www.gamblinginsider.ca

11 November 2014

டீக்கடை மனிதன்...!!! - Mano Red

எல்லா டீக்கடைகளிலும்
எல்லாம் தெரிந்ததாய் பேச
ஒருவன் இருப்பான்,
அரசியல் முதல்
ஆன்மீகம் வரை
அள்ளி வீசுவான்..!!

டீக்குடிக்க காசில்லாமல்
தலையை சொறிபவன்,
யாரோ தீக்குளித்த செய்தியில்
வதந்தி எண்ணெய் ஊற்றி
இன்னும் எறியச் செய்வான்,
எல்லைப் பிரச்சனையை
எளிதில் தீர்த்து விடுவான்..!

அவன் குடும்பத்தை
நடத்த தெரியாதவன்,
உலக சண்டை
மட்டுமின்றி,
இனப்படுகொலை குறித்து
கொந்தளிப்பான்..!!

துட்டு வாங்கி
ஓட்டுப் போட்டவன்
கறுப்பு பணத்தின் மேல்
கடும் கோபம் காட்டுவான்,
நாட்டு நடப்பு மேல்
அத்தனை நாட்டம் கொண்டு
நாகரிகமாக பேசுவான்...!!

ஒழுங்காக
கால் கழுவத் தெரியாதவன்,
கலாச்சர இலக்கியத்தை
கடித்து துப்புவான்,
வராத வரலாற்று நிகழ்வை
வாய் கிழிய பேசுவான்..!!

ஒர் கோப்பை தேநீர்
குடித்து முடிப்பதற்குள்
அவன்,
போராளி,
கோபக்காரன்,
நடுநிலையாளன்,
நீதிபதி,
அரசியல்வாதி,
சர்வாதிகாரி,
கவிஞன்,
கதை சொல்பவன் என
அரை நிமிடத்தில்
ஆயிரம் அவதாரம்
அவனாகவே எடுத்து
அவனாகவே விடைபெறுகிறான்...!!