www.gamblinginsider.ca

26 September 2017

ஞாயிறு உளறல் 8


40 பக்க நோட்டை எடுத்து 'இந்த ஊருக்கு என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வேன்' என்று ஒவ்வொரு நாள் காலையிலும் குளித்துவிட்டு 1008 முறை எழுதவேண்டுமென்று தோன்றும். அந்த அளவுக்கு என் சுயத்தை மறைத்து ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் ஒரு முகத்தைப் பொருத்தி எனக்குள் நானே ஒத்திகை பார்க்கிறேன். இருந்தாலும் ஒத்திகை ஒத்துழைப்பதில்லை. நல்லவனோ கெட்டவனோ எதோவொரு விதத்தில் சுயம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆனால், எதிரில் இருப்பவர்களால்தான் சுய முகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. நாம் எப்படிப்பட்டவர்கள் எனத் தெரியாமலே 'இப்படி இருந்த நீயா இப்படி மாறிட்டே?' என ஒவ்வொரு செயலுக்கும் பல கேள்விகளை எழுப்பி இரும்புக் கரம் கொண்டு சுயத்தை அடக்கி விடுகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளில் நான் சில நேரங்களில் மனிதனாகவும், சில நேரங்களில் மிருகமாகவும், சில நேரங்களில் நல்ல நடிகனாகவும் இருந்ததற்கு யாருக்காவது நன்றி சொல்லியாக வேண்டும். காரணம் நான் நானாக இயங்கியதை விட சுற்றி இருக்கும் உங்களால் இயக்கப்பட்டதே அதிகம். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்று பயந்து பயந்தே நடமாடியிருக்கிறேன். என் சுயத்தின் பரம ரகசியங்களை எப்போதாவது வெளிச்சத்துக்கு கொண்டு வர நினைக்கும்போது உங்களை நினைத்துப் பயந்து மறைத்திருக்கிறேன்.
குருட்டாம் போக்காக உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நிஜத்தைவிட பொய்யை ஏன் அதிகம் ரசிக்கிறீகள்?' பொய்யான முகத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துவிட்டு ஒருவரின் சுயத்தை ஏன் வெறுத்து ஒதுக்குகிறீர்கள். நல்லதோ, கெட்டதோ உங்களுக்குப் பிடித்தவாறு மட்டுமே நான் இருக்க வேண்டுமெனில் என் பெயரில் ஒரு செல்லப்பிராணியை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாமே.
என்னுடைய உயிர் அடையாளத்தை என்னால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். எனக்குப் பிடித்த அடையாளத்தை உங்களால் உருவாக்கவும் முடியாது; ஒழுங்குபடுத்தவும் முடியாது. ஃபேஸ்புக் போன்ற பொதுவெளியில் என் கருத்தால் உங்களுக்குள் உருவாகும் ரசாயன மாற்றத்தை வைத்து எனக்கு ஓர் உருவம் நீங்கள் கொடுத்தால் அந்த உருவத்தை நிச்சயமாக என்னால் பொருத்திக் கொள்ள முடியாது. அப்படி உங்கள் மனம் நோகக் கூடாதென்று பார்த்துப் பார்த்து உருவம் மாறினால் மெல்ல மெல்ல ஓர் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி நானும் செல்ல வேண்டியிருக்கும். அந்த முகம் அசிங்கமாக இருப்பதால் எனக்கு ஆகாது.
இக்கட்டான சூழ்நிலையில் என் குறைபாடுகளைச் சமாளித்து என் உயிரை நீட்டிக்க எனக்குத் தெரியும். என் கருத்துப் பிழையினால் எனக்குள் ஜெனட்டிக் சீரழிவும் என்னைச் சுற்றி சமுதாய சீரழிவும் ஒருவேளை ஏற்பட்டால்... அப்போது உங்களுக்குப் பிடித்தவாறு நீங்கள் தரும் முகம் பொருத்தி என்னை மாற்றிக் கொள்கிறேன். அதுவரை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நிற்க... (ஒரு பெருமூச்சு விட்ட பிறகு தொடர்ந்து படிக்கவும்) 'என்ன -----க்கு நாங்கள் உன்னை அப்படியே ஏற்க வேண்டும்' என யாராவது கேட்டால், அதற்கான என் பதில் நீங்கள் கேட்கப் போகும் அந்த ------ல் இருக்கிறது. #அவ்ளோதான்
Mano Red / 24.9.17

18 September 2017

ஞாயிறு உளறல் 7

அதைப் பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். அதுதான் இன்றைக்கு எல்லோருக்குமான பேசுபொருள். அதை சாதாரணமான ஒன்றாக கடக்கவும் கூடாது. தினமும் நமக்கு அது வேண்டும். அது இல்லாமல் வாழ்க்கை இல்லையென்கிற போதை நிலையும் உருவாகிவிட்டது. பெரியவர்களுக்கு மட்டுமே அது தேவைப்படும் என்பது மாறி சிறுவர்களுக்கும் அது தேவைப்படுகிறது. அது தவறானதா, சரியானதா தெரியவில்லை. அது பற்றிய விழிப்புணர்வும் அவ்வளவாக இல்லை. வயது வித்தியாசம் இன்றி அது தேவைப்படுகிறது. வயசுக்கு மீறிய விஷயங்களையும் அது தருகிறது. 'அது ஒரு இது' என்று சொல்லுமளவுக்கு அதன் மீது ஆசையும் வெறுப்பும் இருக்கிறது.
இப்படித்தான் அன்று அது இல்லாமல் இருந்த என்னை வேற்றுகிரகவாசி போல மற்றவர்கள் பார்ப்பதை உணர முடிந்தது. எதிரில் வரும் எல்லோரிடமும் அது இருந்தது. அது இல்லாமல் அவர்கள் யாரும் வெளியேறுவதில்லை. அதனுடன் வெளியேற அவர்கள் பழகிக்கொண்டார்கள். என்னைப்போல யாராவது அது இல்லாமல் வருகிறார்களா என்று தெரிந்துகொள்ள எல்லோரையும் நெருக்கமாகக் கடந்தேன். அப்படி யாரும் அது இல்லாமல் இருப்பதாகத் தெரியவில்லை. அது இல்லாமல் உலவுவது விசித்திரமாகவே இருந்தது. இறுதியாக அது இல்லாமல் இருந்த இன்னொருவரைக் காண முடிந்தது. அவரிடம் நேராகச் சென்று 'அது இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்கும் ஆவல் இல்லையென்றாலும் அது இல்லாத அவரைப் பார்த்ததில் சந்தோசம் கிடைத்தது. அந்தச் சந்தோசம் அது தொடர்பான அந்த விஷயத்தில் இன்னொருவர் என்னைப்போல் இருக்கிறார் என்பதால் கிடைத்தது.
அது இல்லாத போது புரிந்தது, அது முழுதாக என்னை இயக்கி இருந்திருக்கிறது. அது தன்னுடைய கட்டுப்பாட்டில் என்னை வைத்திருந்திருக்கிறது. அது இல்லாததால் அன்றைய நாளின் முழு சிந்தனையும் அது பற்றியே இருந்தது. நமக்கான அதுவை யார் தொட்டாலும் கோவம் வரும். அந்த அளவுக்கு அது உறவாடிப் பழகிவிட்டது. தனிமையில் அது உடன் இருந்திருக்கிறது. அது இல்லாத தனிமை வெறுமையாக இருந்திருக்கிறது. அதனுடன் ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல்தான் குடும்பம் நடத்த முடிகிறது.
அசிங்கத்தையும் அழகையும் ஒரே பார்வையில்தான் அது பார்க்கிறது. தகுதிக்கேற்ப அது ஒவ்வொருவரிடமும் ஒரு மாதிரி இருக்கிறது. ஒருசிலரிடம் அது உறைக்குள் இருக்கிறது; ஒருசிலரிடம் அது நிர்வாணமாக இருக்கிறது; ஒருசிலரிடம் அது உயர்ந்ததாக இருக்கிறது; ஒருசிலரிடம் அது போனால் போகிறதென்று இருக்கிறது; ஒருசிலர் அதை வியாபராமாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அதை தொல்லையாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அதை எல்லாமுமாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அது இல்லாமலும் இருக்கிறார்கள்; ஒருசிலர் அது தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். ஒருசிலர் அதைக் கொடுங்கள் பார்க்கிறேன் என்று கேட்கிறாகள்; ஒருசிலர் அது என்னுடையது என்கிறார்கள்; இன்னும் சிலர் 'தொட்டுப்பார்' என்று கைகளில் கொடுக்கிறார்கள். யார் கைகளில் எப்படி இருந்தாலும் அது அதுவாகவே இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சுற்றும் நாம்தான் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். அந்த #அது = செல்போன்.
Mano Red / 17.9.17

13 September 2017

ஞாயிறு உளறல் 6


சனி பிடித்தால் கூட ஏழரை ஆண்டுகளைச் சமாளித்துவிடலாம். இந்த சளிப் பிடித்தால் சீரியல் அழுமூஞ்சி ஆர்டிஸ்ட் போல மூக்கு சீந்தியே ஒருவாரத்தில் மூக்கு சிவந்துவிடும். ஏன் சளி, எதற்காக சளி, எப்படி சளி என்கிற வரலாற்றுக்காக முந்தைய நாட்களை ரீவைண்ட் செய்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டது, தயிர், லஸ்ஸி குடித்தது, மழையில் நனைந்தது என ஒவ்வொன்றாக ஆராய்ந்ததில் மழையில் நனைந்ததுதான் காரணமென சுய ஆராய்ச்சி முடிவு சொல்லியது.
1. கரகரப்பு படலம்
சளி பிடிக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக மூக்குக்கும் தொண்டைக்கும் இடையில் ஓர் உருளை உருளக் காண முடிந்தது. விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கரகரப்பான உறுத்தல் ஒன்று மேல்மாடி முழுக்க 'கிச்கிச்' மூட்டியது. போர் அறிவித்த பிறகு உலைக்களம் தேடும் போர்வீரன் போல சளியின் அறிகுறிகள் தெரிந்த பிறகு கைக்குட்டைகளைத் தேடித் துவைத்து தயார் நிலையில் இருந்தேன்.
2. காறித் துப்பும் படலம்
விடிந்து எழும்போது சளி தனது உறுதித்தன்மையை அறிவித்தது. காலையில் எழுந்து முகம் கழுவும்போதே போர் ஆரம்பித்தது. ஒரு மூக்கை அடைத்து மறுமூக்கில் புல்லட் வேகம் கொடுத்து சீறிச் சீந்தினேன். சளியுடன் இறுமலும் கை கோர்த்ததால் 'கர்ர்ர்...' என்ற காறித் துப்பல் அங்கேயே ஆரம்பித்தது. பாத்ரூமில் 'கர்ர்ர்...', ரோட்டில் 'கர்ர்ர்...', பஸ்ஸில் 'கர்ர்ர்...' ஆபிஸ்ல 'கர்ர்ர்...', டாய்லெட்ல 'கர்ர்ர்...'. இத்தனை 'கர்ர்ர்...' களுக்கு நடுவில் சளி வரவில்லை என்றாலும் வெறுமையான காறித் துப்பல் மட்டும் அனிச்சையாக நடந்தது. இந்தப் பனிப்போரை வெல்ல சுடுதண்ணீர் நேசக்கரம் நீட்டியது.
3. துயர படலம்
கைக்குட்டை, இன்ஹேலர் துணையுடன் பஸ்ஸில் ஏறினாலும் என்நிலை மீறி ஒரு மூக்கு உறிஞ்சலில் சளி வாயில் இறங்கி ஊஞ்சலாடியது. பஸ்ஸிலிருந்து வெளியே துப்பினால் யார் மண்டையிலாவது ஹாஃபாயில் போடுவது நிச்சயம். அதுவுமில்லாமல் ஒரு சமூக போராளி அப்படித் துப்பமாட்டான் என்று சுய வைராக்கியம் வேறு வாயைப் புடுங்கியது. உம்மென்று வாய்க்குள்ளேயே வைத்து, பத்திரமாகத் துப்பும் வாய்ப்புக்காக காத்திருந்தபோது சரியாக மணி கேட்கும் மணிகண்டன்களின் கண்டத்திலிருந்து தப்பிக்க மண்டை ஆட்டி 'ம்ம்ம்' பதில் சொல்லும் துயரமும் இருந்தது.
4. மணம், சுவை, திடம் படலம்
மூக்கிலிருந்து சுதந்திரம் கேட்கும் வெள்ளையர்களுடனான போராட்டத்தில் எந்த மணத்தையும் அறிய முடியாது. வாழைப்பழத்தின் மணத்தைக் கூட அறிய முடியாத இந்த மூக்கிடம் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் வயர் எறிவதை மூக்கில் சூடு வைத்துதான் சொல்ல முடியும். சாம்பார் சட்டியில் ரசம் என்று எழுதி ஒட்டியிருந்தால் பாழாய்ப்போன மூக்கு ரசமென்றே நம்பிக் குடித்துவிடும். அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த சளியுடன் நாக்கும் சேர்ந்து கூட்டுச் சதி செய்து ருசியை மறக்கடித்தது. இதில் மன திடத்திற்கெல்லாம் வேலையே இல்லை.
5. துடைத்தல் படலம்
எல்லாம் போக கையால் மூக்கை சீந்தி பேருந்து சீட்டில் துடைப்பது, போஸ்ட் கம்பியில் துடைப்பது, ரோட்டில் எங்காவது செடி இருந்தால் துடைப்பது போன்ற பல துடைத்தல்களும் இருக்கின்றன. கைக்குட்டையில் துடைத்தால் முகம் துடைக்க முடியாது என்பன போன்ற வேறு பல அரசியல் காரணங்களும் இருக்கின்றன. இந்த ஒருவாரத்துப் போரில் மூக்கு புண்ணாகி உடையும் லெவலுக்கு வந்துவிட்டது. இதற்கு நடுவில் சுயமாகாப் பரீட்சித்த சித்த வைத்திய குறிப்புகள் சாசனங்களாக்கப்பட்டு ரகசியமாக இருப்பதால் யாரும் படிப்பதற்கில்லை. 'கர்ர்ர்'....
Mano Red / 10.9.17

06 September 2017

ஞாயிறு உளறல் 5


இதுவும் படிப்பு சம்பந்தப்பட்ட கதை. பள்ளிக்கூடத்தில் மற்ற பாடங்களில் நன்றாகப் படித்தாலும் கணக்குக்கும் எனக்கும் இடையில் ரயில் பாதை போடக்கூடிய அளவுக்கு தூரம். 8வது வகுப்பு வரை சொந்த ஊரில் படித்ததால் அப்படி இப்படி என மார்க் போட்டு கணக்கில் தேற்றிவிட்டார்கள்.
9, 10ம் வகுப்புக்கு வேறு மாவட்டம், வேறு ஊர், வேறு அரசாங்க பள்ளி. எப்படியாவது 10வது பாஸ் செய்துவிட்டால் அதன்பிறகு கணக்கில்லாத வேறு படிப்பைப் படிக்கலாம் என பள்ளிக்கும், டியூசனுக்கும் ஆப்சண்ட் ஆகாமல் 10வது முடித்தேன்.
+1, +2க்கு இன்னொரு மாவட்டம், இன்னொரு ஊர், இன்னொரு அரசாங்க பள்ளி. அட்மிஷனுக்குப் போகும்முன்பே சீன, ஜப்பான் மொழியில் படித்தாலும் பரவாயில்லை அறிவியல், கணிதம் இல்லாத பிரிவில் சேர்ந்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். அருகில் அட்மிஷனுக்காக நின்ற அதிகம்பேர் இன்ஜினியரிங் படிப்பதற்காக கணிதப் பிரிவில் நின்றுகொண்டிருந்தார்கள். கணக்கு படிக்கப்போகும் அவர்கள் மீது ஏளனமான பொறாமை இருந்த அளவுக்குப் பயமும் இருந்தது. அப்போது தெரியாது நானும் அவர்களுடன் கணக்கு படிக்கப் போகிறேன் என்று. நாம் ஒன்று நினைத்தால் நம் தெய்வம் வெறொன்று நினைக்கிறது.
+1ல் முதல் நாள் முதல் பாடவேளை அதுதான். 'அது' என்றால் பொல்லாத அந்தப் பாடம்தான். கொஞ்சம் கூட மனம் ஒத்துப் போகவில்லை. சரஸ்வதி போல் அழகான டீச்சர் என்பதற்கெல்லாம் 'கணித முதல நம்பரெல்லாம் அறிய வைத்தாய் தேவி'ன்னு பாடவும் வரவில்லை. அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது. 'எல்லாம் முடிந்தது' என்றால் விபரீதமான முடிவுக்குப் போகவில்லை.
எதிலும் விருப்பமில்லாமல் இருந்தாலும் தவறாமல் பள்ளிக்கூடம் சென்றது, விடுதி மாணவன் என்பன போன்ற காரணங்களுக்காக +1ல் பாஸ் செய்தார்கள். +2ல் பொதுத் தேர்வு என்பதால் என் கல்விமுறையை நானே வடிவமைத்துக் கொண்டேன். அதன்விளைவு தேர்வு முடிவுகள் வந்தபோது கணிதம், இயற்பியல் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி.
10வது மார்க் வைத்து டிப்ளோமா முடித்து, அதன்பிறகு அதே கணிதப் பாடங்களில் பல அரியர்கள் வைத்து ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்து இறுதியில் இன்ஜினியரிங் முடித்தது தனிக்கதை. இன்ஜினியரிங் சம்பந்தமில்லாத வேறொரு வேலையில் இருப்பது இன்னொரு கதை.
விரும்பிய பாடத்தைப் படிக்க முடியாததில் எவ்வளவு வருத்தமும், ஏமாற்றமும் இருக்குமோ அதைப்போல் ஏமாற்றமும், வருத்தமும் விரும்பாத பாடத்தைப் படிப்பதிலும் இருக்கிறது. 'டாக்டர் சீட் கிடைக்கவில்லை என்றால் வேறு எதையாவது படிக்கலாமே' என்று சொல்லும் அறிவுக் கூமுட்டைகளுக்கு அந்த ஏமாற்றமும் வலியும் புரியாது. கண்ட கனவைச் சிதைப்பதையும் உதாசீனப்படுத்துவதையும் விட பெரிய வலி என்ன இருந்துவிட முடியும்.
டாக்டர். M Chinnappan தன் பதிவில் சொல்லியிருந்தது போல, 'இயலாமை எப்போதும் நம்மை நம் தகுதிக்கேற்ப பழக்கப்படுத்திவிடும்.'
தங்கை டாக்டர்.அனிதா எல்லாருக்காகவும் போராடியிருக்கிறார், போராட வைக்கிறார். சுயநலமாகக் கூட போராடத் தெரியாத நான் இயலாமைக்கு ஏற்பப் பழகிக்கொண்டேன் அவ்வளவுதான்.😷
Mano Red / 3.9.17