www.gamblinginsider.ca

03 January 2017

பெட்ரோல், டீசல்... காதல்! - Mano Red



பெட்ரோல் விலை உயர்வு
உன் பெற்றோருக்கும் தெரியட்டும்;
இந்தக் காலத்திலும்
காதல் குற்றமென்கிற
மாற்று சிந்தனை கொண்ட
உன் அப்பாவுக்கு
மாற்று எரிபொருள் தெரியுமா?
பாத்தி கட்டிய
எண்ணெய் வயல்களின் வரப்புகளில்
கரும்பு தின்றபடி
பட்டுத் தாவணியுடன் ஓடிவரும்
இளமை உனக்கு வாய்க்கவில்லை.
தலையில் முண்டாசு கட்டியபடி
டேங்குகளில் கச்சா எண்ணெய்
அறுவடை செய்து களைத்து
கஞ்சிக் கலயத்திற்காக காத்திருக்கும்
வாய்ப்பு எனக்கும் அமையவில்லை.
காதலுடன் வறண்ட
பாலை நிலமாக இருக்கும் - நம்
மனதிற்குள் இருந்து
மண்ணெண்ணையா எடுக்க முடியும்?
போகட்டும் விடு,
கேஸ் அடுப்படியில்
வாணலியில் கடுகு தாளிக்கும்
உன் அம்மாவை
வானொலி கேட்கச் சொல்
ஆதிகாலம் வேறு
ஆதார் காலம் வேறு என்பது புரியும்.😍😍

நிரபராதி! - Mano Red



காதின் வெளியே 
நீட்டிக்கொண்டிருந்த மூளையை
கூர் தீட்டி
உண்மைக்குப் புறம்பாக
கொக்கரிக்கத் தயாரானது
ஆடம்பர வாய்மை.
கொலையோ, கொள்ளையோ
கற்பழிப்போ, கருக்கலைப்போ
எதுவாக இருப்பினும்
ஏகப்பட்ட பொய்களை
ஏழ்மைக்கு எதிராக
நா முழுக்கப் பூசி,
கருவாட்டுப் பானையை
எட்டி உதைக்கும்
ருத்ராட்சப் பூனை போல
சட்டங்களை மிதித்து
நீதி தேவதையின் கண் கீறி
தராசு தட்டை விலை பேசியது
ஆள்பவனின் பணம்.
“ஐயா நான் நிரபராதிங்க”
என்று கூண்டிற்குள் நின்று
குரல் கொடுததுக் குறுக்கிட்டவனை
“ஆர்டர்... ஆர்டர்...” என்ற மறுப்புடன்
“நீதிமன்றத்தை அவமதித்து
நீதிக்கு கலங்கமாக எதிர்த்துப் பேசிய
கடும் குற்றத்திற்காக
இரட்டை ஆயுள் தண்டனையுடன்
மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது”
என்று பேனா முள் உடைத்து வெளியேறியது
அன்றைக்கான நீதி.

வனாந்திரத்தின் ரயிலோசை! - Mano Red



அந்தரங்கமாக சில சலனங்களை 
எனக்குள் உருவாக்கியிருந்தான் அவன்!
மிகவும் பரிச்சயமான சாயலில்
போதிய உணவின்றி
பால்யத்தைக் கழிக்கும்
குழந்தை போலத் தெரிந்தான்.
எனக்கு நானே சமாதானம் சொல்லி
அவன் நினைவுகளிடமிருந்து
நழுவ முற்பட்டபோதுதான்
வேகமாக உள்ளிழுத்தான்.
அவன் துயரம் கண்டு
ஒவ்வொரு நாளும்
தொலைவிலேயே நிற்கும்
ரயிலோசை பற்றித் தெரியாமல்,
வனாந்திரத்தில்
காற்றின் ஓசையைக் கிழித்தபடி வரும்
ரயிலைப் பார்க்க வேண்டுமென்கிற
அவனுடைய அதிகபட்ச ஆசையை
என்னிடம் பகிர்ந்தான்.
ஈரக்களிமண்
காலில் ஒட்டியது போல
அவனுடைய பகல் இரவுகளால்
இன்னும் வசீகரித்தான்.
வறுமையின் கொடிய நிழல்
ஆசைகளை இருளுக்குள் அமிழ்த்தினாலும்
நிராதரவான வாழ்வும் மரணமும்
பாராமுக அன்பின் கண்ணீர்த்துளிகளுக்காக
இன்னும் இன்னும்
ஏங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.