www.gamblinginsider.ca

20 November 2017

அவள் அப்படித்தான் 😍 -Mano Red


-
இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் இதை ஒரு சாதாரண படமாக கடந்து வர முடியாது. சாந்தமான நாயகி, காதலன் ஏமாற்றியதும் தற்கொலை செய்யும் நாயகி, தொட்டவுடன் கற்பு போனதெனக் கதறும் நாயகி, எதற்கெடுத்தாலும் அழும் நாயகி என கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்குள் இருந்த நாயகி கதாப்பாத்திரத்தை கட்டுடைக்க வந்தவளே மஞ்சு! ஒட்டுமொத்த நாயகிகளின் மரபுகளையும் உடைத்தாள்; பேச்சில், செயலில், பார்வையில், கோபத்தில் என ஒவ்வொரு பிரேமிலும் நாயகியாக ஜொலிப்பாள். தற்போதைய ஆல்தியா ஜான்சன் (தரமணி), லட்சுமி போன்ற புதுமைப் பெண்கள் அத்தனை பேருக்கும் முன்னோடி மஞ்சு. அவள் இப்படித்தான்!
படத்திற்குள் போகலாம்.
'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு ஆட்டக்காரி சொல்வதில் இருந்து ஆரம்பிக்கும் படம். ஆண்களால் ஆண்களுக்காக படைக்கப்பட்டது பெண்ணுலகம் என்கிற பிம்பம் அங்கிருந்து ஆட்டம் காண ஆரம்பிக்கும். துப்பாக்கியில் இருந்து தெறிக்கும் தோட்டாக்கள் போல ஒவ்வொரு வசனமும் ஆணாதிக்கம் மீது தெறிக்கும். அதே தோட்டாக்கள் சமூக சேவகி போன்ற போலியான பெண்களின் மீதும் படும். பெண்களைப் பற்றி குறும்படம் எடுக்க வரும் கமலுடன் சமூக சேவகி ஒருவரைப் பேட்டி காணச் செல்லும்போது, மஞ்சு கேட்பாள் "உங்கள மாதிரி ஆட்களுக்கு வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , Society make up ஒன்றே போதும்" என்றவாறு ஆங்காங்கே வெடித்துச் சிதறுவதுபோல மஞ்சுவை வடிவமைத்திருப்பார் ருத்ரய்யா.
இதில் ஆண் கதாபாத்திரங்களைப் பற்றி இறுதியாக பேசலாம். ஏனெனில் மஞ்சு இன்னும் அதிகம் பேசப்படவேண்டியவள்.
போலி பிம்பங்களையும், செண்டிமெண்ட் டயலாக்குகளையும், பரிவாக, பாசங்காக, மேலோட்டமாக தன்மீது படும் பாச பசப்புகளையும் அடித்து நொறுக்கிக் கொண்டே இருக்கும் மஞ்சு தன்னையும் ஒரு புதிராகவே வைத்திருக்கிறாள்.
அடிப்படையில் மஞ்சு யாரெனில், கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள். தாயின் கள்ளத்தனங்களையும், தன்மீதான பாலியல் சீண்டல்களையும், ஏமாற்றங்களையும் தனக்குத் தெரிந்த ஆண்களின் துரோகத்தால் அனுபவிக்கும் மஞ்சு தன் எதிர்ப்படும் அத்தனை ஆண்களையும் வெறுத்து வறுத்தெடுக்கிறாள்.
முதலில் ஏமாற்றும் காதலன், அடுத்து அவளைச் சீரழித்துவிட்டு தங்கை எனக்கூறி கழட்டிவிடும் காதலன், உடன் இருப்பவர்கள் இவள் ஒரு அப்படி இப்படி கேரக்டர், படுக்கைக்கு மட்டும் ஆண்களைத் தேடுபவள் எனப் பேசக் கேட்பது என்று மஞ்சுவின் உலகமும் உறவுகளும் அவள் வெறுப்பதாகவே இருக்கின்றன. இருந்தாலும் உறவுக்காகவும் அன்புக்காகவும் ஏங்கும் மஞ்சு இரு முறை ஏமாந்த பிறகும் மூன்றாம் முறையும் ஏமாறத் தயாராகிறாள். அதுவும் காதலின் பெயரால். எல்லோரும் என்னை ஏமாற்றும்போது நான் ஏன் என்னையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்கிற மனநிலையில் எல்லா நிலைகளிலும் தன்னை வருத்தி, மகிழ்ந்து தெளிவாகவே கடந்து வருகிறாள்.
இதில் கமலுக்கு ஜென்டில்மேன் கதாபாத்திரம், ரஜினிக்கு வேசமில்லாத யதார்த்தமான அப்பட்டமான ஆண் கதாபாத்திரம். (இப்படிப்பட்ட நடிகன் ரஜினி, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குள் குறுகியது வருத்தமே)
கமல் பெண்ணுரிமை பேசுகிறான், பெண்ணின் சுதந்திரம் பற்றி கவலை கொள்கிறான். மஞ்சுவின் சோக வரலாறுகளின் பக்கங்களை பரிவுடன் படிக்கிறான். கடைசிவரை அவளைப் புரிந்துகொள்ளாமல், புரியாத புதிராகவே இருக்கும் அவளிடம் தனது காதலைச் சொல்லத் தெரியாத பெண்ணிய சுதந்திரம் பற்றிக் கவலை கொள்ளும் கமல், மஞ்சுவைக் காதலிப்பதாக அவள் தோழியிடம் சொல்லி ஒரு புனிதனாகக் காண்பிக்கும் வேளையில் மஞ்சு வெறுக்கும் ஆண்களின் உலகத்தில் இருக்கும் விளக்குகள் அத்தனையும் அணைந்து எரியும்.
கமலின் நண்பனாக, மஞ்சுவின் முதலாளியாக, ரஜினிகாந்த். நெற்றியில் விபூதியுடன் மது, மாது என்று வாழும் சராசரி ஆண். பெண்களை போதைப் பொருளாக எண்ணி சந்தர்ப்பம் கிடைக்கும்போது அனுபவிக்கும் சுகவாசி. அவர் வில்லனல்ல. வக்கிரமான சந்தர்ப்பவாதி. ஆணாதிக்கவாதி. மஞ்சுவிடம் தவறாக நடந்துகொண்டு அடிவாங்கிய பிறகு "ஒரு ஆம்பள, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகணுமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகணுமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்" என்பது நடைமுறை யதார்த்த உச்சம்.
பெண்களின் கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடைவெளியில் இருக்கும் வாழ்க்கையை கத்தி மீது பூ சுமந்து நடப்பதுபோல ஸ்ரீப்ரியா நடந்து வாழ்ந்திருப்பார். அவரைத் தவிர மஞ்சுவாக வேறு யாரும் நடிக்க முடியாது என்பதுபோல அழகான ராட்சசியை அத்தனை அழுத்தமாக பிரதிபலித்திருப்பார்.
இதற்கிடையில் காற்றிலாடி கரைந்திருக்கும் ஞானத் தகப்பனின் இசை பற்றிச் சொல்லவா வேண்டும்!
Climax:
கமல் மனைவியிடம் 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிற' என்று மஞ்சு கேட்க ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என அவள் சொல்ல 'அதனாலதான் நீ சந்தோஷமா இருக்க' என்று சொல்லும் மஞ்சு அவர்களை விட்டு அந்த இடத்திலிருந்து பிரிவாள்.
அவள் மீண்டும் இறந்து போனாள்
அவள் இறப்பாள்
பிறப்பாள்
இறப்பாள்
அவள் அப்படித்தான்!
Mano Red / 19.11.17