www.gamblinginsider.ca

31 December 2014

கடைசி ஆசை-2014..!! - Mano Red

ஆவிகள் இருக்கலாமென
சொல்லத் தோன்றும்
என் தனிமையின் நாட்களில்,
கடந்த காலம் என்னை
தனிமையின் பிரதிநிதியாக
அறிவித்து இருக்கலாம்..!!

எனக்காக யாரும் அழாத போது
நான் அழுதிருக்கலாம்,
நிமிடங்களின் முட்கள்
நேரத்துக்கு நேரம்
என்னை மெய்ப்பித்துக் கொள்ள
நிறம் மாறியிருக்கலாம்..!!

திட மௌனமாகி
நான் இருந்த வேளை,
அப்பாலிருந்து சில
தீய சக்திகள்
துக்கம் விசாரிப்பதாக
தூண்டிச் சென்ற போது
என் உயிரை அசைத்து
உணர்வுகளை சரி பார்த்திருக்கலாம்..,!

என் வெக்கம் மானம் சூடுகளை
அக்கம் பக்கம் யாரும்
கவனிக்காத போது,
மெலிந்த என் வலிமைகளை
ஒன்று சேர்த்து
தூண்டில் புழு போல்
கரை ஏறத் துடித்திருக்கலாம் ..!!

கடந்த காலம் என்னை
வழி மறித்திருந்தாலும்,
மணலில் கட்டிய வீட்டை
இடித்து இடித்து கட்டும்
சிறுமியின் உள்ளங்கை அளவு
நம்பிக்கை எனக்குள் இருந்திருக்கலாம்..!!

கடைசி ஆசை என்னவென
யாராவது கேட்டால்
நானும் சொல்வேன்,
சிகப்பில் எல்லாம் வேண்டும்,
நிஜமாய் சிரிக்க வேண்டும்,
தனிமையை விட வேண்டும்,
நிறைவாய் உணவு வேண்டும்,
பக்குவமாய் அழ வேண்டும் ,
முடிவெடுக்க தகுதி வேண்டும்
இன்னும் இன்னும் சொல்வேன்..

நான் என்ன செய்யட்டும்..??
நம்பிக் கொடுத்தும்
திரும்ப வராத
கடன் போல
கடைசி ஆசைகளை
இறந்த காலத்திடம் கடனளித்து
தினமும் நாட்காட்டியின்
காகிதம் கிழித்து
எதிர்காலம் காத்திருக்கிறேன்...!!

28 December 2014

2050-ல் விவசாயம்...!!-Mano Red



அன்று வருடம் 2050..
நவீன பூமியை 
இடமும் வலமுமாக
ஒரு கேள்வி சுற்றி வந்தது,
'விவசாயம் எப்படி இருக்கும்'என.

துரதிஷ்டவசமாக 
விவசாயம் தெரிந்த அவனும் 
உயிரோடிருந்ததால்
அன்று கண்டிருந்த காட்சிகளோடு,
வெகுகாலத்திற்குப் பிறகு
பசுமை நினைவுகளுக்குள்ளும்,
பச்சைப் புல்களுக்குள்ளும்
பாதம் புதைப்பதாய்
மீள்கனவுக்குள் சென்று விட்டான்..!!

அவன் விழித்தது தான் தாமதம் 
அந்தரத்தில் தொங்கிய 
இயந்திரத்தில் உணவு பிறந்தது,
அறிவியலுக்கு கொஞ்சமும் 
அறிவில்லை,
தன் அகல வாய்க்குள் 
இயற்கையை விழுங்கி விட்டு 
இப்போது அழுவதை நினைத்து
அவன் சிரித்தான்...!!

இயந்திர உலகில்
விவசாயம் பற்றிய 
செய்முறை விளக்கம் இருந்தது,
ஆனால் 
செய்வதற்கு தான் ஆளில்லை,
ஒருவரை ஒருவர் 
முகம் பார்த்து விழித்த போது 
விவசாயம் தெரிந்த அவனை பார்த்து 
அனைத்து கைகளும் நீண்டது..!!

அவன் மட்டுமென்ன அந்த இறைவனா..? 
விவசாயத்திற்கு நிலம் வேண்டுமே
எந்த கட்டிடம் இடிப்பான்,
நீர் தேவைப்படுமே 
எந்த அறிவியலை கேட்பான்,
உழவு தெரிந்த உழவனை 
எந்த கிரகத்திலிருந்து அழைப்பான்..?

அவன் புலம்பினான்....
இந்த கெரகம் பிடித்த மனிதர்களுக்கு 
ஒரு மண்ணும் தெரியாத போது 
எந்த மண்ணை அள்ளி 
தலையில் போட்டுக் கொள்வது..?
பறக்க பழகாத 
அந்த மனித குருவிகளிடம் 
எந்த இரையை தேட பயிற்சி தருவது..?

மிச்சமிருந்த அவனும் அழுகிறான்,
விவசாயம் ஒன்றும் 
விஞ்ஞானம் போல 
விளையாட்டு இல்லை
சோதனை ஓட்டம் விடுவதற்கு,.!
முப்போக வரலாறு பற்றி
என்ன சொல்வது
இந்த நவீனத்தை நம்பிய
விஞ்ஞான அடிமைகளிடம்.....!

26 December 2014

தயவுசெய்து பேசுங்கள்...!! - Mano Red

பேச்சு....
இதுதான் உயிர் மூச்சென
பலருக்கு புரிவதில்லை,
பேசிப் பயனில்லாத நிலையில்
பேசி என்ன செய்வது...??
ஆயிரங்காலம் கடந்தாலும்
அன்புப் பேச்சு அவசியம் ..!!

பின்னாளில் வாழ்க்கை
இறுகிப் போகாமலிருக்க
மொழிப் புணர்தல் அவசியம் ,
துரித வாழ்வின்
வெளிப்பக்கத்து இரைச்சல்
நாலு சுவற்றுக்குள்
அமானுஷ்ய மௌனத்தை
விதைத்துவிடக் கூடாது..!!

வீட்டுக்குள் அகப்பட்டு
முகத்தை சுருக்கி,
உம்மென இருந்து,
அகோரமாக மூழ்கும் போது,
சிலாகித்து குலாவிய
நேசமிகு பொழுதுகள் எல்லாம்
தொலைந்து கடக்கின்றன....!!

நவீன வாழ்க்கை வீச்சுகள்
பேச்சை வேகமாக தொலைத்து
பலவீனமாக்கி விட்டது,
காதலில்,பாசத்தில்,கோபத்தில்
காட்ட வேண்டிய
பேச்சுக்கள் எல்லாம்
அயற்சியில் காணாமல் போய்விட்டது...!!

அப்புறம் என்ன...??
என்ற அளவில்தான்
பல பேச்சுக்கள் முடிகின்றன,
முகம் கொடுத்துக்கூட
பேசமுடியாத அளவுக்கு
எந்த விதத்தில் என்ன
குறையோ தெரியவில்லை..!

கடுங்கோடை வெயிலில்
கதறிய நாட்கள் கூட
துன்ப இன்பம் பொறுக்கும்,
பேசாமல் தவறிப்போனால்
குளிர் காலங்கள் கூட
விரக்தியில் எரிந்து போகும்..!!
எப்போதாவது வரும்
ஓரிரு வார்த்தைகள்
தீக்குளிக்க துணிந்துவிடும்...!!

மானமில்லாத
அமைதி தீர்மானங்களை
ஒதுக்கி வையுங்கள்,
உள்ளத்தின் ஆழ்ந்த
சமிக்ஞைகளை
பேசித்தான் தீர்க்க முடியும்
தயவுசெய்து மனம்விட்டு பேசுங்கள்,
அது முடியாதபோது
உங்களுடனாவது பேசுங்கள்..,!!

23 December 2014

நெடில் அல்ல குறில்...!!! - Mano Red

முதன் முதலில் எழுதிய
அந்த கவிதையில் வடிந்த
அத்தனை எழுத்துக்களும்
உயிர் எழுத்துக்கள் தான்,
ஆம்
உயிரில் தடவி
உணர்வில் வழித்தெடுத்த
வார்ப்பு வார்த்தைகள்..!!

அடுத்த வார்த்தையின்
அமைப்பை அதன்
அமைதி குலைக்காமல்
அடுக்க எண்ணி,
'ஆ' நெடில் அல்ல
'அ' குறில் என தொடங்குவதாய்
அமைத்த போது
அத்தனையும் அழகியின் ஆணவங்கள்..!!

நாள் பார்த்து
நாழிகை பார்த்து
தவித்து கிடந்து காத்திருந்தேன்
அடுத்த வரிக்காக.....
ஆள் அரவமில்லாத
நடுக்காட்டில்
வழிமறந்த அறிவாளியின்
உளறல் போல
மார்புக் கூட்டை கிழித்து வந்தது
இன்னொரு கவிதை வடிவம்...!!

அந்த கவிதையிலிருந்து
காதல் ரசம் சொட்ட சொட்ட
தனியாக நெளியும் என்
மென் வரிகளுக்கு,
மண்ணிலிருந்து கொஞ்சம்
விண்வெளிச்சம் காட்டினால்,
அது
இன்னொரு காதலுக்கு
தூது போகும்..!!

காற்றோ கடவுளோ
தீர்மானித்த கணம் அது,
ஓசையின்றி காம்பு துறக்கும்
மலரின் கள்ளத்தனம்
உன்னதமெனில்,
யாருக்கும் உறுத்தாத
சேதாரமில்லா வார்த்தைகளில்
ஆதாரம் காட்டும்
அந்த காதல் சாரா
காதல் கவிதையும் உன்னதமே...!!

21 December 2014

பேய் அறைஞ்ச மாதிரி...!! -Mano Red



இது பொம்பள சாமி,
அது ஆம்பள சாமின்னு
கடவுளுக்கும் சாதி பிரிச்சு,
பக்திக்கு நடுவுல
பாகம் பிரிச்சு கோடு போட்ட
பாழடைந்த உலகம் இது..!!

இருட்டுல திடுக்குன்னு
ஒரு உருவம் பார்த்ததும்,
கடவுளா இருக்குமுன்னு யாருமே
சந்தேகப்பட்டதில்ல..!!
பேய் பிசாசு போல
கடவுளுக்கு
இருட்டுல வேல இல்லன்னு
அத்தன நம்பிக்கை...!!

இந்த காலத்துல
ஒவ்வொரு சாமிக்கும்
ஒரு தனிக்கோவில் இருக்கு,
ஆனால்
எந்த கோவிலுக்குள்ளும்
ஒரு சாமிய கூட காணல..!!
ஒருவேள சாமியெல்லாம்
சாமி பார்க்க போயிருக்குமோ..!!

எதிர வர்றவனுக்கு
காட்சி தரனும்ன்னு,
இடமாகவோ இல்ல
வலமாகவோ
அவசரமாய் நகர்ந்து
அமர்ந்து கொள்கிறார் கடவுள்..!!
மக்கள் கூட்டத்தில்
அவர் தான்
பிரபலமாகி விட்டாரே
இன்னுமென்ன ஆசையோ..??

கடவுளும் காசு பார்க்க
தொடங்கிவிட்டார்,
பணம் வாங்கிக் கொண்டு
சிறப்பு தரிசனம் காட்டுகிறார்,
வரிசைல நின்னு
வாடி வதங்கி வர்றவனுக்கு
வெறும் வெளிச்ச புகை காட்டுகிறார்..!!

கடவுள் பற்றிய உண்மய
இன்னும் சொன்னா
பேய் அறைஞ்சது போல
அதிர்ச்சியா தான் இருக்கும்,
அப்போ கூட
கடவுள் அறைஞ்ச மாதிரி
இருக்கவே இருக்காது..!!

16 December 2014

கசப்பு மருந்து..!! - Mano Red

பெயர் தான் பசுமைப் புரட்சி..!!
பூச்செடி வளர்க்க
ரசாயன பூச்சிக் கொல்லி..!!
கொன்றது
மரப் பூச்சியை மட்டுமல்ல
மனிதப் பூச்சியையும் தான்..!!

வியர்வை தாங்கிய நிலங்கள்
விஷம் தாங்கிய மருந்திற்கு
விருந்தாகி விட்டன...!!
சுற்றி சுற்றி
சுற்றுப்புறம் அழித்து
மண் இப்போது
மண்ணாகிப் போய்விட்டது ..!!

பூச்சிகளுக்கும்,மனிதனுக்கும்
நடக்கும் உலக யுத்தம் இது,
பூச்சிகளின் தொடர் வெற்றியை
சகிக்க முடியாமல் சாயம் பூச,
மனிதன் கண்டுகொண்டது
பூச்சிக் கொல்லி நஞ்சு..!

நஞ்சு ஊறிய
கசப்பு மருந்து அருந்தியே,
மனிதனும்,
கால் நடைகளும்
நரம்பு மண்டலம் பாதித்து
நடைபிணமாக அலைகிறார்கள்..!!

நாம் ஒட்டுமொத்தமாக
விஷச் சூழலுக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என
நடுக்கமாக இருக்கிறது..!
ஐந்தாம் தலைமுறை இங்கே
ஆயுள் குறைத்து வாழ்கிறது..!

பூச்சிக் கொல்லிகள்
மனிதனைப் பார்த்து
ஏளனமாக சிரிக்கின்றது,
தேனீக்கள் இல்லா உலகில்
மகரந்த சேர்க்கை இல்லை,
மகரந்த சேர்க்கை இல்லாத போது
தாவரங்கள் இருக்காது,
தாவரங்கள் இல்லையெனில்
மனித குலமே இல்லை..!!

இப்போது இருப்பது
இயற்கையா..? செயற்கையா..??
உயிர் போகும் ஆபத்தை
உணர வேண்டும்..!!
ரசாயனம் தவிர்த்த உலகை
ரசிக்க வேண்டும்..!!
இயற்கைக்கு இசைவான
இயல்பு வாழ்க்கை தான்
இதற்கு சாத்தியமான தீர்வு..!!

14 December 2014

மூணாவது மனுசன்...!! - Mano Red



நீங்கள் யாரென்று 
எனக்கு தெரியாது...
நீங்கள் அணிந்து திரியும்
மனித முகமூடியுடன் தான்
எனக்கு பழக்கம்..!!

உங்களை கூட்டத்தில் தொலைத்து
நேற்று தான் கண்டெடுத்தேன்,
முகத்தில் உங்களின்
ரேகைகள் காணவில்லை,
வேறு யாருடையதாக இருக்குமோ..??
இதற்கு என்ன அர்த்தம்
யார் போல வாழ ஆசை கொண்டு
இப்போது நீங்கள் நடிக்கிறீர்கள்...??

உங்களின் சட்டையை
இறுக்கிப் பிடித்துக் கேட்கிறேன்,
நிழலுக்கு தெரியாமல்
குடை பிடித்தாலும்
கடந்துவிடப் போகும்
காலத்தை எங்கே தொலைப்பது ..??
கனவுகளை எங்கே மறைப்பது ..??

உங்களுக்கு நீங்கள்
கறுப்பு வெள்ளை
வண்ணமடித்தாலும்,
இருள் மேகத்தின்
இறுதி மழையை தடுக்க முடியாது..!!
இறப்பது போல
கனவு கண்டாலும்
பிறப்பது போல கனவு வராது..!!

நீங்கள் அறிவாளிகள் தான்
ஒரு இறைவன் பொய்த்தால்,
வேறு இறைவனை
தேடிப்போவீர்களே தவிர,
முட்டாள்தனத்தை என்றுமே
கைவிட மாட்டீர்கள்..!!
யாருக்கு என்ன லாபமோ..??

என் இதயத்தின்
பகுதிகள் சிலவற்றை
நீங்கள் நல்வாசம் கொண்டு
நிரப்பியிருந்தாலும்,
ஆழ்மனம் உங்களை
மூணாவது மனுசனாகவே
மூடி மறைக்கிறது...!!

11 December 2014

கொய்யா பழம்...!! -Mano Red



கண்ணு காது மூக்கு வச்சு 
காதல் கொண்டேனே,
கண்டதுமே காதல் சொல்லி 
பறந்து வந்தேனே,
கடைசி வர நகத்த கடிச்சே
நாசமாப் போனேனே..!!

அவ போறபோக்குல
பொறம்போக்கா நான் நின்னேனே,
ஆறு முறை மொறச்சுட்டு
அப்புறம் பாத்தேனே,
மீதி கொஞ்சம் இருந்துச்சு
அதிசயமுன்னு வியந்தேனே...!!

யாரும் கொய்யா பழம் அவள
கொய்ய வந்தேனே,
தும்மலுக்கு நூறு வயசுன்னு
பொய்யா சொன்னேனே,
இங்கனயே இளிச்சுகிட்டு
என்னயே தொலச்சேனே..!!

திடீருன்னு என்னாச்சோ
நெஞ்சுக்குள்ள வேலி செஞ்சு
தள்ளி வச்சாளே,
நாக்கு மேல பல்ல போட்டு
கொள்ளி வச்சாளே,
மூடிட்டு போக சொல்லி
மூஞ்சில அடிச்சாளே..!!

என்னமோ தெரியல
எட்டி மிதிச்சாளே,
சீச்சீ இது புளிப்புன்னு
துப்பி எறிஞ்சாளே,
கொச்சையான வார்த்தயில
காதல கொன்னாளே .!!

விழியில் விடுதல காணாத
அடிமை நான்தானே,
அசிங்கம் பார்க்காத
சிங்கமும் நான்தானே,
கசங்கிய காகிதத்துல
கவிதயும் நான்தானே,
அதிகமா அனுபவிச்சாலும்
கொடுமை தான் என்பேனே..!!

எங்க ஊரு மீசைக்காரன்...!! - Mano Red

அமரகவியே சொல்...
முறுக்கு மீசையும்,
முண்டாசு தலையும்,
மிடுக்கும் தோற்றமும்,
மிரட்டும் பார்வையும்,
மின்னல் நடையும்,
மீள்பதிவுப் பேச்சும்,
மீண்டும் நாங்கள்
காண கண் கூடுமோ...???

அமரகவியே சொல்...
கவிதைக் குவியலும்,
கருத்துக் பெட்டகமும்,
கோப உரைகளும்,
கொட்டுமுரசுப் பாக்களும்,
தாய்த் தமிழ் முழக்கமும்,
திகட்டாத கவிகளும்,
மீண்டும் நாங்கள்
கேட்கும் நிலை கூடுமோ..??

அமரகவியே சொல்...
பால்ய விவாகம் அழிக்க
பாம்பாய் சீரிய வன்மையும்,
தமிழ் தான் இனிமையென
தரணியெங்கும் சொன்ன வீரமும்,
புவியில் தீண்டாமை தீயணைக்க
பூ நூல் அறுத்த துணிவும்
மீண்டும் நாங்கள்
கேட்டு அறிய கூடுமோ..??

அமரகவியே சொல்...
சுட்டெரித்த அனலாய்
சுதந்திர கவியும்,
வெள்ளையன் முகத்திரை கிழிக்க
வெளிச்ச கட்டுரையும்,
அடிமைத்தனம் நீங்க
அடிகள் பலவும்
சிரித்தே சுமந்த உன்னை
மீண்டும் நாங்கள்
தழுவ கை கூடுமோ..??

அமரகவியே சொல்...
நீவீர் இறந்து விட்டீரென
எவன் கதைக்க முடியும்,
கவிதை உள்ளவரை
கவிக் கடவுளாய்
நீவீர் எங்களுடன் தான் இருப்பீர்..!
மீண்டும் உன்னை இழக்க
நாங்கள் ஒப்ப மாட்டோம்...!!

07 December 2014

இரட்டை அர்த்தங்கள்..!!-Mano Red



இப்போது மட்டுமல்ல
எப்போதும்
இரட்டை அர்த்தங்களில்
முதல் அர்த்தத்தை
முந்திக் கொண்டு,
இரண்டாவது அர்த்தம் தான்
முதலில் யூகிக்கப் படுகிறது..!!

இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு,
நனைத்து விட்டுப் போனது
நனைந்த இடம் மட்டுமல்ல
நனையாத இடமும் தான் ..!!

வாசல் வரை வரும் நிலா,
நள்ளிரவில் வீட்டிற்குள்
அழைப்பதை விட
விடாப்பிடியாய்
இழுப்பதையே விரும்புகிறது..!!

ஆசை இன்னும் வேகவில்லை,
கடைசியில் மிஞ்சிய
வெப்ப அளவு கூட
குளிர்ந்து விட்டது,
வெந்து விட்டதா என அறியாமலே
ஆசையும் தீர்ந்து விட்டது..!

இன்னும் அங்கு
செல்வதற்கான வழி
கிடைத்த பாடில்லை,
அதற்குள் தப்பிக்க வழியின்றி
அத்தனை வழிகளும்
வலியுடன் மூடப்படுகிறது..!!!

அதைப் பற்றிய ரகசியங்களை
எங்கே பேசுவது,?
எவ்வளவு பேசுவது,?
எப்படி பேசுவது.?
பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை,
பேசாமல் இருந்தாலும்
ரகசியம் காக்கப்படுவதில்லை..!!

என்னடா கொடுமையிது
அர்த்தமில்லாமல் இப்படி
இரண்டு ஒற்றை அர்த்தத்தில்
எழுத வேண்டியிருக்கிறது
இந்தக் கவிதையை...!!!

04 December 2014

குரங்கு மனம்...!! - Mano Red

ஒன்றிலிருந்து ஒன்பது
எட்டிலிருந்து எழுபது
இப்படி கணக்கு வழக்கில்லாமல்
ஏட்டிக்கு போட்டியாக
தாவுகிறது பாவி மனம்...!

முயலைப் பார்த்ததும்
ஓட்டமாய் ஓடுகிறது,
ஆமையை நினைத்தாலே
அடக்கமாய் அடங்கி விடுகிறது,
நிமிடத்திற்கு ஒரு முகம்
நொடிக்கு ஒரு மனம் என
குரங்காய் கூத்தடிக்கிறது...!!

நன்றாகவே யோசிக்கிறது
அதிலொன்றும் குறையில்லை,
நேற்றிரவு
சரியென ஆமோதித்த ஒன்றை
இன்றிரவு
தவறென அவமதித்து
வேறு ஒன்றிற்கு
பாய்ந்து விடுகிறது..!!

துன்பம் கண்டு
எளிதில் இறங்கினாலும்
யோசிக்காமல் மீண்டும்
அங்கேயே ஏறி நிற்கிறது,
என்ன செய்தாலும்
பாதியில் தொங்கி
ஆட்டம் போடுகிறது..!!

ஆசைப்பட்டதையெல்லாம்
பறித்துப் புடுங்க
ஆளாய்ப் பறந்தாலும்,
முடியா சூழ்நிலைகள்
சூழும் போதெல்லாம்
பிரச்சினை கண்டு
பறந்து ஓடி ஒளிகிறது..!!

ஆகவே
இன்று புரிந்தது
மனிதன் குரங்கிலிருந்து
வரவில்லை,
குரங்கு இனத்திலிருந்து
விரட்டப் பட்டிருக்கிறான்...!!

02 December 2014

இது குளிர்காலக் கவிதை...!! - Mano Red

குளிரில்
மனம் விட்டு பேச
ஆசை தான்..,
மனதை எங்கோ விட்டு விட்டு
யாரிடம் எதைப் பேச...!!

இழுத்து போர்த்தினாலும்
குளிர் வந்து
வம்புக்கு இழுக்கிறது,
கூடவே
மனம் போனால் பரவாயில்லை
மானமும் போகிறது ...!!

குளிரில்
கடிப்பதற்கு எதுவுமில்லை,
அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை,
பற்களுக்கு கடிக்க
பற்கள் இருக்கிறது..!!

முடிகள் பேசி
விடாமல்
முடிகளுடன்
முடிகள் பேசி
அமைதி கொள்கிறது குளிர்...!!

ஆமாம்
குளிருக்கு கொஞ்சம்
குளிர் விட்டுத் தான் போனது,
அனல் தெளிக்கும்
மூச்சைக் கக்கினாலும்,
அடங்க மறுக்கிறது..!

குளிரின் கதவுகளுக்கு
கூச்சம் ஏதுமில்லை,
கதகதப்பின் கள்ள சாவிக்கு
தூக்கத்தின் வாசலை
விலையின்றி
விற்பனை செய்கிறது..!!

எல்லா குளிர் காலமும்
ஏன் என்று
காரணமில்லாமல்
ஏக்கத்துடனே முடிகிறது,
தொல்லை தான்
இருந்தாலும்
மீண்டும் வர வேண்டும்..!!