www.gamblinginsider.ca

21 August 2017

ஞாயிறு உளறல் 3

மனதில் பல்வேறு வகையான சிந்தனைகள் தோன்றும்.
1. "நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்" வகை தெளிவான குழப்ப சிந்தனை.
-
இந்த நாள் இப்படியாக அமைந்தது. நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்தால் எப்படி இருக்குமென்ற சிந்தனை மனதிற்குள் பட்டாசு வைத்தது. பட்டாசின் நீளத்திற்கேற்ப அந்தச் சிந்தனையின் நீட்சி ஒவ்வொரு உறவினரின் இறப்பாகத் தொடர்ந்ததே தவிர மனதின் இறகுக் கடிவாளத்துக்கு கட்டுப்படவேயில்லை. வேறு எதைப் பற்றி நினைத்தாலும் அத்தனையையும் அமுக்கி அதன்மீது அமர்ந்து மனம் முழுக்க இறப்பின் கவலைகளைப் பரப்பியது. பல Anxiety சிந்தனைகளைப் பார்த்து மனம் பழகியிருந்தாலும் Death anxiety கண்டு பதறித்தான் போகிறது. சாவின் மீதிருக்கும் இயற்கை மீறிய பேரச்சம் (thanatophobia) மனதை மேகமாக மூடியிருக்கும்போது கண்ணீர் மழை பொழிவதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது மொத்த மனதையும் கன்ட்ரோலுக்குக் கொண்டுவர ஸ்விட்ச் ஆஃப் அல்லது ரீஸ்டார்ட் செய்ய வேண்டியது அவசியம். அதற்காக வலிந்து வேறு ஒரு சிந்தனையை மனதிற்குள் புகுத்தி 'அடேய்.. இதை மறந்துட்டு அதை நினைடா' என்றெல்லாம் மனதை மாற்றியமைத்து அதிலிருந்து வெளிவருவதற்குள் அப்பப்பா...! நாம யாருன்னு நமக்குதான தெரியும்.
2. "ஐய்யோ.. இப்போ நான் எதையாவது வாங்கணுமே.. இந்த தெரு என்ன விலைன்னு கேளு" வகை தாறுமாறு சிந்தனை.
-
இறப்பு போன்று மனதை மீறிய மனதின் சிந்தனைகள் பல. விரும்பும் பெண் பற்றிய தவறான சிந்தனை, எதிர்காலம் பற்றிய சிந்தனை, யாராவது காரில் போனால் நாமும் காரில் செல்வது போன்ற சிந்தனை, ஒரே பாட்டில் பணக்காரனாகும் சிந்தனை, இன்னொருவர் போல் புகழ் பெறும் சிந்தனை என இப்படிப் பல. நோலனின் #இன்செப்ஷன் படத்தில் கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் ஒரு கனவை உருவாக்கி அடி மனதின் ஆழத்தில் நினைவுகளை விதைப்பது போல பல கவலைகளின் கவலைக்குள் நுழையும் அத்துமீறிய சிந்தனைகள் அடி மனதைச் சிதைக்கும். தவறு எது சரி எது எனத் தெரியாமல் தாறுமாறாக யோசித்து ஏதொவொரு வகையில் அதுவாகவே அடங்கும். ஏன்னா நம்ம டிசைன் அப்படி.
3. "க்ரீஸ் டப்பாவ எப்டி எட்டி ஒதச்ச?" வகை டென்ஷன் சிந்தனை.
-
மனதின் கட்டுப்பாடு இல்லாமல் யோசனை என்பது இப்படி ஏதாவது ஒரு வகையில் வெளிப்பட்டு மனதிற்குள் பாறைகளை விதைத்துக்கொண்டுதான் இருக்கும். 'இன்று நாம் டென்சன் ஆகக்கூடாது' என்று மனதை தயார் செய்துவிட்டு வெளியே கிளம்புவோம். அதுவரை அமைதியாக இருக்கும் நம்மிடம் ஏதாவது ஒரு சண்டையோ, வாக்குவாதமோ வரும்போது, 'டென்ஷன் ஆகாத... டென்ஷன் ஆகாத...' என்று நினைக்கும் கடவுள் மனதை ஓரங்கட்டிவிட்டு வெடித்தெழுந்து கோவத்தின் உச்சியிலேறி மிருகமாகக் கத்தும்போது சிந்தனைக்குள் ஏதோவொன்று கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கும். பேய் பிடித்து ஆடியவர்களும், சாமி வந்து ஆடியவர்களும் உணர்வதுபோல, அந்த டென்ஷன் தணிந்தபிறகு, உடலிலும் மனதிலும் பெரிய அலுப்பை உணருவோம். அதன்பிறகும் நடந்த விஷயத்தை மறக்காமல் பலமுறை மனதிற்குள் ரீவைண்ட் ஓட்டி ரீல் அந்துபோகும் வரை அதையே நினைத்து நினைத்து நம்மை நாமே வெறுத்து, இனிமே இப்படி டென்ஷன் ஆகக் கூடாது எனுமளவுக்கு மனதைக் கீறிக் கிளறி உப்புமா மாதிரி ஒரு வழிசெய்திருப்போம்.
4. "கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியா இருக்கணும்டா" வகை விவகாரமான சிந்தனை
-
இதற்கு முன்பு நேரில் பார்த்திடாத, புதிய இடத்திற்கு நாம் செல்லப்போகிறோம். ஒரு பாத்திரக்கடை முதலாளி நமக்கு வேலை தருவதாகச் சொல்லி அழைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் செல்வதற்குமுன் அந்த இடம் பற்றிய கற்பனை நமக்குள் உருவாகிவிடும். சினிமாவுக்கு செட் போடுவதுபோல பாத்திரக்கடையை வடிவமைத்திருப்போம். நாம் பார்த்த பல பாத்திரக்கடைகளின் மாதிரியைக் கலந்து நாளை பார்க்கப் போகிற கடையை மனம் உருவாக்கிவிடும். இந்தச் சிந்தனை இடத்திற்கு மட்டுமல்ல நாளை புதிதாகச் சந்திக்கவிருக்கிற நபர்களுடனான உரையாடலையும், எப்படி நிற்பது, எப்படிப் பழகுவது, சுற்றி வானம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கூட கற்பனையை விரித்திருப்போம். மறுநாள் அங்கு செல்லும்போது நாம் நினைத்ததுபோல கொஞ்சம்கூட இருக்காது. அவ்வளவுதான் சூட்டிங் முடிந்தது என போட்ட செட் எல்லாவற்றையும் கழற்றி பாத்திரக்கடை ஓனர் மீது படாதவாறு மனதும் ஒவ்வொன்றாக வீசி எறியத் தொடங்கும்போதுதான் சிந்தனை கடந்த நிகழ்காலத்திற்கு வருவோம்.
உளறுனது போதும் மூதேவி. போ! (வெண்ணிற ஆடை மூர்த்தி வாய்ஸில் மைண்ட் வாய்ஸ்)
Mano Red / 20.8.17