www.gamblinginsider.ca

06 December 2017

முள்ளும் மலரும் - Mano Red

வலிதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் வலி என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் பெயரில் இருக்கும் இரண்டு அர்த்தங்களும் ஆழமானது.
1. முள்ளும் மலரும்: முள் மற்றும் மலர்
இதில் யார் முள், யார் மலர்?
2. முள்ளும் மலரும்: இந்த முள்ளும் என்றாவது மலரும்.
காளி என்கிற முள்ளும் ஒருநாள் மலரும்
"கெட்ட பய சார் இந்தக் காளி"ன்னு சொல்லியபடி திரியும் ரஜினியின் சுயகெளரவமும், வித்தியாசமான திமிரும் வெறித்தனமானது. ஒரு வாழைமரம் கம்பியை முழுங்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் ரஜினியின் முரட்டுத்தனமும் இளகிய மனமும் இருக்கும்.
"இப்ப என் தங்கச்சிய உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலை"ன்னு சொல்லும்போது ரஜினி சொல்ல வேண்டிய "கெட்ட பய சார் இந்தக் காளி" டயலாக்க நமக்கு சொல்லத் தோணும். அதுதான் காளி அதுதான் ரஜினி.
"ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட காளிங்குறவன் பொழச்சிக்குவான் சார். கெட்ட பய சார் அவன்"னு கண் கலங்கி உதட்ட திருகிக்கிட்டே மேல பாக்கும்போது நமக்கு நடுங்கும். அந்த மனுஷன கட்டிப் பிடிச்சு அழணும்னு தோணும். ஏன்னா... கேவலம் நாம எல்லாம் மனுஷங்கதான.
(யாராவது காளி ரஜினி மாதிரி நடிக்க ஆசைப்பட்டா போஸ் கொடுக்கலாமே தவிர நடிக்க முடியாது)
எத்தனை அண்ணன், தங்கை படம் வந்தாலும் சினிமாத்தனமில்லாத இந்த மெலோடிராமாவை மிஞ்ச முடியாது. இந்தக் காட்சியை எப்படி விவரித்து எழுதினாலும் சரியாக உணர்வுகளுக்குள் கடத்த முடியுமா தெரியாது. ஆனால், முக பாவங்கள், பின்னணி இசை கலந்த காட்சியின் ஊடாக அதைச் சரியாக நமக்குள் கடத்தியிருப்பார் இயக்குநர் மகேந்திரன்.
கை இழந்த அண்ணனை தங்கை முதன்முதலாகப் பார்க்கப் போகிறாள். அந்தக் காட்சி எப்படி இருக்கும் தெரியுமா? ஆற்றில் பானையைக் கழுவிக்கொண்டிருக்கும் தங்கை. தூரத்தில் வரும் ஜீப்பை பார்த்து ஓடி வருவாள். காளியும் வள்ளியும் பார்க்கும் தூரத்தில் நின்றபடி பார்ப்பார்கள். தனித்தனியாக முக பாவங்கள் காட்டப்படும். அவர்களது அமைதியில் பின்னணி இசை தன் வாயை மூடிக்கொள்ளும். எல்லாமாக இருந்த அண்ணனின் கை இல்லாதது கண்டு தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சத்தங்களையும் விழுங்கி அமைதியாக தங்கை இருக்கும்போது இசை தன் சோக வாயைத் திறக்கும்.
இந்தப் படத்திலும் வசனம் இருக்கிறது. அது இசை வசனம். எல்லா வசனங்களையும் இளையராஜா ஆழமான இசையில் பேசியிருப்பார்.
பஞ்ச் டயலாக் பேசுனாதான் ரஜினி என்கிற பட்டத்தை எல்லாம் கிழித்துக் குப்பையில் கொட்ட வேண்டும் என்பது போல வார்த்தைகளின்றி ரஜினி நடித்திருப்பார். சொல்லும்போதே உடல் நடுங்குது.😍
Mano Red / 5.12.17