www.gamblinginsider.ca

25 February 2015

அனிச்சை முடிச்சுக்கள்…!! -Mano Red



சூழ்நிலையின் சூழ்ச்சி சுழல்,
பதைபதைக்கும் நிமிடத்தில்
புதை மணலில் இடறியதாய்,
மீளாத்துயரில் போராட
மட்டுமீறித் தவித்த மனம்…!!

பாசத்தின் மோச மோகத்தில்
மழையில் நனைந்த
மண் வீட்டின் சுவராய்
தொட்டதும் பட்டென இடிந்த
சல்லடை இதயம்…!!!

தொற்றுநோய் பாதிப்பின்
ஆரம்ப நிலையாய்,
வெளிசந்தோச உள்அழுகையுடன்
நரக நாட்களின் நடுவிலிருந்து
நிலைகுலைந்து நகர்ந்த நேரம்…!!

முகத்தோற்றம் வைத்து
மழுப்பி பேசினாலும்
அன்றாடம் மன்றாடி,
அந்தரத்தில் தொங்கும்
தூக்கணாங்குருவியாய் பட்டபாடு..!!

நுணுகி ஆராய்ந்து
வசப்படுத்த தெரியாமல்,
தவறென்ற போதெல்லாம்
ஆயத்தம் ஏதுமின்றி
வெக்கி தலைகுனிந்த தைரியம்..!!

வாழ்வில் தொடாமல் இடாமல்
அங்கங்கே விழுந்த
அனிச்சை முடிச்சுகளெல்லாம்
அனுபவத்தின் அவசரநிலையை

ஆழமாய் பிரகடனப்படுத்தி இருந்தது..!!

22 February 2015

ஒரு கோப்பை அழுகை….!!-Mano Red



குடிகாரன் அவனுக்கென்ன கவலை..?
புத்திக்கு எட்டாத போதையில்
மயங்கி அவன் கிடக்கையில்,
மளிகை சாமான்களும்,
மண்ணெண்ணை தீர்ந்ததும் என
திட்டித் தீர்க்கும் என் புலம்பல்…!!

அப்பன் அவனுக்கென்ன கவலை..?
மதிய உணவாவது
மகன் ஒழுங்காய் தின்னட்டுமென,
கிழிந்த மேல்சட்டையுடன்
புத்தகப்பை ஏதுமின்றி
பள்ளிக்கு அனுப்பும் என்பாடு…??

திருடும் அவனுக்கென்ன கவலை..?
பல்லைக் கடித்துக் கொண்டே
பகலெல்லாம் சம்பாதித்த
பத்து ரூபாய் பணத்தை,
பசியுடுடன் வரும் மகனுக்காக
பத்திரப்படுத்தும் என் தவிப்பு..!!

மிருகம் அவனுக்கென்ன கவலை..?
அவனில்லாத ராத்திரியில்
அன்னியர் எவனோ
கதவை தட்டும் போதும்,
அக்கம்பக்கம் தவறாய் பேசும்போதும்
அனாதையாய் அழும் என் நிலை….!!

முட்டாள் அவனுக்கென்ன கவலை..?
மது உச்சத்தில்
சிறு பிள்ளையாய் தினம்
அவன் கக்கும் கழிவுகளை,
முகம் சுழிக்காமல்
முகம் துடைத்துவிடும் என் நேசம்,,!!

சுகவாசி அவனுக்கென்ன கவலை..?
ஒரு கோப்பை மதுவுக்குள்
அவன் மூழ்கி மிதக்கையில்,
குடி முழுகிப் போனதற்காக
ஒரு கோப்பை அழுகை
நிரப்பிய என் கண்கள்..!


18 February 2015

இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red

அன்று மட்டும் என்ன
அவ்வளவு கூட்டம்,,,??
அத்தனை நாளும் பார்த்த
அதே இறைவன் தான்,
அன்று கொஞ்சம் நன்றாக
குளிப்பாட்ட பட்டிருப்பார்…!!

கோவில் வரும் வழி நெடுக
பேச்சுக்கு கூட துளி இரக்கமின்றி
அத்தனை மனிதாபிமானங்களையும்
அடித்து நொறுக்கிவிட்டு,
சிறப்பு தரிசனம் பெற்றால்
நீ யோக்கிய மனிதனா..??

எல்லாவற்றிற்கும் தலையாட்ட
இறைவன் என்ன முட்டாளா…??
இல்லை இளிச்சவாயனா…??
வரிசையில் நிற்கும் போது
பெண்களை உரசிவிட்டு
கண்ணை மூடி மன்னிப்பு கேட்டால்
நீ புனிதமானவனா..??

ஆன்மீக விஞ்ஞானம் எல்லாம்
அடியோடு மறைந்து போனது,
ஏன் என்று தெரியாமலே
மூடம் கண்ணை மறைக்கிறது,
முட்டிக்கொண்டு முந்தி
எட்டிப் பார்த்தால் இறைவன் தெரிவானா..??

பய பக்தி இருக்கலாம்,
பயத்தினால் பக்தி இருக்ககூடாது,
தற்போது கோவிலும்
குப்பைத்தொட்டி போலத்தான்,
பாவக்குப்பை மட்டும் கொட்டவே
பாவப்பட்ட கூட்டம் வருகிறது…!!

இறைவன் ஒன்றும்
ஆகப் பெரியவன் அல்ல,
உலக உருண்டையை கையில் சுற்றி
மாய வித்தைகள் செய்பவனுமல்ல,
தவிக்கும் நேரத்தில்
தண்ணீர் தருபவனும் இறைவன் தான்..!!

13 February 2015

புறம்போக்கு காதல்…!!!-Mano Red



ம்ம்ம்ம்ம்ம்ம் காதல்
பொல்லாத காதல்..!!
அந்த நேரத்திற்கு மட்டும்
ஆள் தேடும் காதல்,
சுகம் காண மட்டும்
சும்மா வரும் காதல்…!!

மானசீக காதல்,
மனதார காதல்,
கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது..!!
மானங்கெட்டவர்கள்
காதலின் போர்வையில்
காமத்தை தேடுகிறார்கள்..!!

தொடாத காதல்,
பட்டும் படாத காதல்,
யோக்கிய காதலென
வெளியில் திரிந்துவிட்டு
சந்து பொந்துகளில்
ஒதுங்க அலைகிறார்கள்..!!

அழ்ந்த காதல்
ஆத்மார்த்த காதலென
வெளியில் சொல்லாதீர்கள்,
ஆத்திரம் வருகிறது,
புறம்போக்கு உங்களின்
பொழுதுபோகுவதற்கு தேவை காதலா…??

தெய்வீகக் காதலென
கடவுளை அவமதிக்க வேண்டாம்..!
பொது இடத்தில்
எச்சில் துப்புவதே தவறு,
அதையும் மீறி அத்துமீறும்
காதலில் காரி துப்பவேண்டும்..!!

கண்ணும் கண்ணும் பாராமல்
முகம் யாரென தெரியாமல்,
கடிதவழிக் காதல் போல்
புனிதமாய் இருக்க வேண்டாம்,
குறைந்தபட்சம் காதலில்
மனிதனாய் இருந்தால் போதும்..!!!



10 February 2015

உபதேசப் பாம்புகள்..!! -Mano Red



ஆம் இது தான்
தடுமாறும் நிமிடங்கள்,
சுயநலத்தின்
சுயரூப மறைவிலிருந்து
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…!!

ஒத்திகை ஏதும் பார்க்காமல்,
ஓரமாய் நின்று யோசிக்காமல்,
முழுதும் பிறர்க்காக மட்டுமென
மழுங்கிய அறிவுக் கத்தியிலிருந்து
மழிக்கப்பட்ட முடி(வு)கள்…!!

கோட்டை கட்ட நினைத்தே
வாய்ப்புகளின் வாசல்களை
கோட்டை விட்டு விட்டு,
அந்தரத்தில் தொங்கும்
அறுந்த நூல் தேடும் காலங்கள்..!!

உபதேச பாம்புகளின்
ஒற்றை நாக்கிலிருந்து சொட்டும்
அறிவுரை விசத்தை
உடலெங்கும் தடவி
ஊமையாய் திரிந்த நிழல் நேரங்கள்..!!

பாசச் சாயம் பூசப்பட்ட
பாசாங்குப் பேச்சில்,
தன்மேல் தனக்கிருக்கும்
நம்பிக்கை சிந்தனையை
திருடிய திருட்டுத் தருணங்கள்..!!

போதும், இனியாவது விழிக்கலாம்..!!

08 February 2015

நாணிக் கோணுதல்…!!-Mano Red



பருவமெய்தலில் கூடவே
பக்குவமடைகிறாள்,
வெக்கப்படுதலிலும்,
நாணிக் கோணுதலிலும்…!!

வெளி உலகம் அறியாதவள்
இவ்வுலகிற்கு ஏதொவொன்றை
வெக்கத்தின் விளிம்பிலிருந்து
வெளிக்காட்ட முனைகிறாள்…!!

பிறர் தன்னை நோக்குவதை
பெரிதும் விரும்பாதவள்,
பிசுபிசுப்பில் பிரியும்
பழந்தேனாய் நெளிந்து குழைகிறாள்…!!

எதைக் கண்டும்
எளிதில் அஞ்சுகிறவள்,
கோழைக் கோபத்தையும்
கோவைப்பழ முகச் சிவப்பில்
கூச்சப்பட்டு மறைக்கிறாள்..!!

முகத்தோடு முகம் நோக்க
முயன்று பழகாதவள்,
நாணத்தின் நெகிழ்தலில்
நகம் கடித்து கால்விரல் தேய்க்கிறாள்…!!

அவளின் வெக்கப்படுதலும்,
நாணிக் கோணுதலும்,
இயலாமையின் அர்த்தம் அல்ல..!!
இயற்கையின் தன்மையில் அவளின்
தலைகுனிதலும் மென்மை தானே..!!

05 February 2015

குட்டிச் சுவர்…!!!-Mano Red



நட்ட நடு வீதியின் பாதையில்,
கட்டாமல் பாதியில் நின்றுபோன
தனித்துவிடப்பட்ட
வெட்டிச் சுமைதாங்கி
அந்தக் குட்டிச் சுவர்..!!

வயது வித்தியாச பேதமில்லை,
காலநேரக் கவலையில்லை,
சாதி மதம் தேவையில்லை,
காலாட்டி திமிராய் அமர்ந்தாலும்
கால் வாரிவிடாத நம்பிக்கை மேடை..!!

தகப்பன் திட்டிய
தண்டச் சோறுகளையும்,
எதற்கும் உதவாதவனையும்
தரிசாய்ப் போனவனையும்,
தனக்குள் ஈர்த்த தனிக் கட்சி..!!

மொட்டை வெயிலுக்கும்,
சட்டையில்லா குளிருக்கும்,
பேசத்தடை சொன்னதில்லை,
ஊரே கழுவி ஊற்றினாலும்
பேச்சின் நீளம் குறைத்தில்லை..!!

அந்த குட்டிச் சுவருக்கு தன்னைப் பற்றி
அதிகம் தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை,
அரசியலின் ஆராய்ச்சிக் கூடம்,
அனுபவங்களின் அரைகுறை உருவம்
அரும்புக் காதலின் வழிகாட்டி என
அச்சுவர் குட்டிச் சுவராய் மட்டும் தெரியவில்லை..!!







01 February 2015

தொடர்பறு நிலை...!!-Mano Red



வேலியிடப்பட்ட 
வெற்றிட நிழலில் 
மிஞ்சியிருப்பது
மாமிச உடலின் 
மரியாதை தெரியாத சதை...!!

தூக்கி எறியப்பட்ட
வேதனை நிமிடங்களில்
துவண்டு போனது 
துருப்பிடித்த பாசத்தின்
ஒற்றைத் துளி பொய்க் கண்ணீர்..!

அதுவரை பேசா உதடுகள்
விடைபெறும் வரை 
மௌன உணவு உண்டுவிட்டு,
கைப்பிடி இடைவெளி விட்டபின்
கதைபேச கரம் அழைக்கிறது..!!

புத்தகம் புரட்டியதில்
நழுவ விடப்பட்ட 
நடுப்பக்கம் போல,
நினைவில் சாயல் அகற்றி
இறுதியில் ஒட்ட பசை கேட்கிறது..!!

இப்போதைக்கு 
இப் போதையே போதும்..!!
மனதின் மசாலாவில் 
காரம் குறைந்தது,
பேரம் பேசி என்ன பயன்
தொடர்பும் அறுந்தது..!!