையெடுத்து வந்தது
பெருமழை...!!

இரவின்
இருள் தனிமையில்
சொட்டுச் சொட்டாய் விழுந்த
மழைத் துளியும்
மோகினிப் பேயின்
கால் கொலுசாய்
காதில் சினுங்கியது ...!

குளிரின் தனிமையில்
அணைப்பதற்கு
விளக்கைத் தவிர
யாதுமில்லை என்பதால்,
கையோடு கை தேய்த்த
வெப்பத்துடன்
வெக்கம் தான் மிச்சம் இருந்தது..!

சன்னல் வழி
கம்பிகளின் ஊடாக
எதிர் வீட்டு ஓட்டில் வழியும்
சொட்டு நீரை எண்ணும்
பழக்கம் இருப்பதால்,
சாரல் மழையின்
சொட்டு எண்ணிக்கை
விட்டதில் இருந்து தொடர்ந்தது..!!

காற்று வேகமானதில்
மழையின் முகம்,
திருவிழா கூட்டத்தினுள்
அலைக்கழிக்கப்படும்
மழலையின் முகமாய்
மாறிப் போனதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை. !!

மழையின் கொஞ்சல்
கொஞ்சம் கொஞ்சமாக
அடங்கி
தாழ்வார விரிசலில்
வடித்து முடித்த போது,
என் தனிமையும்
முழுதாக வடிந்து
தொலைந்து இருந்தது...!!

27 April 2015

மாதவிடாய்..!! - Mano Red



அவளின்
உடலியல் செயல் பற்றி
வெளிப்படையாக பேசுவதை,
அருவருப்பாகவும்
அவமானமாகவும்
இன்னும் பார்க்கிறது
கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!!

தீட்டுப் பட்டவள் அவளென
சாமி அறையிலிருந்து
சமையலறை வரை
செல்லக்கூடாது,
ஊறுகாயைத் தொடக்கூடாது,
என்று தள்ளி ஒதுக்கி
சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!!

சமுதாய பூச்சாண்டிகளே
பயம் காட்டியது போதும்..!!
அவளைச் சுற்றி கட்டப்படும்
கட்டுக்கதைகளும்,
கற்பனைகளும்
பெண்ணை இன்னும்
புண்ணாய் ஆக்குகின்றன.!!

அகத்தின் செயலுக்கு
புறத்தில் குறை கூறும்
இந்த சமூகத்தின்
குருட்டு கண்களுக்கு
விளக்கெண்ணெய் விட்டு
வெளிச்சம் தரவேண்டும்..!!

தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!

ஒரு பெண்
தான் பூப்பெய்தும்போதே
அவளுக்கு
அளிக்கப்படும் முதல்
அறிவுரை,
அப்பாவிடம் கூட
மாதவிடாய் பற்றி
பேசக்கூடாது என்பதே...!!

பேசக் கூடாத
விசயமல்ல
மாதவிடாய்..!!
பெண்களின் உலகத்தை
ஒவ்வொரு ஆண்களும்
புரிந்துகொள்ள வேண்டிய
கடமை இருக்கிறது..!!

25 April 2015

மீசை முட்கள்..!! -Mano Red



ஏன் என்று தெரியாத
உள்ளக் கிளர்ச்சியொன்று,
மனதின் மேடுபள்ளங்களை
அரைகுறையாய் அலசி
கிளறிவிட்டு சென்றது
பருவத்தின் மீசை முட்களை..!!

இச்சையின்
இளமை அனிச்சைக்கு
இசைந்த எல்லாம்
இன்னும் ஏனோ
அவமானத்தின் எச்சங்களாய்
ஏளனத்தின் விளிம்பில்
ஒருங்கே தலை குவிகின்றன..!!

திரும்பிய இடமெல்லாம்
சோகம் உறிஞ்சிய
நிமிட சந்தோசங்கள் எல்லாம்,
அந்த நிமிடங்களுக்காக
இன்னும் விரல்
சூப்பிக் கொண்டிருக்கின்றன..!!

உள்ளுணர்வொன்று
நாக்கை பிடுங்கி இழுத்து
கேள்வி கேட்டாலும்,
இன்று சரியெனப் பட்டதை
நாளையே
தவறாக்கி விட்டு
தலை சொறிதலுக்குள்
அடங்கிப் போகிறது எல்லாம். !!

நல்ல வேசமெல்லாம்
வெளிச்சத்தில்
உடுத்தி விட்டு,
இருட்டிய நேரத்தில்
இருள் உடை தறித்து
இரண்டும் கெட்ட மனதுடன்
இன்னும் தாடி கோதுகின்றன
மயிர் மழிக்காத முகங்கள் . !!

வெளிச்சம் வந்தும்
பொழுது விடியவில்லை ,
கடிகார அறிகுறியில்
நேர நிமிட முட்களின்
கையும் காலும்
சும்மா இருந்தால்
காலம் எப்படி
சரியான நேரம் சொல்லும்..??

 

21 April 2015

உனக்கு புள்ளை பொறக்காதுடா...!!! -Mano Red




எட்டு நாள் வளர்ந்த தாடி ,ஒரு பக்கம் ஏறி இறங்கியிருந்த சட்டையின் கை மடிப்புகள்,
கலைத்து சீவப்படாத தலை மயிர், மாற்றி அணிந்திருந்த செருப்புடன் புலம்பிக் கொண்டே தள்ளாடி வந்து கொண்டிருந்தான் குமார்.!! (தண்ணி அடிச்சுருந்தா தள்ளாட தானே செய்வான்)..

அம்மா பெயர் காவேரி ..கணவனை இழந்து விட்டு கட்டிட வேலை செய்து மகன் குமாரை வளர்த்து ஆளாக்கியவள்..!! படிக்குற காலத்தில் அவனும் ஊர் சுற்றியவன் தான் ...ஆனால் படித்து முடித்த பின்பும் ஊர் தான் சுற்றுவான் என்று முன்னமே காவேரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..!!

எந்த வேலையிலும் உருப்படியாய் இருப்பதில்லை ,கேட்டால் இருப்பவனுக்கு ஒருவேலை இல்லாதவனுக்கு பலவேலை என வியாக்கியானம் பேசுவான்..!!தான் தான் அதிமேதாவி என்ற நினைப்பும் தனக்குத்தானே நியாயமும் பேசி வெட்டியாய் தான் அன்று வரை சுற்றி திரிந்தான் ..!!

அன்றும் அப்படிதான் அவன் வெட்டியாய்ய்ய்ய்ய் ...
தெருவின் முச்சந்தியில் அரசமரம் ,வேட்டி ,திருநீறு ,வாழைபழம் ,சூடம் ஒரு பிள்ளையாருடன் சேர்ந்தவாறு ஒரு திண்ணை வெட்டியாய் பேசுபவர்களுக்கென..!!
குமார் அதில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டே எப்படி உருப்படலாம் என கற்பனைக் குதிரையில் வேகமாய் பயணித்துக் கொண்டிகிருக்கையில் ஒரு குரல் ...
தம்பி......!!

தியானம் கலைந்தவன் போல கோவமாய் ஏறிட்டு என்னய்யா வேணும் என்றான்..??
நான் கிளி ஜோசியக்காரன் ஊருக்குள்ள போகணும் வழி சொல்லணும் என்றான்..!!

உடனே இவனுக்கு என்ன தோன்றியதோ எனக்கு முதலில் ஜோசியம் சொல்லு உன்னை பரிசோதித்து விட்டு தான் ஊருக்குள்ளே அனுப்புவேன் ..ஏன்னா இந்த ஊரே என்ன நம்பி தான் இருக்கு அப்படின்னு அள்ளி விட்டான் ...!!

ஜோசியக்கரனும் மனசுக்குள்ள ஜோசியம் பழகுவதற்கு நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்னு கடையை தொடங்கினான்...சிலபல சாமி பெயர் சொல்லி சீட்டு கட்டுகளை விரித்து கிளியை திறந்து விட்டான்..கிளி குமாரை வெறிக்க பார்த்துவிட்டு நகர்ந்து வந்து சீட்டை கிளறியது ..!!

ஊரை காக்கிற நம்ம தம்பிக்கு நல்ல வழிய காட்ட நல்லதா ஒன்னு எடுத்துக் கொடுன்னு கிளிக்கு ஆணையிட்டான் ஜோசியக்காரன் ..!!

இவனுக்கு மனசுக்குள்ள அப்படி ஒரு சந்தோசம் என்ன தான் வருமோ ..??
கிளியின் பார்வை சற்று ஏளனமாகவே இருப்பதை உணர்ந்தான் குமார்...கிளியும் கீச் கீச் என்றில்லாமல் ஹி ஹி என்று கத்துவது  போலவே கேட்டது..!!

கிளி எடுத்து கொடுத்ததை பிரித்து பார்க்கும் நொடியில் அத்தனை கடவுளும் 
குமாரின் மனதில் வந்து போயினர்.
அழகிய பருவப் பெண் படம் வந்ததை பார்த்து திருமணம் முடித்தால் நீ நினைத்த எல்லாமே நடக்கும் என்று சொல்லிவிட்டு எழுந்து போனான் ஜோசியக்காரன் ..!!

ஒரே யோசனையுடன் அம்மா காவேரியிடம் சென்று திருமணம் முடித்து வைக்குமாறு அவசரபடுத்தினான்..!!
கிறுக்கு பிடித்திருக்குமோ என்று  ஒருமாதிரி பார்த்துவிட்டு இவனுக்கும் வயதாகி விட்டதே முடித்துவிடலாம் என்ற எண்ணத்திலே தலையை ஆட்டிவிட்டாள்..!!

26 வயதாகியும் வேலை வெட்டி இல்லாதவனுக்கு எவனுமே பெண் தர தயாரில்லை என்று தெரிந்தும்,துணிச்சலாய் பெண் தேடினார்கள் ஏமாற்றமே மிச்சம் அவர்களுக்கு..

பக்கத்துக்கு ஊருல அப்பா இல்லாத ஒரு பொண்ணு  பத்து வர படிச்சுட்டு சும்மா தான் அவங்க அம்மா கூட இருக்கு போய் பாருங்கன்னு எவனோ சொல்ல ரெண்டு பேருமே அலங்காரமா கிளம்பி போனாங்க..!!

மாட்டு தொழுவத்தில் இருந்த பெண் இவர்களை பார்த்தவுடன் கை கழுவி விட்டு என்ன வேணும் என்று கேட்டாள்...(நீ தான் வேனும்ம்னு மனசுக்குள் குமார் சொன்னது அவளுக்கு கேட்டிருக்காது ).
உங்க அம்மாவ கூப்பிடுன்னு காவேரி சொன்னதும் ஓடிபோனாள் அவள்..

திருமண எண்ணம் பற்றி எல்லாம் பேசி முடித்த பின் வெட்டி பயல நம்பி என் பொண்ண தர மாட்டேன்னு சொல்லி பெண்ணின் அம்மாவும் மறைந்துவிட்டாள்..!!

இவனை வைத்துக் கொண்டு காவேரி என்ன செய்வாள் ,அழுகாத குறையாக காவேரியுடன் சண்டை போட்டு விட்டு அவனும் கோவமாய் கிளம்பி விட்டான்..
அவன் போன வேகம் பழக்கமில்லாத மதுபான கடையை நோக்கி..(சோகமானால் அங்கு தான் போக வேண்டுமென எதாவது தமிழ் சினிமா பார்த்து தெரிந்திருப்பான் )

அவன் இதற்குமுன் வராத இடம் ..என்ன செய்ய வேண்டுமென்றே தெரியாமல் அளவின்றி கிடைத்தவரை குடித்து விட்டு தெருவில் புலம்பியே வந்துகொண்டிருந்தவன் எதிரே வந்த பெண் ஒருத்தி மேல் மோதி விழுந்து தரையில் கிடந்தான் ..!!

அவளுக்கு வந்த கோவத்தில் குடிகார நாயே கண்ணு தெரியலையா உனக்கு ..மாடு மாதிரி வந்து இடிக்குற ..உனக்கு அக்கா தங்கச்சி யாரும் இல்லையா ..??என வழக்கமான சாடல்களில் திட்டி தீர்த்து விட்டு இறுதியாக ஒரு சாபமிட்டாள்..!

பொம்பளைகள இடிக்குற உனக்கு கல்யாணமே ஆகாது டா ..எவனும் உனக்கு பொண்ணு தர மாட்டான்..அப்படியே கல்யாணம் ஆனாலும் உனக்கு புள்ளை பொறக்காதுடா ன்னு கேவலாமா கோவமா திட்டி கடந்து போனாள்..!!

அவனும் ஒருவாறு எழுந்து சென்று பேருந்து நிறுத்தம் அடைந்தான்..!!
குடித்தவரை எல்லாம் மறந்தாலும் புள்ளை பொறக்காதுடா ன்னு  அவ சொன்னது இன்னும் அவன் மனசுல அப்படியே கேட்டு கொண்டுதானிருந்தது..!!
பேருந்து வந்ததும் ஏறி கடைசிக்கு முன் இருக்கையில் அமைதியாக அமர்ந்து விட்டான் ..!!

மதுவின் நெடி உடல் விட்டு போகாததில் யாரும் குமாரின் அருகில் அமர முன்வரவில்லை..!

அவன் ஏறியதில் இருந்து சரியாக மூன்றாவது நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் கையில் கூடையுடன் தடுமாறியே ஏறினாள்...இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் ஒரு கம்பியின் உதவியில் நிற்க ஆரம்பித்தாள்..!!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குமாருக்கு இடித்த பெண் சொன்ன வார்த்தை "உனக்கு புள்ளை பொறக்காதுடா " என்பது மீண்டும் காதில் கேட்க தொடங்கியது ..!!

என்ன நினைத்தானோ தெரியவில்லை அதிர்ச்சியுடன் தான் எழுந்து கர்ப்பிணி பெண்ணுக்கு இருக்கை கொடுத்து ,மாற்றி அணிந்திருந்த செருப்பை சரி செய்துவிட்டு பேருந்தில் இருந்து எதையோ கற்று கொண்டது போல் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தான் ..!!

-----------------------------------------------------மனோ ரெட் ----------------------------------------------

19 April 2015

பெண் பார்க்கும் படலம்...!! -Mano Red



எப்போதும் போலவே 
அன்றும் விடிந்தது,
அவளுக்கும்
அழுகை வந்தது,
எப்போதும் போலவே 
பெண் பார்க்கும் படலம்
அன்றும் அலுத்து விடுமோ..??

ஏழு பேர் வந்து போனது போலவே
எட்டாவதாக வருபவனும் 
எட்டாமல் போய் விடுவானோ..??
யாருக்கென்ன கவலை 
காயப்போவது 
மல்லிகைப்பூ மட்டுமல்ல 
அவளும் தானே...?!

அலங்கரித்து 
சிங்காரமாய் நடந்து வர 
இது முதல் தடவை அல்லவே,
தனக்கு தானே கேட்டுக் கொண்டு 
ஏனோதானோவென வந்தாள்..!!
வழக்கமான 
வணக்க அரங்கேற்றத்தை 
அன்றும் அரங்கேற்றினாள்..!!

வந்த அத்தனை பேரும்
நிலம் பார்த்தனர்
நகை பார்த்தனர்,
வீடு பார்த்தனர்,
வசதி பார்த்தனர்,
திருமணத்திற்காக பெண் பார்க்க 
யாரும் வரவில்லை..!!

புண்ணைக் கொத்தும் காக்கைகளுக்கு
மாட்டின் நோவு
எப்படித் தெரியும்.??
வெத்தலையின் காம்புடன்
பெண்ணின் குறைகளையும் 
கிள்ளி எறிந்து பேசினார்கள்..!!

மாடு விலை பேசும் 
வியாபார (திருமண) சந்தையில்
பெண் மட்டும் என்ன பாம்பா..??
பல்லைப் பிடித்து பார்க்கையில்
கையில் கொட்டுவதற்கு..!!

நிராகரிப்பு என்பது
நிர்வாண நிலையினும் கொடிது..!!
காயா இல்லை பழமா 
என்று அவர்கள் கேட்பதிலே 
காய்ந்த பழமாகி விடுகிறாள்..!!

சினிமாவிற்கு வந்தது போல
சிற்றுண்டியுடன் 
நேரத்தை போக்கிவிட்டு 
வியாபாரிகள் வெளியே போனார்கள்,
கதவோரம் சாய்ந்து நின்று 
அவள் சொன்னாள்,
அடுத்த முறையாவது 
பெண் என்னைப் பார்க்க வாருங்கள்..!!

16 April 2015

ஒரு பிடி மண்..!!-Mano Red



விவசாயம் 
இது தொழில் மட்டுமல்ல,
உலகின் உயிர்..!!
நம் விவசாய வரலாறு 
வெறும் புராணமோ 
பொய் புரட்டோ இல்லை,
அதையெல்லாம் கடந்ததென
நமக்குத்தான் புரியவில்லை ..!!

விவசாயத்தில்
முன்னோர் கொடுத்த  
கொடையின் நீட்சியையே 
இன்று நாம் 
அனுபவிக்கிறோம்,
ஆனாலும் இதை 
அடுத்த தலைமுறைக்கு 
அனுப்ப மறுக்கிறோம்..!!

தற்போதைய விவசாயி 
தன் பிள்ளைக்கு
விவசாயம் வேண்டாமென
மறுத்துக் கைவிடும் போது,
அவன் மட்டும் போகவில்லை,
ஆயிரமாண்டு விவசாய நீட்சியும் 
அத்தோடு அறுபட்டு போகிறது..!!

மெய்ஞ்ஞானம் கொண்டவர்கள்
விவசாயத்தின்
விஞ்ஞானக் கரை காண
மறுக்கிறார்கள்,
தன்னை மண் மூடினால் புரியும்
ஒரு பிடி மண்ணின் அருமை..!!

கையறுநிலையில் விவசாயி 
தற்கொலை செய்ய வேண்டாம்,
விவசாயத்திற்கு 
கையால் ஆகாதவர்களை 
தேடித் தேடி
கொலை செய்யட்டும் ...!!

யாருக்காக போராடுகிறோம்..??
அரசியலில் விவசாயம் இருக்கிறது
நிலத்தில் தான் இல்லை..!!
விவசாயிகளின் சாபக்கேடு 
அரசியல் பேச்சையெல்லாம்
மேடையிலேயே மறப்பது தான்..!

கைப்பிடியளவு உள்ள
இந்த மண்ணில் தான்
வாழ்க்கை இருக்கிறது,
கவனமாக காப்பாற்றினால் 
காலத்திற்கும் பிழைக்கலாம்..!!
அழிக்க நினைத்தால் 
அழிவது மனிதகுலமும்தான்..!!

11 April 2015

ராவண நோக்கம்..!! - Mano Red



எத்தனை முறை 
ருசித்தாலும் 
நிறம் வேறாக 
இருக்கலாமே தவிர, 
ருசி மாறிவிடாது..!! 
காமத்தின் பேய்க் கண்களுக்கு 
இது புரியாது..!! 

ராவண நோக்கத்தில் 
ரகசியமாய் 
பின்னால் சென்று, 
ஆளில்லா இடைவெளியில் 
கவர்ந்து செல்ல 
வலை விரிக்கிறான்..!! 

கடைக்கண் பார்வையெல்லாம் 
சம்மத அர்த்தமில்லை, 
அவளின் அசைவுக்கெல்லாம் 
பல்லை காட்டிவிட்டு 
கையை பிடிக்க 
காய்ந்த மனிதன் அலைகிறான்..!! 

மகனுக்கு 
பெண் பார்க்க போனால், 
வரப்போகிற மருமகளுக்கு 
மாமியார் தேடும் 
மாமனார் கூட்டத்தில் 
உத்தமன் என 
யாரைக் கை காட்டுவது..?? 

போகிற இடமெல்லாம் 
காதல் அம்பு விடுவதை விட்டு 
அன்பு விடுங்கள், 
நிச்சயம் 
மனிதத்தையும், 
மனிதனையும் 
வென்று விடலாம்..!! 

பெண்கள் 
பாஞ்சாலியாய் சபதமெடுக்க 
பாண்டவர் துணை வேண்டாம், 
துரத்தி வரும் 
துச்சாதனன்களின் தொல்லை 
இல்லாமலிருத்தலே போதும்..!!

07 April 2015

உதிரா இலைகள்..!! -Mano Red



எழுப்பு ஒலியின்
தொடக்க ஒலியே
நினைவு குத்தி செல்கிறது,
விழிக்கும் நேரம் 
தாண்டியும் 
விடியல் வரவில்லை..!!

ஒருவித மதம் பிடித்த
மனிதனாய்,
தவறிய வாய்ப்பின்
மறு அழைப்பிற்கு
காத்திருக்கும் போது
நிலநடுக்கமாய் சில சிதறல்கள்..!!

தானே இயங்கும்
இசைக்கோப்பிலிருந்து
சற்று முன் 
காற்று பரப்பிய பாடலை,
மயிரிழையில் 
தவற விட்டபின் புரிந்தது
இது தான் இப்போது கடந்தது..!!

சிற்பக் குறியீடுகளை
குறுக்கே விசாரிக்குமளவு
திறனில்லை என்றாலும்,
அற்பமில்லா
சிற்பமாய் நிற்க
பொறுமை பொதிந்திருக்கிறது..!!

மனக்காட்சியின்
அகநிலை அறியாமல்
நிதம் நிதம் 
வெள்ளோட்டம் விடுவதற்கு
நிகழ்படமல்ல வாழ்வு..!!

உதிரம் சிந்தினாலும்,
சோர்ந்து ஓய்ந்தாலும்,
உதிர்ந்து விடாத
உதிரா இலையின் 
நுனிக்காம்பு நம்பிக்கையில்
இன்னும் தொங்குகிறது 
அண்மை வாழ்க்கை...!!

05 April 2015

நாக்கு கூசுகிறது...!!- Mano Red

பரந்துவிரிந்த
பரம்பரையின்
விலை மதிப்பில்லா
வித்துக்கள் சுமக்கும்
வாரிசுகள் அவர்கள்..!!

தீர்ந்துபோன பின்னே
தெருவில் வீசலாம்,
ஆனால்
இளமை தீரும் முன்னே
வெட்டி வீசப்பட்ட
அஹிம்சாவாதிகள் அவர்கள்..!!

மிருகமென எவர்
வந்தாலும் போனாலும்
நிறைகுறை ஏதுமின்றி
இன்னும் மென்மை உமிழும்
அழகியல் அவர்கள்..!!

ஆயிரமாயிரங்காலமாய்
அனுபவித்து விட்டு,
நன்றி மறந்த
அழுக்கேறிய மனிதனுக்கும்
பச்சை மனம் திறக்கும்
பாசக்காரர்கள் அவர்கள்..!!

அது இது என
ஒருமையில் சொல்ல
ஒன்றுமில்லாதவர்கள்
அல்ல அவர்கள்..!!
உயிர் முடிச்சை
காற்றின் கயிற்றால்
கட்டிப்போட்ட
மரங்கள் தான் அவர்கள்..!!

நாக்கு கூசுகிறது,
இருக்கிற
மரங்களையெல்லாம்
வெட்டி வீழ்த்திவிட்டு
மனிதா உன்னால்
எப்படி முடிகிறதோ
வீட்டுத்தொட்டியில்
செடி வளர்க்க...??

01 April 2015

சாமி பெயரில் அர்ச்சனை..!! -Mano Red

ஒருமுறை பிறந்தே
ஒன்றும் கிழிக்காத போது
மறுபடி பிறக்காமலிருக்க
மறுபிறவி வேணடாமாம்..!!
முட்டாள் தனமான
வீண் வேண்டுதல்களை
என்ன சொல்ல. ??

கட்டுக்கட்டாக பணத்தில்
காணிக்கை செய்தால்
சொர்க்க வழி திறக்குமாம்..!!
முக்தி மோட்சம் பெற
மனித நேயம் இல்லாமல்
இறைவனிடம் நல்லவனாய்
முகச்சாயம் பூசினால் போதுமா..??

உங்களின்
நியாய தர்மங்களின்படி
கொடுக்கவும் வாங்கவும்
இறைவன் ஒன்றும்
சாதாரணமானவன் அல்லவே..!!
அப்படியிருக்க
நினைத்தது நடந்தால் துட்டு
இல்லையென்றால் திட்டா..??

தேங்காய் மட்டும்
உண்ணத் தகாத
பொருளாக இருந்திருந்தால்,
இறைவனிடம் வேண்டுதல்கள்
அதிகம் இருந்திருக்காது...!!
மனிதனின் ஆசைகளே
இங்கே பிரார்த்தனைகளை
தீர்மானிக்கின்றன..!!

இப்போதெல்லாம்.
இறைவன் பெயர் சொல்லி
வரமும் தரலாம்,
வரம்பும் மீறலாம்..!!
புது வேண்டுதல்களின்
மெருகேற்றப்பட்ட வடிவத்திலே
போலிச் சாமிகள் பிறக்கின்றன..!!

எல்லாமே அவன் செயல்
என்று இங்கிருக்க,
சாமிக்கே அலங்காரம்,
சாமிக்கே பூஜை ,
இறுதியில்
சாமி பெயரில் ஒரு அர்ச்சனை..!!
இங்கே கதை முடிந்தது
இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும்
இறைவனுக்கும்.....