www.gamblinginsider.ca

30 November 2014

கொஞ்சம் பழைய கவிதை..!! -Mano Red



இம்மாதிரியான
மழை நாளில்
பழையதைத் தேடி
பழகிக் கொள்ள தோன்றியது..!!
அப்படி தேடிப் போனது
முன்னொரு நாள் வாழ்ந்த
மூத்தவர்களின் பழைய அறை..!!

தயங்கி தயங்கி
நூலாம்படை வலைக்குள்
நூதனமாய் நுழைந்த போது,
சிக்கல் உலகில்
சிலந்திகளின் வாழ்க்கை
சுகமாகவே இருந்தது..!!

கை வைத்த இடமெல்லாம்
கைரேகை பதியுமளவு
காலச்சுவடுகளின் தூசுகள்,
தூசு தட்டியதில் தெரிந்தது
தூரத்தில் வாழ்ந்த
தாத்தா பாட்டிகளின்
தங்கம் பூசிய முகமும்,
அங்கம் பேசிய அழகும்...!!

இரும்பு பெட்டியின்
இரும்பு வாயை
தற்செயலாய் திறந்த போது,
மூக்குப்பொடி டப்பா முதல்
உடைந்த மூக்குத்தி வரை
அலட்டிக் கொள்ளாமல்
அத்தனை கதை சொன்னது..!!

மாமிச வீச்சமடிக்கும்
மாடி அறை,
அதிகார தோரணையில்
ஆணியில் தொங்கிய
ஆதி விலங்குகளின் முகம்..!!
அன்பின் பெருவெளியை
அங்கே சமன்படுத்த
வார்த்தை எதுவும்
எனக்கு சிக்கவில்லை..!!

எதேச்சையாக
படிக்க நேர்ந்தது,
செல்லரித்த காகிதத்தில்
புல்லரிக்க செய்யும்
காதல் கவிதை..!
கொஞ்சம் பழைய கவிதை தான்
இருந்தாலும் அவர்களின்
இளமை காதலை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்த
என்னை
மன்னித்து விடட்டும் அவர்கள்..!!

25 November 2014

பணம் என்னடா பணம்...!! - Mano Red

எல்லோருக்கும்
எதாவது ஒரு நேரத்தில்
தேவைப்படும்,
அது மானம் அல்ல
பணம்...!!

யாரோ ஒருவரால்
சம்பாதிக்கும் பணம்,
யாரோ ஒருவரால்
திருடிச் செல்லப் படுகிறது..!!
பணத்துக்காக கொலை செய்ய
பணம் கொடுக்கப்படுகிறது..!!

எதோ ஒன்றை
வாங்குவதற்கும்,
வாங்கிய ஒன்றை
விற்பதற்கும் இடையில்
மனம் தேவையில்லை
பணம் போதும்..!!

யாரோ ஒருவனின்
வயிற்றில் அடித்து
பணம் சம்பாதித்தவன்,
பாதித்த வேறு ஒருவனுக்கு
பணம் தர மறுக்கிறான்,
ஏனெனில்
அவன் பிழைக்கத் தெரிந்தவன் ..!!

பணம் தின்று
கொழுத்தவனின்
பிணத்தை எரிக்கவும்
பணம் கேட்கப்படும்,
பிணவாசம் உணர்ந்து விட்டால்
பணவாசம் அற்றுப் போகும்...!!

உடம்பை விற்ற பணத்தில்
உடைகள் வாங்கப்படுகின்றன,
கடவுளைப் பார்க்க
பணம் கொடுத்து விட்டு
வேண்டுதலில் மீண்டும்
பணம் திருப்பி கேட்கப்படுகின்றன..!!

அரசன் சுவைத்த பணம்
அடிமையின் நாக்கிற்கு
எட்டுவதில்லை,
அதிகம் சேர்த்த பணம்
அன்பின் வழிக்கு
வருவதில்லை..!!

23 November 2014

தலைவன் முதல் தலையணை வரை..!!




இப்படி நான் 
என்றுமே இருந்ததில்லை,
என்னை நானே 
புதுப்புது புகைப்படமெடுத்து
புதுப்பித்துக் கொள்கிறேன்.
அழகின்மைக்கும் அழகுக்கும் 
நடுவே அழகாக உணர்கிறேன்,
ஆம் காதலுக்கு 
களவு போய்விட்டேன்...!!

காய்ந்த காதல் சுரத்தில் 
தாகம் கொண்டு 
அவனுக்கே தெரியாமல் 
என் காதல் முளைத்தது,
சொல்லாத காதலை 
சொல்லவும் முடியாமல் 
சொல்லவும் தெரியாமல் 
வேதனையின் உச்சியில் 
தலைகீழ் தவிக்கிறேன்..!!

தயங்கி தயங்கியாவது
என் காதல் உணர்ந்து
தலைவன் அவனாய் 
காதல் சொல்ல வருவானோ.?
அவனுடன் என்னை கோர்த்து 
வதந்தி ஏதும் வராதோ..??
அடுத்த நாளும் இதையே 
எதிர்பார்த்து கிடக்கிறேன்...!!

காதலுக்குள் நெகிழ்ந்து 
கனவில் ஆழ்ந்த நேரம் 
மனம் வெறுமையாய் புலம்பியது,
என் காதல் நோயால்
பெற்று வளர்த்தவர்களின்
நம்பிக்கை பாழாகுமோ,
சொந்த பந்தங்கள் 
அரைகுறையாய் பேசுமோ,
இந்த உலகம் நம்மை
கண்மூடி விமர்சிக்குமோ..??

இம்மாதிரியான
தருணங்களில் 
இறத்தல் வேண்டி 
இறைவனிடம் இரக்க துடிக்கிறேன்,
என் காதலை விலக்கிவிட்டு 
தாயின் முகக்குறிப்பு அறிந்து
என்னை நானே 
சமாதானம் செய்கிறேன்..!!

ஆயுள் முழுதும் 
நொறுங்கி போவேன்,
அவனை இனி ஒருநாளும் 
நினைக்கப் போவதில்லை 
என்றுணரும் போது 
சங்கடமாக இருக்கிறது,
அவனாவது என்னை 
நினைத்திருப்பானா என்று...??

என்னதான் செய்ய
தாமதித்தே உறைத்தது,
இன்று வரை புரியவில்லை
காதலும் ஒருவகை அன்பென
அன்புள்ளவர்களுக்கு தெரிவதில்லை,
தன்னுணர்வு மீண்டு 
தலையணை நனைக்கிறேன்,
அறை முழுக்க 
கண்ணீர் சிதறல்களுடன்....

20 November 2014

மரத்தைக் காணோம்..!! - Mano Red

மரத்தின் ஓவியம் ஒன்றை
வரைய முயற்சிக்கிறேன்..!!

அது ஒருவேளை
அசைந்துவிடக்கூடும் என்பதால்
ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும்போது
இலையை தூரிகையில் தொடுகிறேன்..!!

இலைகள் வரைந்து
இறுதிச் சொட்டு தீரும் வேலை
அதன் இலைகளில்
அசைவை உண்ர்கிறேன்,
அதன் கிளையில்
பூக்கவிருக்கிற மலர்களின்
காம்பு உடையாமல்
கவனமாக வண்ணம் தீட்டுகிறேன்..!!

தூய காற்றை
கூடுதலாக வாங்க எண்ணி
அதிக கிளைகளையும்,
நிறைய இலைகளையும்
நிரம்பி குலுங்குவதாய்
பசுமையாய் வரைகிறேன்..!!

தினமும் பகலில்
கொஞ்சி மகிழ
அதற்கும் காதலி வேண்டுமென
அருகே ஒரு மரம் வரைந்து
ஆசையாய் நட்டு விடுகிறேன்..!!
அவைகள் காதல் கொண்ட போது
தென்றலை உணருகிறேன்..!

காற்றை சுவாசிக்கும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டும் என
அதன் பக்கத்தில் வரைந்துவிட்டு,
தூரிகைகளைக் கழுவிய பின்
வந்து பார்க்கிறேன்
மரத்தைக் காணவில்லை...!!

முட்டாள் மனிதன் மட்டும்
மூச்சுத் திணறி
அங்கேயே நிற்கிறான்,
மரத்தை அழித்த அவனை
கிழித்து எறிந்து
இப்போது ஓவியம் அழிக்கிறேன்..!!

18 November 2014

பிரச்சாரப் பீரங்கிகள்..!! - Mano Red

எதிர்க்கட்சி அல்ல நாங்கள்,
எதிர்காலத்தின் கட்சி...
எகிறிய விலையை
எட்டிப் பிடித்தாவது
கட்டுக்குள் வைப்போம்..!!
நம்பி விடாதீர்கள்
புளித்துப் போன தீர்மானங்களில்
இளித்தவாயன் ஆக்கிவிடுவார்கள்..!!

பொதுச்சொத்துக்களின்
காவலர் நாங்கள்,
பூச்செடிக்கும்
பூட்டுக்கள் பூட்டி காவல் காக்கும்
வீரதீரம் கொண்டவர்கள் நாங்கள்
உள்ளங்கையில் தாங்குவோம்,
நம்பி விடாதீர்கள்
காதில் பூ சுற்றி விடுவார்கள்...!

இனவிரோத நிலைப்பாடுகளில்
சாதி மத இனம் கடந்து
ஓரணியில் செயல்படுவோம்,
உருட்டி வைத்த கோபங்களை
உங்களுக்காக அர்ப்பணிப்போம்,
நம்பி விடாதீர்கள்
இப்படி பேசிப் பேசியே
கூட இருந்து குழி பறிப்பார்கள்..!!

அப்பழுக்கற்ற
அரசாங்கம் நடத்துவோம்,
அடக்கி ஒடுக்கப்பட்ட
அடிமைகள் உங்களை
இரும்பு கரத்தில் மீட்டு
இந்திர ஆட்சி தருவோம்..!!
நம்பி விடாதீர்கள்
இன்னும் கொஞ்சம் பொறுத்தால்
வயிற்றில் அடிப்பார்கள்...!!

ஓட்டுவாங்கி விட்டு
ஒடிப் போகும்
குள்ள நரி அல்ல நாங்கள்,
மாலை சூடிய மக்கள் உங்களை
தலையில் ஏற்றி கொண்டாடும்
பட்டத்து யானை நாங்கள்,
உண்மையாய் இருப்போம்,
நம்பி விடாதீர்கள்
உங்களையும் விற்று விடுவார்கள்..!

கூட்டம் கூடி கூத்தடிக்கும்
குருவிக் கட்சியல்ல இது,
கொல்லன் பட்டறை இரும்பை
கொத்தக் காத்திருக்கும்
கழுகுக் கட்சி இது
உங்களுக்காக உயிர் கொடுப்போம்,
நம்பி விடாதீர்கள்
சம்பந்தம் இல்லாமல் பேசி
தலையில் மிளகாய் அரைப்பார்கள்..!

எங்களின் ரத்தத்துளிகளை
வரிக்கு வரி
வரிசையாய் கோர்த்து,
பிரச்சினை தீயை ஊதி ஊதி
உலகப் பெரிதாக்கியாவது
உணர்ச்சி பொங்க
கடிதம் எழுதி தீர்ப்போம்,
நம்பி விடாதீர்கள்
கடைசி வரை உங்களின்
கழுத்தை அறுப்பார்கள்...!!

16 November 2014

வெவசாயம் போச்சே...!! -Mano Red



காடுகரை மேடெல்லாம் 
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு 
கருவாடா போனானே..!!

பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து 
சேத்துல கால வெச்சானே...!!

இப்போ சாயம் போன 
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!

மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு 
நெலமெல்லாம் 
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல 
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!

கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச 
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு 
நெனப்பில்லயே...!!

பணக்காரன் வயிறெல்லாம் 
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து 
கட்டிடம் இடிச்சு
வெவசாயம் 
செஞ்சே ஆகணும்ன்னு 
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும் 
உசுரோட இருக்க மாட்டானே..??

13 November 2014

தண்ணியில்லாத காடு...!! - Mano Red

மழை எப்படி இருக்கும்..??
பழைய காதலி போல
முகச்சாயல் கொஞ்சம்
மாறி இருக்குமோ..?
பொறுத்துப் பார்க்கலாம்
மழை பெய்யும் வரை.....

ஓடு போட்ட வீட்டின்
ஓட்டை வழியே
சொட்டு மழை ரசித்தவனுக்கு,
சொட்டு மழையை
ருசிக்க முடியவில்லை..!!
யாருக்காக இப்போது அழுவது
கண்ணீர் அளவு கூட
தண்ணீர் இல்லையே...!!

ஏய் மழைக் கஞ்சனே
அடைமழை கூட
பெய்ய வேண்டாம்,
அட கொஞ்சம் மழையாவது
பெய்யலாமே,
பாவம் பச்சைப் புல்
வறட்சியில் சிவப்பாகி விட்டது..!!

குடிசை இல்லாதவனால்
கூனிக் குறுகி வாழ முடியும்,
குளத்து மீனுக்கு
நீந்துவது தவிர
என்ன தெரியும்...??
தண்ணீர் வற்றும்
நாள் வருமென்பதால்
நடக்கப் பழகி
வழுக்கி தான் விழும்..!!

வேலை வெட்டிக்காக
மரங்களையெல்லாம்
வெட்டி சாய்த்து விட்டோம்,
இயற்கையிடம்
மானம் போன பின்பு
வானம் பார்த்து என்ன செய்வோம்..?

குடிக்க தண்ணீர் வேண்டி
கடவுள் கும்பிட்டால் போதாது,
இனிமேல்
மனிதன் வாழும் ஊரில்
எதுவும் இருக்காது,
தண்ணியில்லா காட்டுக்கு
தவளை கூட தவறி வராது..!

11 November 2014

டீக்கடை மனிதன்...!!! - Mano Red

எல்லா டீக்கடைகளிலும்
எல்லாம் தெரிந்ததாய் பேச
ஒருவன் இருப்பான்,
அரசியல் முதல்
ஆன்மீகம் வரை
அள்ளி வீசுவான்..!!

டீக்குடிக்க காசில்லாமல்
தலையை சொறிபவன்,
யாரோ தீக்குளித்த செய்தியில்
வதந்தி எண்ணெய் ஊற்றி
இன்னும் எறியச் செய்வான்,
எல்லைப் பிரச்சனையை
எளிதில் தீர்த்து விடுவான்..!

அவன் குடும்பத்தை
நடத்த தெரியாதவன்,
உலக சண்டை
மட்டுமின்றி,
இனப்படுகொலை குறித்து
கொந்தளிப்பான்..!!

துட்டு வாங்கி
ஓட்டுப் போட்டவன்
கறுப்பு பணத்தின் மேல்
கடும் கோபம் காட்டுவான்,
நாட்டு நடப்பு மேல்
அத்தனை நாட்டம் கொண்டு
நாகரிகமாக பேசுவான்...!!

ஒழுங்காக
கால் கழுவத் தெரியாதவன்,
கலாச்சர இலக்கியத்தை
கடித்து துப்புவான்,
வராத வரலாற்று நிகழ்வை
வாய் கிழிய பேசுவான்..!!

ஒர் கோப்பை தேநீர்
குடித்து முடிப்பதற்குள்
அவன்,
போராளி,
கோபக்காரன்,
நடுநிலையாளன்,
நீதிபதி,
அரசியல்வாதி,
சர்வாதிகாரி,
கவிஞன்,
கதை சொல்பவன் என
அரை நிமிடத்தில்
ஆயிரம் அவதாரம்
அவனாகவே எடுத்து
அவனாகவே விடைபெறுகிறான்...!!

09 November 2014

ஆண் திமிர்...!! -Mano Red



இன்று கண்ணீர் வந்தது...
ஆனந்தத்தில் அல்ல,
அவனுடன் முதலிரவில்
வரதட்சணைக்காக
முதல் வாக்குவாதம் 
அரங்கேறிய போது,
அவன் தீ நாக்கினால் 
என்னைப் பொசுக்கினான்
என்பதற்காக...

இன்றும் கண்ணீர் வந்தது...
சாதாரணமாக அல்ல,
நேற்றிரவு நான்கு சுவருக்குள்
அதிகம் படித்த மயிலிறகு என்னை 
அவன் மாடாய் நடத்திய போது,
இது தான் இந்தப் பிறவியின் 
பாவம் என்பதற்காக....

இன்றும் கண்ணீர் வந்தது...
இது இரக்கமும் அல்ல-யாரும் 
இறக்கவும் அல்ல,
நேற்றிரவு 
நடத்தையில் சந்தேகப்பட்டு
இரக்கமின்றி அவன் 
இதயத்தில் அடித்து
வலியைப் பிழிந்த போது ,
இது கனவில்லை நிஜம் 
என்று சொல்வதற்காக...

இன்றும் கண்ணீர் வந்தது...
நாட்டுப் பற்றில் அல்ல,
நேற்றிரவு 
குடித்தவன் கரங்களினால்
வன்மையாய் 
மென்மை என்னை தாக்கிய போது,
கணவனால் குடும்பம் 
நடுத்தெருவில்
நிற்கும் என்பதற்காக...

இன்றும் கண்ணீர் வந்தது...
ஆனால் அழுதது நானல்ல,
எனக்காக பலர்..!!
ஆம் நேற்றிரவு 
அவன் வன்முறை தாங்காமல் 
என்னுயிர் பிரித்தேன்..!!
வலி பொறுத்திருந்தால் 
இன்றும் அழுது தானிருப்பேன்,
எனக்காக 
இத்தனை கண்ணீரும்
தேவைப்பட்டிருக்காது ...!!

06 November 2014

கௌரவக் கொலை..!! - Mano Red

எழுதி வைக்க
தேவையில்லை,
பிறந்தவுடனே
நம் உயிரை வாங்க
மரணம் நம்மை நோக்கி
கிளம்பியிருக்கும்...!!

பிறக்க நமக்கு உரிமை
இல்லாத போது,
இறக்க மட்டும்
உரிமை யார் தந்தது..??
இறப்பதற்கு ஆயிரம்
காரணம் இருந்தால் போதுமா..??
நியாயம் வேண்டாமா..??

இறக்க என்ன
தர்ம நியாயம் வேண்டும்..!!
மனம் தரும்
மரணம் என்பது
தற்கொலை,
ரணம் தரும்
மரணம் என்பது
கௌரவ கொலை..!!

உயில் எழுதி விட்டு
வெறும் எலும்பாக இறப்பது
ஒரு வகையெனில்,
உடல் எழுதி வைத்து
இறந்தாலும் உயிரோடு இருப்பது
ஒரு உயர் வகை தானே..??

தீராத வியாதியினால்
தீர்ந்து போன உயிர் கொண்டு
தினம் தினம் வாழ்ந்து
இறப்பதை விட,
இறக்க வேண்டுமென
அனுமதி கேட்டு இறப்பது மேல்..!!

கௌரவக் கொலை செய்ய
எந்த சாட்சியும் வேண்டாம்
மனசாட்சி போதும்,
வேசமில்லாத
உண்மை பாசத்திற்கு தெரியும்
கொலை எது..?
கருணைக் கொலை எதுவென்று..!!

04 November 2014

கொள்ளைக்காரி ...!! - Mano Red

கர்வமில்லாத
காதல் கவிதை அவள்,
முத்தப் பிழையுடன்
மெல்லிய வரிகளில்
துல்லியமாக
அள்ளிக் கொள்கிறாள்...!!

மருதாணி வைத்த
களவாணி அவள்,
கோவத்தில் சிவக்கிறாளா
இல்லை
மோகத்தில் மிதக்கிறாளா..?
மொத்தத்தில் என்னை
காதல் யுத்தத்தில் வெல்கிறாள்..!!

தேடி வராத
தேவதை அவள்,
மிச்சம் வைக்காமல்
மிச்ச உயிரையும்
கூச்சமின்றி கேட்டு
கூச்சல் போடுகிறாள்...!!

அக்கம்பக்கம் குறித்து
அக்கறை இல்லாதவள் அவள்,
மெதுவாய்
என் பக்கம் வந்ததும்
சொர்க்கம் வந்ததாய்
வெக்கம் கொள்கிறாள்...!!

பாரதியின் செல்லம்மா போல
செல்லமானவள் அவள்,
கொஞ்சல் மொழியில்
கொஞ்சம் பேசி,
இடைவெளியற்ற
கடைவிழியில்
கைது செய்கிறாள்...!!

காந்தம் போல
ஒட்டிக் (கொல்லும்) கொள்ளும்
வெள்ளை
கொள்ளைக்காரி அவள்,
நேர் எதிர் துருவமின்றி
புருவங்களில் ஈர்க்கிறாள்..!!

02 November 2014

பெண் குற்றவாளி ...!! -Mano Red



ஆமா,
ஏதோ ஒன்னு நெனச்சா
ஏதோ ஒன்னு நடக்குது,
நடந்த ஒன்ன நெனச்சா
நெஞ்சுல உசுரு இல்ல,
இறைவன் இருக்கையில
யார குத்தம் சொல்ல..?

ஊற வச்ச அரிசி போல
ஈரமாத்தான் மனசிருக்கு,
பக்குவம் தான் இன்னும் வரல
பாசம் வைக்க ஆச இருக்கு,
பழச நெனச்சு என்ன செய்ய
எல்லாமே முடிஞ்சுருச்சு..!!

பாவிப்பய அவனுக்கு
சூடு சொரண ஏதுமில்ல,
வெக்கங்கெட்ட அவனுக்கு
வேலவெட்டி ஒன்னுமில்ல,
குடிக்க மட்டும் காசு கேப்பான்
தர மறுத்தா சூடு வைப்பான்..!!

குடிகார புருசனுக்கு
குடும்பம் ஒரு கேடு,
குடிக்க அவன் கேட்டது
குடியிருந்த ஒரு வீடு,
சொல்லி சொல்லி
அலுத்துப் போச்சு,
சொத்தெல்லாம்
அடகுல அழிஞ்சு போச்சு...!!
 
போனா போகுதுன்னு
தாலி வித்து
தண்ணி அடிக்க
காசு கொடுத்தேன்,
திருட்டுப் பய அவன்
பெத்த புள்ளய வித்து
காசு பாக்க பொறப்பட்டானே....!!

பூவுக்கும் பொட்டுக்கும்
ஆசப்பட்டா
புள்ள உசுரு போயிருக்குமே,
தாய்ப்பாசம் தடுத்துருச்சு
தாலியும் விழுந்துருச்சு,
அவன் கழுத்த அறுத்து
புள்ள அழுகும் போது
புருசன் தல கவுந்துடுச்சு...!!

எனக்கொன்னும் கவல இல்ல
காலத்த கழிச்சுடுவேன்,
ஜெயிலு கம்பி எண்ணி
ஜென்மத்த முடிச்சுடுவேன்,
என் கவல ஒன்னுதான்   
புள்ள வளந்தா என்னாகுமோ
அப்பன போல தப்பாகுமோ..??