www.gamblinginsider.ca

31 March 2015

மெலிந்ததோர் யானை..!! -Mano Red

பூனையைக் கண்ட
யானை புத்திக்கு
உருவு கண்டு உருவானது
பொல்லாப் பொறாமை..!!
அந்த நொடி சபதத்தில்
அடுத்த முயற்சியாய்
ஆகிறேன் மெலிவாய் என்றே
ஆட்டமாய் ஆடியது..!!

கனவிலும் குழப்பமே
கத்தியே விழித்தது,
குடும்பத்தில் ஒருவனாய்
கொஞ்சி மகிழும்
பூனை நிலை எங்கே,
பார்த்ததும் அஞ்சி விலகும்
யானை எந்நிலை எங்கே..??

அச்சமயம் முதல்
அச்ச பயம் இல்லாமல்
வழியின்றி வலியுடன்
மெலிய தொடங்கியது,
யானை வயிறு பசித்தாலும்
பானை சோறு வெறுத்தது..!!

பூனையை நினைத்தே
சுய நினைவு தொலைத்தது,
கருமை நிறம் அகற்றவே
சுவற்றில் உடல் தேய்த்தது,
மீசை முளைக்க எண்ணியே
தந்தம் ஒடித்து நின்றது..!!

தன்னம்பிக்கை மறந்து,
தும்பிக்கை இழந்து,
பூனையாய் நடந்து,
வீணாய் போனதில்
ஆசிர்வாதம் வாங்கும் மக்களும்
வாக்குவாதம் செய்தனர்
யானையின் கிறுக்கு நிலையை..!!

பொறைமை குணத்தால்
உள்ளத்தில் மாற்றமே தவிர
உருவில் பெரிதும் மாற்றமில்லை,
உடல் மெலிந்து சுருங்கியதில்
நிற்க சக்தியின்றி
யானைக்கு அடி சறுக்கியது..!!

அப்புறம் சொன்னது யானை
அவரவர் உருவிலே
அவரவர் வழியிலே
அவரவர் தெரிந்ததை
அனுபவித்து வாழ
ஆயிரம் வழி இருக்கிறது,
அடுத்தவர் போல
ஆக எண்ணியதே என் தவறு..!!

25 March 2015

நன்றி நிமித்தங்கள்...!!- Mano Red




பொய் மட்டும் 
இல்லையென்றால்
அதிசயமும், அபூர்வமும் 
நிலைத்திருக்காது..!!
இப்படி சொல்லுதலின் 
உண்மை வீச்சுகளில்
என்னை ஒளித்திருக்கும்   
வாய்மைக்கு ஒரு நன்றி..!!

பருவ வயதில் முளைத்த 
மீசை ஞாபகம் மறந்திருந்து,
அந்த அவசர கதியில்
ஆளில்லாத தன்னந்தனிமையில்
எஞ்சிய உணவுகளில்
என்பெயரை எழுதி அனுப்பிய
யாரோ விவசாயிக்கு ஒரு நன்றி..!!

மீச்சுருங்கிய பொழுதுகளின் 
பண்பட்ட பாகுபாட்டில் ,
நிலைக் கண்ணாடியும் 
முகம் திருப்பியது..!!
முக பிம்பங்களின் எதிர் நிழலும்
துன்பங்களையே பிரதிபலித்த போது
தடுமாற விடாத 
தன்னம்பிக்கைக்கு ஒரு நன்றி..!!
 
சூடுபட்ட இடத்தில்
கண்மையளவு
கறுத்துப் போனதற்கே 
கலங்கி விடுவதா...??
புறக்கணிக்கப்படுவதும்,,
புறந்தள்ளுவதும்
காலத்தின் புணர்தலென சொன்ன
அனுபவத்திற்கு ஒரு நன்றி..!!

உப்புக் கல் கொண்டு தேய்த்தாலும்
சொரணை அறியாத 
வெக்க, மானத்திடம்,
இங்கே பார் 
புண்பட்டதில் விழும் எச்சிலாய்
இதுவும் கடக்குமென
உறைக்கும்படி காட்டிய
அவமானத்திற்கு ஒரு நன்றி..!!

சீக்காளியாய் இருக்கும்
கணவனின் துணியை,
முகர்ந்து பார்த்த பின்பும்
முகம் மலர்ந்து துவைக்கும்
மனைவியின் பொறுமையை
விரைவில் பழக்கப்படுத்திய 
சூழ்நிலைக்கு ஒரு நன்றி..!!

இப்படி நன்றி நிமித்தங்களுடன் 
தேடும் வரை ஓடலாம்,
எழும்  வரை விழலாம்,
வலிக்கும் வரை அடிபடலாம்,
போதும் போதுமென்கிற வரை
நம்மை நாம் துன்புறுத்தலாம்,
இப்படித் தானே வாழக் கூடாது
ஆனால்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் தானே.!!

எங்க ஊரு பண்ணையாரு..!! -Mano Red


வெறும் பேருக்கும்,
எங்க ஊருக்கும்,
அவரு தான் பெரியாளு,
சந்தனத்த நெஞ்சுல பூசி
சாக்கடை வாசம் வீசுவாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!

சீமையில இருந்து
சில்லுனு வந்தாரு ,
சிலுக்கு சட்ட போட்டு
கிளுக்குன்னு சிரிச்சாரு,
உதவின்னு கேட்டா போதும்
ஊர விட்டே ஓடுவாரு,
காஞ்சு போன கையால
காக்கா வெரட்ட மாட்டாரு . !!

பொத்தாம் பொது அடயாளமா
வெக்கங்கெட்ட அவுகளுக்கு
எட்டு மொழத்துல
வெள்ளை வேட்டியும்,
மானங்கெட்ட அவுகளுக்கு
மஞ்ச பூசுன
ரெண்டு மைனர் துண்டும்..!!

தலையாரி அவரு தான்,
தர்மகர்த்தா அவரு தான்
கோயிலுக்கு போனா
மசமசன்னு நிக்காம
மால மரியாதையெல்லாம்
வெரசா வாங்குவாரு,
தறுதலை அவரு தான்
நியாய தர்மம் பேசுவாரு .!

துப்புகெட்ட மனுசன் அவரு
பொட்டலத்து வெத்தலைல
பொகையிலை மடிச்சு வச்ச
பொழிச்சுன்னு துப்புவாரு,
கொஞ்சமா பேசுனாலும்
பொய்யாத்தான் பேசுவாரு ..!!

ரோடு போட்ட காசுலதான்
நாலு வீடு போட்டாரு,
கெணறு வெட்ட
யோசன சொல்லி
காரு வாங்கி வந்தாரு,
இனிக்க இனிக்க பேசியே
இளிச்சவாயன் ஆக்குனாரு..!!

மாடா உழச்சு
ஓடாப் போனாலும்
கூலி கூட்டித் தர மாட்டாரு,
வேலி நாங்க
சொந்த பயிர மேஞ்சாலும்,
மயிராத்தான் பேசுவாரு,.!

பொழப்பு கேட்டு நாங்க போனா
வாழ்க்க தேர இழுத்து
நடுத்தெருவுல விடுவாரு..!!
வெளஞ்ச எல்லாத்தையும்
அம்சமா அமுக்கி வச்சு
ஏழை வயித்துல அடிப்பாரு !
ஆனா அவரு மட்டும்
குளுகுளு அறையில
கும்மாளம் அடிப்பாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!

22 March 2015

ஹெராயின் காதல்..!! -Mano Red

மந்திரப் பொடி தூவாமல்
தந்திரமாக இழுத்ததில்
எந்திரமாக மாறுகிறது
சொக்கி மக்கிப் போன மனம்,
காய்ந்து போன நாட்களை
மாய்ந்து மாய்ந்து புதுப்பித்தே
தேய்கிறது காதல்..!!

இதழுடன்
இதழ் பொருத்த,
இதயத்தை இடை நிறுத்தி
காதல் கடை விரித்ததில்,
உடன்கட்டை வரை
ஏறத் துணிவது
ஏறத்தாழ காதல் குணமே..!!

முருங்கை மரமேறும்
வேதாளமாய்,
காதல் பாதாளத்தில்
மீண்டும் மீண்டும் விழவே
தலைகீழ் நின்று
தண்ணீர் குடிக்கிறது
பாழடைந்த நினைவு..!!

எக்குத்தப்பாக
எத்தனைமுறை பேசினாலும்,
சத்தமில்லாத
அர்த்தமில்லாப் பேச்சுக்கு
அலைந்து திரியவே
ஆவியாய்ப் பறக்கிறது
அரைகுறை அறிவு..!!

ஒட்டுப் போட்டு தைத்த
பட்டுச் சீலையின் நுனியை
விடாமல் மறைக்கும்
மங்கையின் மனம் போல்,
சித்திரவதை சந்தித்து
அடிவாங்கி அசிங்கப்பட்டாலும்
காதல் மனம் சகித்து கொள்கிறது.!!

துடைப்பம் வைத்து
துடைத்தாலும் போகாத
உடையாத நினைவுகளால் ,
குப்பைக் காதலில்
பாலித்தீன் துப்பிய
எச்சில் சக்கையாய்
மறுசுழற்சிக்கு மறுக்கிறது மனம்..!!

கண்ணைக் கட்டி
எட்டிப் பார்க்க சொல்கிறது,
காதல் வாய் பேசியே
செவ்வாய் கிரகம் வரை
இழுத்தடிக்கிறது,
இந்த பேதை நிலையில்
போதை சுகம் தரும்
ஹெராயின் காதல்..!!

ஹெராயின் காதல்..!! -Mano Red

மந்திரப் பொடி தூவாமல்
தந்திரமாக இழுத்ததில்
எந்திரமாக மாறுகிறது
சொக்கி மக்கிப் போன மனம்,
காய்ந்து போன நாட்களை
மாய்ந்து மாய்ந்து புதுப்பித்தே
தேய்கிறது காதல்..!!

இதழுடன்
இதழ் பொருத்த,
இதயத்தை இடை நிறுத்தி
காதல் கடை விரித்ததில்,
உடன்கட்டை வரை
ஏறத் துணிவது
ஏறத்தாழ காதல் குணமே..!!

முருங்கை மரமேறும்
வேதாளமாய்,
காதல் பாதாளத்தில்
மீண்டும் மீண்டும் விழவே
தலைகீழ் நின்று
தண்ணீர் குடிக்கிறது
பாழடைந்த நினைவு..!!

எக்குத்தப்பாக
எத்தனைமுறை பேசினாலும்,
சத்தமில்லாத
அர்த்தமில்லாப் பேச்சுக்கு
அலைந்து திரியவே
ஆவியாய்ப் பறக்கிறது
அரைகுறை அறிவு..!!

ஒட்டுப் போட்டு தைத்த
பட்டுச் சீலையின் நுனியை
விடாமல் மறைக்கும்
மங்கையின் மனம் போல்,
சித்திரவதை சந்தித்து
அடிவாங்கி அசிங்கப்பட்டாலும்
காதல் மனம் சகித்து கொள்கிறது.!!

துடைப்பம் வைத்து
துடைத்தாலும் போகாத
உடையாத நினைவுகளால் ,
குப்பைக் காதலில்
பாலித்தீன் துப்பிய
எச்சில் சக்கையாய்
மறுசுழற்சிக்கு மறுக்கிறது மனம்..!!

கண்ணைக் கட்டி
எட்டிப் பார்க்க சொல்கிறது,
காதல் வாய் பேசியே
செவ்வாய் கிரகம் வரை
இழுத்தடிக்கிறது,
இந்த பேதை நிலையில்
போதை சுகம் தரும்
ஹெராயின் காதல்..!!

20 March 2015

தன்னோவியம்...!!- Mano Red



கிழிந்து போன 
நாட்காட்டியின் ஓரத்தில்
தொங்குகிறது,
கடந்து போன 
கடந்த காலத்தின்
கையாளாகாத நாட்கள்..!!

கைம்பெண்ணின்
கண்முன் வைக்கப்பட்ட
கண்ணாடி,
பொட்டின்றி பூவின்றி 
அலங்கோலமாய் இருப்பதை 
ஒத்திருந்தது,
ஓரம் கட்டப்பட்ட நிஜங்கள்..!!

தொலைநோக்கு பார்வையெல்லாம் 
தொலை தூரம் செல்ல,
ஏமாற்றத்தின் 
பதங்கமாதலில் பிறந்த 
வியர்வைத் துளி 
வேடிக்கை மட்டுமே பார்க்கிறது..!!

வடுக்கள் மிகுந்த 
வாழ்வு களத்தில் 
துப்பவும் முடியாமல் 
விழுங்கவும் முடியாமல் 
ஒளிர்ந்து அழுகும் 
மெழுகுவர்த்திக்கு 
ஒத்தடம் கொடுத்து என்ன பயன்..?

பசுமை நினைவுகளை
மோட்டுவளை பார்த்து 
ரசிப்பவனுக்கு தெரியும்,
மாறுதல் தத்துவத்திற்கு 
எப்போதும் 
எதிராளியாய் 
நேர் நிற்பது 
இந்த ஏமாற்ற அறிகுறி..!!

இப்படி எந்த முகம் வைத்து 
ஓவிய முகம் வரைவது..?
தன்னோவியம் வரைய 
எத்தனிக்கும் போதெல்லாம்,
பித்துப் பிடித்த நிலையை 
கோணல் மனம் 
தானாகவே சென்றடைகிறது..!!

16 March 2015

வெட்டியான் பார்வை...!! -Mano Red

மயான அமைதி..!!
அங்கே தியானமிருக்க
யாரும் வரப்போவதில்லையென
வெட்டியானுக்கு தெரியும்..!!

கேவலமாய் இறந்தவன்
ஊர்வலமாய் வருகிறான்,
என மனதில் சிரித்தபடி
எதிர்நோக்கி இருந்தான்..!!

கடைசியாய் முகம் பார்த்து ,
அடங்கியவனை
சொந்தமெல்லாம்
அடக்கிவிட்டுப் போக,
அவனுடன் பேசியதில்
வெட்டியான் அன்றிரவை
வெட்டியாக போக்கவில்லை..!!

உன் பொல்லாப் பாவ,புண்ணியம்
உனக்கு மிச்சம்..!!
கால் பணம்,
முழத்துண்டுடன்,
உன் வாய்க்கரிசி மட்டுமே
எனக்கு மிச்சம்..!

மீசை முறுக்கி திரிந்தவனை
மார்பில் மிதித்து
விறகில் ஏற்றினான்,
எச்சில் கை நீட்டாதவனின்
கையை இறுக்கி
தீக்கு விருந்தாக்கினான்..!!

அடக்க யாருமின்றி
ஆட்டமாய் ஆடி
வாழ்திருப்பான் போல,
சூட்டில் எலும்புகள்
புடைத்து எழும்பியதால்
அடித்து மீண்டும்
நொறுக்கி படுக்க வைத்தான்..!!

நாற்றம் பிடித்த
அவன் வாழ்க்கை கதையை,
கருகிய தீ நாற்றம்
காற்றெல்லாம் பரப்பியதில்
காட்டின் காது நிரம்பியது..!

வேக வேகமாய்
உடல் வேக வேக
கொண்டது கொடுத்தது
உண்டது உடுத்தது என
எல்லாமும் வெந்து விட்டது..!!
முடி சூடிய மன்னனும்
இறுதியில்
ஒரு பிடி சாம்பல் தானே..!!

புலம்பியபடியே
புதிய பிணம் நோக்கி
பார்வை செலுத்தினான்
வெட்டியான்..!!

14 March 2015

ஒத்திகை நேரம்...!!-Mano Red

பாதரச பிம்பங்களின்
ஆதரவு நிழலில்,
ஓரளவு ஒழுகி
பேரழகில் படர்ந்திருந்தது
ஒத்திகை நேரத்துக்கான
ஒப்பனை முகங்கள்..!!

பழக்கப்பட்ட நடிப்பு,
சலிக்கப்பட்ட கலைஞர்கள்,
முந்தானை பிடித்து
முறையாய் நடக்கும்
மூத்த மகனை
நினைவூட்டியது காட்சிகள்..!!

போதிய காற்றுடன்
ஊதிய பலூன்,
மோதிய பின்னும்
வீதியில் பறந்ததைப் போல
கேலிப் பேச்சுக்களை தாண்டி
அழகாய் நிறைவாய்
வாழ்ந்து நடித்தனர்..!!

சோகத்தில் வெளிறியிருந்தது
அம்முகச் சாயல்,
இருப்பினும்
மேக வெளியில்
வேகமாய் கிழிந்த
மின்னலின்
புன்னகையை ஒத்திருந்தது
கோமாளியாய் அவன் நடித்ததில்..!!

தாய் இறந்த
பதட்டத்தில் அவள்
உதட்டுச் சாயம் பூசியதில்,
உதட்டை மிஞ்சி
முகமெல்லாம் அழகாயிருந்தது,
அழுகை மறைத்து நடித்த
கதையின் நாயகிக்கு..!!

இதயக் கோளாறு உள்ளவனாம் ,
அதையும் மீறி
எதையும் தாங்கி,
சதையும் நகமும் போல
பாத்திரத்தில் பொருந்தி
நடைபோட்டான் நாயகன்..!!

ஒத்திகை முடிந்திருந்தாலும்
ஒப்பனைகள் படிந்திருந்தது,
அழுதவன் சிரித்தால்
சிரித்தவன் அழுக வேண்டுமே..??
இவ்வளவே வாழ்க்கையென்பதை
அவ்வளவு சீக்கிரம்
புத்திக்கு சொல்லியிருந்தது நாடகம்..!!

10 March 2015

நெடுஞ்சாலை மயானம்…!!-Mano Red



வீட்டில் சொல்லிவிட்டே
புறப்படுகிறது
ஒவ்வொரு பயணமும்…!
திரும்பி வரும் நம்பிக்கையில்
விரும்பியே ஆரம்பமாகிறது…!!

எந்த கோட்டையை பிடிக்க
அத்தனை அவசரம்..!!
குருட்டு வேகத்தில்
விவேகம் தொலைத்து
தொடங்கிய இடத்திலேயே
குப்புற கவிழ்கிறது எல்லாமும்..!!

கொஞ்சம் பொறு..!!
மலையை கட்டியிழுக்க
யாரும் போவதில்லை..!
தலை போகும் அவசரத்தில்
தடுமாறி விடாதே
தலையே போய்விடும்..!!

சாலையில் மட்டுமல்ல
மனித மூளையிலும்
வேகத்தடை வேண்டும்..!!
பயண வேகத்தில்
மைல்க்கல் தூரம் நினைப்பவன்
மனைவி மக்களை நினைப்பதில்லை..!!

நெடுஞ்சாலையெல்லாம்
மயானம் ஆகும் முன்,
கரம் சிரம் புறம் வரிசையில்
அறத்தையும் கொஞ்சம் சேருங்கள்,
அரிய உயிரின் மதிப்பை
பெற்றவளிடம் கேளுங்கள்..!!

வழிவிட்டு வாழுங்கள்,
மெதுவாய் செல்வதும்
பொதுநலக் கோட்பாடே..!!
விதியை மதியால் வெல்லலாம்,
சாலை விதியை மதி
மாறும் உன் தலைவிதி..!!



08 March 2015

தலை குனிய வேண்டும் ஆண்களே…!!-Mano Red



பெண்கள் தினமா..??
நாக்கு கூசுகிறது..!!
தலை குனிய வேண்டும் ஆண்களே..!!
எந்த முகத்தை வைத்து
பெண்களை கொண்டாட போகிறோம்..??

பகுத்தறிவு வளர்க்க
பள்ளிக்கு அனுப்பினால்,
மதிப்பெண் காரணம்காட்டி
ஆசிரியன் அரவணைக்கிறான்..!!

நட்பை நம்பி
ஆண் நண்பனுடன் பழகவிட்டால்,
உடைமாற்றும் வேளையில்
கைப்பேசியில் படமெடுக்கிறான்…!!

கண்ணீர் சூழ
கடவுளிடம் கேட்டால்,
ஆறுதலாய் தடவி
ஆண்டவன் பெயரில்
அசிங்கம் செய்கிறான் பூசாரி…!!

அந்நிய முகம் ஏதுமில்லை,
அக்கம்பக்கம் புதிதில்லை,
இழிபிறவிகள் அத்தனை பேரும்
தெரிந்த ஆண்கள் தானே..!!

சமத்துவம் வந்ததென
சத்தமாய் கூறுபவர்களே,
முப்பத்தி மூன்று சதவிகிதம்
இடம் ஒதுக்கி என்ன செய்ய..??
முதலில் பெண்களை

பெண்களாக வாழ இடம் கொடுங்கள்..!!

05 March 2015

காகிதப் பூனைகள்…!! -Mano Red



தாளில் வரையப்பட்ட பூனை,
வெள்ளைத்தாளை
பாலாய் நினைத்து
குடித்ததை ஒத்திருந்தது
அறிவிலி மனம்…!!

இல்லாத ஒன்றை
இருப்பதாய் நினைத்து,
வீதியில் சென்ற விதியை
பாதியில் இடைமறித்து
ஊதியே பெரிதாக்கியிருந்தது..!!

தடங்கலின்றி பாய்வதற்கான
தட்பவெப்ப நுட்பமெல்லாம்
மாறிப் போயிருந்தது,
விட்டத்தை பார்த்ததில்
தொட்டதும் கைவிட்டிருந்தது..!!

வெற்றி பெறா நிலையின்
வெறுமையைக் குறிக்கும்
வெற்றிடமும்,
அதன் பெயரை தக்கவைக்க
வெற்றிடமாகவே வெற்றி பெற்றிருந்தது…!!

முன்னேற விடாத
செயல் தடுப்புகள் எல்லாம்
விடுப்பில் செல்லாமல்,
கடுப்புகளை தின்று தீர்க்க
இடுப்பிலேயே அமர்ந்திருந்தது..!!

முடிவு செய்யப்பெறாத,
மனவுறுதி கொள்ளாத,
தீர்மானிக்கப்பெறாத,
ஐயப்பாடுள்ள,
ஒருநிலைப்பெறாத,
ஊசலாடித் தயங்குகிற
செயல் அனைத்தும்
பிணங்களின் மீளா தூக்கம் போல்
மீண்டும் எழுப்ப முடியாதிருந்தது…!!!



02 March 2015

எடுப்பார் கைப்பாவை…!!-Mano Red



பாவைக்கூத்து கொட்டகை,
பாவமாய் கைப்பாவைகள்..!!
ஆட்டுவிப்பவனின் கைகளுக்குள்
ஆடத் தெரிந்தவைகள்..!!

இழுத்த இழுப்புக்கெல்லாம்
இளித்துகொண்டிருந்தது அது,
குனிய சொன்னால் குனிந்தது,
குதிக்க சொன்னால் குதித்தது..!!

ஆட்டம் முடிந்தபின்
தூக்கி எறிந்ததில்
மரக்கை முறிந்தது..!!
கை தட்டல்கள் வாங்கிய பாவைக்கு
முறிந்த கை கட்ட ஆளில்லை..!!

அந்த நாள் ஆட்டத்திற்கு
அது தேவையில்லையாம்..!!
உடுத்தியிருந்த பட்டு சீலை
உடனே களையப்பட்டு,
உதறித் தள்ளியதில்
மூலையில் கிடத்தப்பட்டது..!!

மறுநாளும் ஆட்டமில்லை,
கவனிக்கவும் யாருமில்லை..!!
பாவையிலும் பறவை உண்டு,
பறக்கவே இறக்கை இல்லை,
பறக்க கற்றுத் தந்தால்
பகுத்தறிவு ஒருவேளை வந்திடுமோ…??

உலகம் தானிங்கே கொட்டகை,
பாவைகள் இப்பாவி மனிதர்கள்,
பொம்மலாட்டமே திறமைகள்..!!
குனிந்து குனிந்தே ஒடிந்து
தலையாட்டியதில் தடம் மாறியவர்கள்,
சக்கையாய் பிழியப்பட்டே
குப்பையாய் ஒதுக்கப்பட்டவர்கள்..!!

01 March 2015

எச்சில் பேச்சு…!! -Mano Red



கொஞ்சம் இரு,,
அங்கே சலனம் இல்லாமல்
ஏதேதோ சத்தம் கேட்கும்..!!

அங்கே முதலிலிருந்து
முடிவு வரை
எல்லாம் உனக்குத் தெரியுமென
எனக்கும் தெரியும்..!!

ஏமாற்ற நினைக்காதே,
அங்கு வேண்டுமென்றே
ஏமாற நான் தயார்…!!

அங்கு சரியாக இருக்கத்
தேவையில்லை,
தவறாக இருத்தலே போதும்..!!

சண்டை தொடரலாமே..
அங்கே சமாதானமாகி
யாருக்கு என்ன லாபம்..??

அங்கே பாரபட்சம் எதற்கு..?
எல்லாமே பறிகொடுத்த பின்
என்ன மிச்சம் இருக்கும்..!!

அங்கே முதலில் தேடுவோம்,
எல்லாம் முடிந்தபின்
அப்புறம் வேண்டுமெனில்
தொலைத்து விடலாம்…!!

இருளில் தான் வாழ்க்கை,
அங்கே வெளிச்சம் விரட்ட
பழகிக் கொள்வோம்..!!