www.gamblinginsider.ca

28 June 2015

சவரக்கடை மயிர்கள்..!!-Mano Red




ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக 
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால் 
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின் 
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட 
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு 
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள் 
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும் 
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின் 
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?