www.gamblinginsider.ca

19 May 2015

கிழட்டுப் பருவம்..!! - Mano Red



முதுமையின்
பருவ வயது அது..!!
இரண்டு மனைவிகள்
தவறியிருந்தாலும்,
மூன்றாவது காலின்
முக்கிய துணை(வி)யுடன்
தவறாமல் இருப்பவர்..!!

ஒரு குரல் கேட்டு
ஓடி ஓடி வேலை செயதவர்கள்
அவர் முதுமையின் தொல்லையால்
எங்கோ ஓடிவிட்டனர்..!!
இப்போது அவரின்
காது கூட எதுவுமே கேட்பதில்லை..!!

நாட்டு நடப்புகளை
தினசரியில் தினசரி
மேயந்தவருக்கு,
நரை வந்து
நடை தளர்ந்து
நடப்பதற்கு முடியாத போது
செய்தி சொல்ல ஆளில்லை..!!

தரையில் எதையோ
தடவிக் கொண்டிருந்தார்..!!
கண்ணாடியால் பதித்த
அத்தனை பெரிய வீட்டில்
கீழே விழுந்த
மூக்கு கண்ணாடியை
எடுத்து தர ஆளில்லை..!!

பிள்ளை இல்லாத
வீடுதான் என்றாலும்
அக்கிழவனால் துள்ளியாட
இயலவில்லை..!!
அகல தூண்களுடன் சேர்த்து
அத்தனை பேரும் அவரை
தவிக்க விட்டு போன பின்
எப்படி ஆடுவார்..??

முதியவர்கள் மிகவும்
இனிமையாய்
இருப்பதாலென்னவோ
முதுமையில்
சர்க்கரை சேர்ந்து விடுகிறது,
இளமையின் கசப்பான உள்ளங்களுக்கு
அம்முதுமையின் இனிமை
எப்படி இனிக்கும்..??

பல்லை கடித்துக் கொண்டு
சாகத் துணிந்தவருக்கு,
சேவல் கத்தலும்,
ஆடு மாடுகளின் அலறலும்
பசியை சொல்லியது..!!
அவருக்காக அத்தனை உயிர்
இருக்கும் போது
அவர் ஏன் இனிமேல்
உயிரை விடப் போகிறார்..??

17 May 2015

மனச்சிக்கல்..!! -Mano Red



உளவியல் எல்லாம் 
ஒரு புறமிருக்க,
அகத்திலிருக்கும்
கூற்றெல்லாம்
அகவை தாண்டி 
அனுமதியின்றி அவிழ்கிறது,,!

பதற்றத்தின் 
தொற்று நோய்க்கு
ஆளான இளைஞனின் 
உளறல் கை போல
நடுங்கிக் கொண்டே 
நகர்கிறது அடுத்த கணம்..!!

கடற்கரை கண்ட
சிறுமி ஒருத்தி
தருமி போல 
ஓரிடத்தில் நில்லாது 
குதித்து ஓடியதுவாக 
ஆடிச் சிதறியது 
தாவும் குரங்கு மனம்..!!

ஆங்காங்கே 
வெடித்து கிடக்கும்-வாழ்வின்
படிப்பினை எல்லாம்
நடிக்க பார்க்கிறதே அன்றி
துடித்து முன்னேற
இன்னும் முன்வரவில்லை..!!

வாழ்வின் சுழற்சியை 
முன்னோக்கி நகர்த்தும்
நெம்புகோல் எல்லாம்,
கால் ஒடிந்த கொக்கு போல
ஆதாரப்புள்ளிக்காக 
ஆரம்பத்திலிருந்தே 
ஆவலுடன் காத்திருக்கிறது..!!

அறியாத வயதிலிருந்த
அறிவெல்லாம்
செறிவான அனுபவத்தில்
முறியாமல் நின்ற போதும்,
தனிமையில் உளறும் 
கிழவனின் இரவு போல
ஆதாரம் அற்று இருந்தது..!!

இப்படிக் கனவெல்லாம்
கிணற்றுக் கல்லாய்
மூழ்கி கிடந்தாலும்,
கிணற்றுத் தவளையாய்
மாறிவிடக் கூடாதென்ற
சூளுரை ஒன்று 
சூடு போல
நெஞ்சைத் தழுவுகிறது..!!

13 May 2015

(அ)-நீதி தேவதை..!! - Mano Red




ஒரு கண்ணை
ஓரமாய் திறக்க வழியின்றி
அநீதியின் அவலங்களை
கண்மூடித்தனமாக
வேடிக்கை பார்த்தாள்
தேவையில்லாத- (அ)நீதி 
தேவதை..!!

அங்கே ஒரு கும்பல்
தண்டனை ஏதுமில்லையென 
மண்டை மூளை சொன்னதாய்
வெம்பிய ஆசையுடன்
நம்பிக்கையாய் களவாடியது..!
(அ)நீதி தேவதையும் 
சம்மதமென திரும்பி கொண்டாள்..!!

அங்கே ஒரு கும்பல்
போதை வெறியில்
பேதை ஒருத்தியின் 
சதை தின்று முடித்த போது
காதைப் பொத்தி
(அ)நீதி தேவதை ஓடி விட்டாள்..!!

அங்கே ஒரு கும்பல் 
ஊரை அடித்து 
உலையில் ஏற்றி
விலை பேசி கொண்டிருந்த போது,
நிலைகுலையாத (அ)நீதி தேவதை 
அலையாய் பயந்து சிதறினாள் ..!!

அங்கே ஒரு கும்பல் 
உயிரையும் - தலை 
மயிராய் எண்ணி
கொன்று தீர்த்து
வென்று விட்டது தண்டனையில்,
நின்று பார்த்தாள் அதையும் 
(அ)நீதி தேவதை..!!

கருப்பு திரையிட்டால்
என்ன தெரியும் அவளுக்கு..??
கண்ணை திறந்து விட்டு-அவளை
திண்ணையில் இருத்துங்கள்...
கருவில் நடப்பதற்கும் 
தெருவில் நடப்பதற்கும் 
வித்தியாசம் அறிவாள்
(அ)நீதி தேவதை..!!

10 May 2015

அன்பென்றாலே அம்மா -Mano Red



தாய்ப்பாலுடன் சேர்த்து
தாய்ப்பாசத்தை 
விற்பனைக்கு கொண்டு வரும்
விளம்பர உலகமிது..!!

அப்படியிருக்க 
பத்து மாசம் 
பார்த்து பார்த்து சுமந்தவளை,
பத்து விரல்களாலும்
பாதுகாக்க வேண்டும்..!!

அப்பாவின் 
கோப வெயிலிலும்
பாச மழையிலும்
குடும்பத்திற்காக 
குடை பிடித்தவள் அம்மா..!!

வயதில் பெரிதாய் 
எதுவுமே இல்லை..!!
எத்தனை வயதானாலும் 
குறையின்றி 
கொஞ்சுபவள் அம்மா..!!

சேட்டை செய்யும் மகனுக்கு 
சூடு வைத்து விட்டு,
வேண்டுமென்றே 
வெறும் கையில்
சுடு தண்ணீரை தூக்குபவள் அம்மா ..!!

கடை கடையாய் 
தேடி எடுத்த 
பட்டுப் புடவையில்
மகனின் வியர்வை துடைத்து
பாசமாய் திட்டுபவள் அம்மா..!!

இந்த அம்மாக்கள்
கடுகு டப்பாவில் பணத்துடன்
பாசம் புதைப்பவர்கள்,
அஞ்சறை பெட்டியில் 
அன்பு செய்பவர்கள்..!!

உங்களின்
பகுத்தறிவையும் 
மேதாவித்தனத்தையும்
அவளிடம் காட்டாதீர்கள்..!!
அவள் அதற்கும் மேலானவள்..!!

அவள் நமக்காக 
காத்திருந்தவள்,
காத்து இருப்பவள்,
காத்து இருக்க போகிறவள்..!!

04 May 2015

ஆபாசங்கள்..!! -Mano Red



சீச்சீ என்று சொல்லப்படும்
விஷயங்கள் தான் 
எதிர்பார்ப்பை 
அதிகம் தூண்டி 
மனதை ஆட்டுவிக்கின்றன..!!

ஆபாசங்கள்
தவறாக தெரியவில்லை,
அதை ஆபாசமாக 
நினைப்பதன் பின்னணியே 
தவறாக தெரிகிறது ..!!

ஆபாசங்களை 
விரும்பினாலும் 
விருப்பமில்லாதது போல,
முகம் சுழித்தே
ரசிக்கப்படுவது தான் அழகு..!

ஆபாசங்களின் 
ஆசாபாசங்களுக்கு
ஆணி வேராக
ஆசைப்படுதலின்
ஆர்வம் ஒளிந்திருக்கிறது..!! 

ஆபாசத்தில்
அசிங்கமென ஏதுமில்லை,
அசிங்கமாகி விடுமோ என்ற
அபத்த எண்ணமே 
ஆபத்தாகி விடுகிறது ..!!

ஆன்மீகத்தின் 
அடிப்படையே 
ஆபாசம் தானே..!!
முற்றும் துறத்தலின்
முற்றுப் பெற்ற வடிவமே ஆன்மிகம்
முற்றாத நிலையே ஆபாசம்,,!! 

02 May 2015

சிவப்பு சிந்தனை...!! -Mano Red



ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் 
எங்கோ ஒரு மூலையில்
ஒரு சிவப்பு புரட்சிக்காரன் 
ஒளிந்து கொண்டுதானிருக்கிறான்..!!

விளக்கை ஏற்றி வைத்த
தீக்குச்சி ஒன்று
பிரகாசம் தந்துவிட்டு
தன்னை மாய்த்துக் கொள்வது போல
எத்தனை எத்தனை
சிவப்பு சிந்தனையாளர்கள்..!! 

மரம் சும்மா இருந்தாலும் 
காற்று சும்மா இருக்க விடாது
இப்படியாகப்பட்ட நிலையில்
புரட்சி செய்ய துணிவு வேண்டாம்
உரிமைகளின் வெறி  
ரத்தத்தை சூடேற்றினால் போதும்..!!

இந்த சமுதாயம்
எனக்காக ஒன்றும் செய்யாத போது,
நான் ஏன் இந்த சமுதாயத்திற்காக
செத்து சொத்து இழக்க வேண்டும்
என்கிறவர்கள் தலை குனியுங்கள்..!!

பாட்டாளிகளிடம் புடுங்கிய பணத்தை 
பாட்டாளிகளுக்கு செலவழிக்காமல்,
முதலாளிகளின் 
மூக்கு சொறிந்து விட
செலவழிப்பதற்கு பதில்
நாக்கு புடுங்கி சாகலாம்..!!

சமூக சீர்திருத்தம்,
சமத்துவம்,
சம உரிமை 
இவற்றை காக்க 
தலைகுனிவும் தேவையில்லை
தலைவனாகவும் அவசியமில்லை
சொரணையிருத்தல் போதும்..!!

இப்போதெல்லாம் இப்படியிருக்க 
சிவப்பு சிந்தனை
தன்னை தானே 
அழிக்கும் காட்சி பார்த்து,
எல்லோரையும் போல
ஓரமாக ஒதுங்கி நின்று 
வருத்ததுடன்
வேடிக்கை பார்க்க 
தொடங்கி விட்டேன்..!!