www.gamblinginsider.ca

30 September 2014

குப்பை கோபுரம்..!! - Mano Red

முன் எப்போதும் விட
சோகம் ததும்ப
வெம்பி இருந்தான் அவன்,
காரணம் கேட்டால்
குப்பையில்
பாலித்தீன் பைகள்
ரொம்ப கிடக்கிறதாம்....

சமூக அநீதி கண்டு
அநியாயத்திற்கு
வெகுண்டு எழுகிறான் அவன்,
சுத்தம் செய்யும்
அவனுக்கு தெரியும்
நல்ல குப்பையும்,
குப்பை மனிதர்களையும்....!

ஜனநாயகத்தின்
குப்பை சுவாசத்தை
குடித்து வாழ்ந்த அவனுக்கு
அழுக்கு என்பது
அழகிய ஆடை தான் ..!!

கிழிந்த காகிதங்கள்
சேகரிக்கும் அவனுக்கு,
ஆதிக்க சக்திகள்
அனைத்தையும்
கிழித்தெறிகிற
ஆண்மை இருப்பதில்
அத்தனை ஆச்சரியம் ஏதுமில்லை...!!

அடிமைளுக்கு முன்னால்
உயிர் பிடித்து
தலை நிமிர்ந்து எழுந்து
பிழைக்க தெரிந்த அவனுக்கு,
வாழ்வுரிமையை
தக்கவைக்க போராடும்
அவசியம் இல்லை...!!

நச்சென்று
அவன் சொன்னான்,
இறைவனின் கோபுரம்
பாவம் செய்த
மனிதர்களுக்கு மட்டும் தான்,
பாவப்பட்ட எங்களுக்கோ
குப்பை தான் கோபுரம்
பாலித்தீன் காகிதங்களே
அழிக்க முடியாத கடவுள்..!!

28 September 2014

தாடிக் கனவுகள்..!! -Mano Red



தாடியைச் சொறிந்தால் 
என்ன வருமோ தெரியாது..?
யோசனைகள் 
நிச்சயம் வருமென்ற
நம்பிக்கை ஆண்களுக்கு..!!

சம்பாதிக்கும் ஆசை 
அத்தனை இருக்கும்,
அதற்கான வழி
ஏழுமலை,ஏழுகடல் 
தாண்டி இருப்பது போல் 
பயமிருக்கும்...!!

கவிதை எழுதித் தள்ள
கற்பனை நிரம்பி இருக்கும்,
காதலும் காதலியும்
கடல் தாண்டி இருப்பதாய்-வெறும் 
கனவு மட்டும் மிச்சமிருக்கும்...!

திரைப்படங்கள் 
பார்க்கும் போதெல்லாம்
கதாநாயகனாக வாழ 
ஆசை இருக்கும்,
அப்படி வாழ்க்கை வாழ 
உருப்படியான கதை தான் 
கிடைக்காமலிருக்கும்..!!

உடனிருப்பவன் 
முன்னேறிப் போனால் 
பொறாமை ரொம்ப இருக்கும்,
உடனே அதிர்ஷ்டம் 
நமக்கு இல்லையென்று
தனக்குள் தானே 
சொல்வது போல் இருக்கும்..!!

தடம் பதிக்க 
நல்ல பாதை இருக்கும்,
பாதை தேடும் போது
தடம் மாறி
தவறுகள் செய்ய 
தனிமையும் இருக்கும்..!!

தாடி வளருவதில் 
பிரச்சினை இல்லை,
தாடி வளரும் போது 
ஆண்கள் வளராமல்
இருப்பது தான் பிரச்சினை,
முகம் பார்க்கும் 
கண்ணாடிக்கு தெரியும் 
ஆண்களின் மனதும்
அவனின் தாடியைப் பற்றியும்..!!

25 September 2014

பேய்ப்படம்...!! - Mano Red

அப்போது தான்
நினைத்து முடித்தேன்,
இரவு பயம்
நமக்கில்லை ,
தனியாக
தைரியமாக உறங்கலாமென்று...!

தெரியாமல்
அழுத்தியதில்
தொலைக்காட்சிப் பெட்டி
விழித்துக் கொண்டது
திகில் கலந்த
பேய்ப்படத்துடன்.....

வெளிச்சமிருந்தாலும்
இருள் சூழ்ந்த
அந்த இரவில்
எங்கோ பறக்கும்
வௌவால்கள்
என்னுள் பறப்பதை
உணர முடிந்தது..!!

நள்ளிரவில்
சட்டென சுற்றும்
மின்விசிறி,
அணைந்து எரியும்
விளக்கு வெளிச்சம் என
அத்தனை குளிரிலும்
வியர்வை வழிய
பயம் காட்டியது
ஒவ்வொரு காட்சியும்..!!

கதை கேட்டு
உறங்கப் போகும்
குழந்தைகள் தான்
எல்லாருக்கும் தெரியும்,
பேயாய் பேயுடன் வந்த
குழந்தையை பார்த்து
உறங்காமல் தவித்த
என் கதை
யாருக்கு புரியும்..??

பெண்ணைக் கண்டால்
பேயும் இறங்கும் என
என்ன அர்த்தத்தில்
எவன் சொன்னானோ..??
அத்தனை பேய்களும்
பெண்ணாக மட்டுமே
வருகிறது..!!

பேய்ப்படம் பார்த்த
இரவில் புரிந்தது,
பேய்களில் மட்டும்
ஆணாதிக்கம் அதிகமில்லை என்று..!!

21 September 2014

ஒரு வெளம்பரம்...!! - Mano Red



வெளம்பர உலகமிது,
வெற்று சுவற்றில் 
கம்பெனி பெயரை எழுதி
கவர்ச்சி படத்துடன் 
வியாபாரம் செய்து
பின்னேறும் உலகம்...!!

பிறந்தநாள்,
பூப்பு நீராட்டு விழா தொடங்கி 
எழவு வீடு வரைக்கும் 
வெளம்பரங்கள் 
அழுது கொண்டிருக்கின்றன..!!

மரம் நடுவதைப் பற்றி 
சொல்வதற்கு கூட,
மரத்தால் ஆன 
பலகையில் 
பச்சை மரம் வரைந்து 
விளம்பரம் செய்யப்படுகிறது..,!!

அறைகூவல் விடுக்கும் 
அந்நிய பொருள்களில்,
கூவிக் கூவி விற்கும் 
சத்தமெல்லாம் ,
சத்தமில்லாமல் 
போய்விட்டது...!!

வெறுங்கையில் 
முழம் போடுவதற்கு கூட,
தங்க நகை சூடிய
அலங்கார பெண்கள் 
விளம்பரமாக
தேவைப்படுகின்றனர்...!!

தன்னைத் தானே 
புகழ்ந்து,
உலகமே தன்னை 
திரும்பி பார்க்க வேண்டும்
என்பதற்காக 
இங்கே எல்லோருக்கும் 
தேவைப்படுகிறது 
ஒரு வெளம்பரம் ...!!

18 September 2014

மூடர்கள் கூடம்...!! -Mano Red

ஆயிரம் பெரியார்கள்
அடித்து சொன்னாலும்
ஆலமரத்தில்
அதிசயமாய்
பால் வடியும் என்று
சத்தியம் செய்து
சடங்கு செய்யும் கூட்டம் இது..!!

சுவற்றில் திரிந்த
பல்லி சொல்லும்
பேச்சை நம்பி,
பள்ளி செல்லும்
குழந்தையின்
படிப்பை நிறுத்தும்
முட்டாள் கூட்டம் இது..!!

அத்தனையும்
அழுகிய வெங்காயங்கள்,
பிள்ளை பெத்தாலும் அழுது
செத்தாலும் அழுது
கண்ணீர் விட்டு
கதறக் கூடிய
சந்தர்ப்பவாத கூட்டம் இது..!!

சாதி இன வெறி பிடித்த
சாக்கடை கழிவுகள்,
மலிவு விலையில்
இழிவு வந்தாலும்
மகிழ்ச்சியுடன் ஏற்று
மடிந்து போகிற
மனிதப் பிழை கொண்ட கூட்டம் இது..!!

வேற்றுமை
ரத்தம் குடிக்கிற
பகுத்தறிவு இல்லாத
அட்டைப் பூச்சிகள்,
இல்லாதவனுக்கு
இலை விருந்தும்,
இருப்பவனுக்கு
இல்லை என்றும் சொல்லக் கூடிய
இழிந்த கிழிந்த கூட்டம் இது. !!

கடவுள் இல்லையென
கத்தியின்றி
கத்தி சொன்னவரின்
கருப்பு சிலைக்கு,
காகித மாலை சூடி
கடவுளாக்கி
கை கூப்பி வழிபடுகிற
கயவர்களின் மூடர் கூட்டம் இது..!!

14 September 2014

ஓட்ட வாய்...!! -Mano Red

வாயுள்ள பிள்ளை
பிழைத்துக் கொள்ளும்,
ஓட்ட வாயுள்ள பிள்ளை
உளறினாலும்
பேசிப் பேசியாவது
பிழைப்பைத் தேடிக் கொள்ளும்..!!

அமைதியாக
பேசாமல் இருப்பது
ஒரு போர் குணம் எனில்,
எதாவது பேசிக்கொண்டே
எதிரியை பேச விடாமல்
நிலைகுலையச் செய்வது
எத்தனை பெரிய வீரதீரம்..!!

கல கலவென பேசினால்
எல்லாருக்கும் பிடிக்கும் போது
தொண தொணவென பேசினால்
ஏன் பிடிப்பதில்லை...??
காரணம் பேச்சில் இல்லை
பேசப்படும் விதத்தில் இருக்கிறது..!!

பேச்சின் வேகம் என்பது
நோண்டி நோண்டி
கேட்கப்படும் கேள்விகளின்
வேகம் பொறுத்தது..!
இதைச் சமாளிக்க
அதிக அறிவு வேண்டாம்,
அதிகப் பேச்சு போதும்...!!

பேச்சாளர் பேசினால்
அருமை என்று
சொல்வதைப் போல,
ஓட்ட வாயர்களின் பேச்சை
மொக்கை என்று சொல்லவும்
ரசிப்புத் தன்மை வேண்டுமே...!!

பேசினால் என்ன தப்பு..??
பேசினால் தப்பு இல்லை,
பேசிக் கொண்டே இருந்தால்
எல்லாமே நடந்துவிடும்
என்ற (மூட)நம்பிக்கை தான்
ஒப்புகொள்ள வேண்டிய தப்பு..!!

10 September 2014

அசைவக் காதல்..!! -Mano Red

நிலாக்கள் எல்லாம்
என்ன பாவம் செய்ததோ..?
காதலிகளை
வர்ணித்து வர்ணித்தே
வறண்டு விட்டது..!!
ஒற்றை நிலவுக்கே
இத்தனை போராட்டம் இங்கே..!!

மலரைப் போல அழகு,
மலரைப் போல சிரிப்பு,
மலரைப் போல வெக்கம்,
எதற்கெடுத்தாலும்
மலரையே சொன்னால்
மலர் என்ன செய்யும்..??
மலருக்கும் மனசாட்சி இருக்குமே..??

மயிலாக நடனம்,
குயிலாக பேச்சு,
அன்னப் பறவையாக நடை,
மானாக ஓட்டம் என
ஒரு விலங்கையும்
விட்டு வைக்கவில்லை..!!
காதலியைப் பற்றி சொல்ல
காட்டில் தான் அலைய வேண்டுமோ..??

காதலியை
இன்னும் கொஞ்சம்
ஆடம்பரமாக குளிர வைக்க,
தேவதைகளை
வம்புக்கு இழுத்து,
கடல் கன்னிகள் வரை
கற்பனை செய்து
மானத்தை விட்டு
பொய் சொல்வது நியாயமா ..??

பறப்பன,
நடப்பன,
ஊர்வன என
ஓரறிவு முதல்
ஐந்தறிவு வரை
தின்று தீர்த்த
அசைவக் காதலன்
சைவக் காதலியை
அவைகளுடன்
எப்படி ஒப்பிட முடியும்...???

காதலை அலங்கரித்து சொல்ல
மனித இனத்தில் பஞ்சமோ..?
காதலியை ஒப்பனை செய்ய
அழகு ஒப்பீடு அவசியமோ..?
வர்ணனை இல்லை என்றால்
காதலும் காதலியும்
என்னாகுமோ...??

07 September 2014

எல்லாம் அவள் செயல்...!! - Mano Red



பகலில் மட்டும் வருகின்ற 
பகல் கனவு அவள்தானே,
கொலையின்றி
உயிர் மட்டும் 
அப்படியே தின்கிறாள்....!!

நிஜங்களுக்குள் நிழலாக
நிற்பவளும் அவள்தானே,
வெயிலிலும்
விரும்பியே 
நட்சத்திரம் கேட்கிறாள்..!

பார்த்தவுடன் பிடிக்கின்ற 
குறுங்கவிதை அவள்தானே,
விழிகளில் 
வரிகளை 
மறைத்து வைக்கிறாள்...!!

தொட்டவுடன் சிலிர்க்க செய்யும்
பனிக்கட்டி அவள்தானே,
இதழ் அசைவில்
பதில் தந்து
உறைய வைக்கிறாள்...!!

நெஞ்சுக்குள்ளே கேட்கின்ற
இதய சத்தம் அவள்தானே,
எனக்குள்ளே 
ஏதோ ஒன்றை 
தினம் தேடச் சொல்கிறாள்...!!

சினுங்கலிலே சிறுபார்வை,
நெற்றி மேலே துளி வியர்வை,
கண்ணை சுருக்கி,
கூந்தல் ஒதுக்கி,
அழகுக்கு
ஆணவம் தருகிறாள்..!!

03 September 2014

வயிறு எரிச்சல்...!! -Mano Red

அதர்மமோ,
அநியாயங்களின்
முழு உருவமோ,
மனித உயிர் கேட்கும்
மனிதமோ..??
உயிரை பலி வாங்கவே
கூலி கொடுக்கும் முதலாளித்துவம்..!

வஞ்சமோ,
சூழ்ச்சியோ,
வயிற்று எரிச்சலோ..??
உழைப்பை திருடும்
பணக்கார கூட்டத்துக்கு
ஏமாந்த உயிர் என்றால்
மயிருக்கு சமமோ...,??

குளிரூட்டப்பட்ட அறையில்
குளிர் நீர் குடித்து
கேள்வி கேட்டால்
அவன் எஜமான்..!!
சிரிக்காமல் உண்மையாக
வேலை செய்த அவனுக்கு
இளிச்சவாயன் என்ற பெயரா..??

அழுக்கில்லா நகம்,
வெடிப்பு இல்லா பாதம் என
நச்சு சுமந்த
கால்கள் கொண்டு,
தாழ்ந்தவனை
நசுக்கி மிதிக்கும்
நஞ்சுப் பாம்பு கூட்டங்கள்
அந்த கொடிய முதலாளிகள்...!!

சோறு போடும்
அவர்களின் உழைப்பை திருடி
கூறு போடும்
களவாணி கூட்டங்கள்,
அழுக்கு படிந்தவர்களை
அடிமைப் படுத்தும்
கேவலமான பிறவிகள்..!!

தலை குனிந்து
வேலை பார்த்தவனை
தலை நிமிர விட மாட்டார்கள்
இந்த முதலை முதலாளிகள்,
பசி என்றாலும்,
உயிரே போனாலும்
எதிர் கேள்வி கேட்கவிடமாட்டார்கள்
இந்த சர்வாதிகாரிகள்..!!

01 September 2014

சுடாத பழம்...!! -Mano Red

என்னடா வாழ்க்கை..?
யாரோ கேட்ட கேள்வி இது,
வெற்றி மட்டும் போதாது
தோல்விக்கான நேரம் இது..!!

பூனை போன வழியில தான்
யானை போக முடியாது,
கேடு கெட்டுப் போனாலும்
பணத்தாசை நம்மை விடாது...!!

சொந்த பந்தம் எல்லாமே
நாடக கூட்டம் தான்,
பக்கத்துல வந்தாலே
எடுக்கனும் ஓட்டம் தான்..!!

புதுசு புதுசா வந்தாலும்
புடிச்ச வாழ்க்கை அமையாது,
படிச்ச படிப்பு என்னாச்சு
தெருவுல வந்து நின்னாச்சு..!!

உண்டியலில்
கள்ள நோட்டு போட்டாலும்
கடவுளுக்கு தெரியாது,
கீழே உருண்டு புரண்டாலும்
ஒட்டுற மண்ணு ஒட்டாது..!!

காலம் காட்டும் நல்ல நேரம்
அது ரொம்ப ரொம்ப தூரம்,
பாதி வாழ்க்கை சோகம்
இங்கே எல்லாம் கடந்து போகும்..!!

எவனோ பறித்து போட்ட
சுட்ட பழம் வேண்டாமே,
நாமே எட்டிப் பறிக்கும்
சுடாத பழம் வேண்டுமே..!!