www.gamblinginsider.ca

06 December 2017

முள்ளும் மலரும் - Mano Red

வலிதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் வலி என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் பெயரில் இருக்கும் இரண்டு அர்த்தங்களும் ஆழமானது.
1. முள்ளும் மலரும்: முள் மற்றும் மலர்
இதில் யார் முள், யார் மலர்?
2. முள்ளும் மலரும்: இந்த முள்ளும் என்றாவது மலரும்.
காளி என்கிற முள்ளும் ஒருநாள் மலரும்
"கெட்ட பய சார் இந்தக் காளி"ன்னு சொல்லியபடி திரியும் ரஜினியின் சுயகெளரவமும், வித்தியாசமான திமிரும் வெறித்தனமானது. ஒரு வாழைமரம் கம்பியை முழுங்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் ரஜினியின் முரட்டுத்தனமும் இளகிய மனமும் இருக்கும்.
"இப்ப என் தங்கச்சிய உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலை"ன்னு சொல்லும்போது ரஜினி சொல்ல வேண்டிய "கெட்ட பய சார் இந்தக் காளி" டயலாக்க நமக்கு சொல்லத் தோணும். அதுதான் காளி அதுதான் ரஜினி.
"ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட காளிங்குறவன் பொழச்சிக்குவான் சார். கெட்ட பய சார் அவன்"னு கண் கலங்கி உதட்ட திருகிக்கிட்டே மேல பாக்கும்போது நமக்கு நடுங்கும். அந்த மனுஷன கட்டிப் பிடிச்சு அழணும்னு தோணும். ஏன்னா... கேவலம் நாம எல்லாம் மனுஷங்கதான.
(யாராவது காளி ரஜினி மாதிரி நடிக்க ஆசைப்பட்டா போஸ் கொடுக்கலாமே தவிர நடிக்க முடியாது)
எத்தனை அண்ணன், தங்கை படம் வந்தாலும் சினிமாத்தனமில்லாத இந்த மெலோடிராமாவை மிஞ்ச முடியாது. இந்தக் காட்சியை எப்படி விவரித்து எழுதினாலும் சரியாக உணர்வுகளுக்குள் கடத்த முடியுமா தெரியாது. ஆனால், முக பாவங்கள், பின்னணி இசை கலந்த காட்சியின் ஊடாக அதைச் சரியாக நமக்குள் கடத்தியிருப்பார் இயக்குநர் மகேந்திரன்.
கை இழந்த அண்ணனை தங்கை முதன்முதலாகப் பார்க்கப் போகிறாள். அந்தக் காட்சி எப்படி இருக்கும் தெரியுமா? ஆற்றில் பானையைக் கழுவிக்கொண்டிருக்கும் தங்கை. தூரத்தில் வரும் ஜீப்பை பார்த்து ஓடி வருவாள். காளியும் வள்ளியும் பார்க்கும் தூரத்தில் நின்றபடி பார்ப்பார்கள். தனித்தனியாக முக பாவங்கள் காட்டப்படும். அவர்களது அமைதியில் பின்னணி இசை தன் வாயை மூடிக்கொள்ளும். எல்லாமாக இருந்த அண்ணனின் கை இல்லாதது கண்டு தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சத்தங்களையும் விழுங்கி அமைதியாக தங்கை இருக்கும்போது இசை தன் சோக வாயைத் திறக்கும்.
இந்தப் படத்திலும் வசனம் இருக்கிறது. அது இசை வசனம். எல்லா வசனங்களையும் இளையராஜா ஆழமான இசையில் பேசியிருப்பார்.
பஞ்ச் டயலாக் பேசுனாதான் ரஜினி என்கிற பட்டத்தை எல்லாம் கிழித்துக் குப்பையில் கொட்ட வேண்டும் என்பது போல வார்த்தைகளின்றி ரஜினி நடித்திருப்பார். சொல்லும்போதே உடல் நடுங்குது.😍
Mano Red / 5.12.17

04 December 2017

விர்ச்சுவல் காதல் - Mano Red

#Nano_Story
-
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மொபைல் திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் ரோஸி. அவளுடைய மெய்நிகர் (virtual) காதலன் ஆல்ஃப்ரெட். இன்னும் அவனிடமிருந்து எந்தப் ரிப்ளையும் வரவில்லை. கொஞ்ச நேரம் காத்திருக்க முடிவு செய்து பிறர் அனுப்பியிருந்த குட்மார்னிங், fwd தத்துவம், திருக்குறள் குறுந்தகவல்களை எல்லாம் வாசித்து முடித்தாள். பொறுமை இழந்த பிறகு ‘எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என இறுதி மெசேஜ் ஒன்றை அவனுக்கு அனுப்பிவிட்டு...
அவள் அனுப்பிய மெசேஜை படித்துக்கொண்டிருக்குபோது அவனுடைய சிஸ்டம் Fatal Error என்று கண் சிமிட்டியது. ரோஸியும் அதே Errorஐ செய்யப் போகிறாள் என கம்ப்யூட்டர் மூளை உணர்த்தியதும் ஹைபர்லூப் வேகத்தில் போர்ட்டபிள் கேபிள் வழியே அவளிருக்கும் இடம் வந்து சேர்ந்தான். இறுதி மூச்சு இருப்பதை அறிந்த ஆல்ஃப்ரெட், சூப்பர் கணினி உதவியுடன் அவளைப் பிழைக்க வைக்க முடிவு செய்தான். அவனுக்குத் தெரிந்த எல்லாத் தவறான புரோகிராம்களையும் அவள்மீது ரன் செய்தான். எந்த அசைவும் இல்லை. அப்போதுதான் அவள் முதுகில் இருந்த டைனோசர் பாதம் அளவிலான மச்சப் பதிவுகளைப் பார்த்தான். இது எக்சிமா என்கிற சரும நோய்க்கான அடையாளம் என்பதை கூகுள் அவன் காதில் சொல்லியது. குணப்படுத்த முடியாத வியாதியின் வலியால் தற்கொலை செய்துவிட்டாள் என்று ஃபேஸ்புக்கை நம்ப வைத்துவிடலாம் என்று சமாதானம் ஆனான்.
இருந்தாலும் அடுத்த முயற்சியாக ‘புரோ வைட்டமின் ஏ’ நிரம்பிய உதடுகளால் அவளுக்கு தன் மூச்சுக் காற்றைச் செலுத்தினான். ம்ஹூம்ம்ம்... காப்பாற்ற முடியாது என தலையில் கைவைத்து உட்கார்ந்தபோது ‘எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று அவள் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வந்தது. உடனே சிசிடிவி கேமராவைச் சோதித்துப் பார்த்துச் சிரித்தான். தற்கொலை செய்வது ரெக்கார்ட் ஆக வேண்டும் என்பதற்காக கேமரா பொருத்தியிருக்கும் கம்பியில் தூக்குப் போட முயற்சித்து கீழே விழுந்திருக்கிறாள் என்பதை கேமரா பதிவு சொல்லியது.
தண்ணீரை செலவழிக்க விரும்பாமல் நெகட்டிவ் சல்ப்யூரிக் ஆசிடை முகத்தில் அடித்து மயக்கத்தில் இருந்து அவளை எழுப்பினான். இவன்தான் தன்னுடைய மெய்நிகர் காதலன் என்றதும் புன்னகைத்தாள். இருவருக்கும் காதல் பெருக்கெடுத்தது. இணையதள வேகத்தை மிஞ்சும் அளவுக்கு அவர்கள் இணையும் வேகம் இருந்தது. எல்லாம் முடிந்தபிறகு, அவளைக் கம்ப்ரெஸ் செய்து இமேஜ் என்கிற பேக்கேஜிங் லேபிள் ஒட்டி, அலமாரியில் 13வது வரிசையில் 26வது படமாக அவளை பத்திரப்படுத்தினான் ஆல்ஃப்ரெட்.
Mano Red /3.12.17