www.gamblinginsider.ca

19 September 2016

எனதருமை ஆர்கானிக் காதலி! - Mano Red


கீழிருந்து மேல் நோக்கி
விழும் அருவியொன்று
அவளது உள்ளக்கிடப்பிலிருந்து
என் பொருட்டு
எப்போதும் பாயும்.
காந்தப் பார்வையால்
வட தென் துருவங்களை
புருவ அசைவில்
எனக்கெதிராகத் திசை திருப்புவாள்!
இயற்கைக்கு நேரெதிராக
விளையாடுவதெல்லாம் புதிதல்ல
அவளுக்கு!
இப்படித்தான் ஒருநாள்
பிரபஞ்சத்தை
காதல் பஞ்சத்தில் ஆழ்த்த
மொத்தக் காதலையும்
உறிஞ்சி எனக்களித்தாள்!
திணறிக் களித்த
கணம் கரைவதற்குள்
முத்தத் தொகுப்பொன்றை
மூச்சு முட்டப் பரிசளித்தாள்!
நல்லபடியே எல்லாம் கடந்துவர
அவள் நட்டதும் பூத்த
ஆர்கானிக் ரோஜாவிலிருந்து
பூவொன்று எனக்காகப் பறிக்கப் போனவள்
முள் குத்திய பெருவலியில்
அணு அணுவாகச் சிதறி
கதறி அழுதபோது
எனதாகிய என்னுடல்
ஆலகால விஷம் கலந்த
பாற்கடலாகித் தவிப்பதில்
என்ன அநியாயம்
இருந்துவிடமுடியும்?!

வாழ்தலின் அவசியம்! - Mano Red


கிரிக்கெட் ஸ்கோர் போர்டு 
கண்டு பழகியவர்களுக்கு
இறந்தவர்களின் எண்ணிக்கை 
குறிக்கப்பட்டிருந்த பலகை
விநோதமாகவே காட்சியளித்தது.

மூக்கு எது, வாய் எது என்றவாறு
கூழாகி நொறுங்கிக் காட்சியளிக்கும்
முகங்களைவிட
கதறி அழும் உறவுகளின் முகங்கள்
கண்ணீரை வேகமாக
ஊற்றெடுத்தன.

நாசியிலிருந்து
பிரிக்க முடியாத
பிணவாடையைக் கடந்து
சற்றும் நகர முடியவில்லை.
அந்த வாடை
உடையில் இருந்தா
உடம்பில் இருந்தா
காற்றில் இருந்தா
எங்கே ஒட்டிக்கொண்டிருக்கிறது
என்றும் தெரியவில்லை.

அலறல்களும் அழுகுரல்களும்
புலம்பல்களும் சாபங்களும்
காதில் தொடர்ந்து கேட்க,
மீண்டும் மீண்டும்
உரிமைகளைப் போராடி மீட்கவே
எங்களில் இன்னொருவன்
தீக்குளிக்க
தயாராகிக் கொண்டிருக்கிறான்!

வாழ்தலுக்கான அவசியம்
அதீதமாகச் சித்தரிக்கப்படும்போது,
அவன் செல்லும் இடமெல்லாம்
மரணமும் துரத்தி வருகிறது!


வள்ளியின் தாலி அறுப்பு! - Mano Red


முகம் முழுக்க மஞ்சள் பூசி 
பெரிய குங்குமப்பொட்டு வைத்து
மஞ்சள் குங்கும ஈரம் காய்வதற்குள்
வலிந்து அழித்தனர்.

தலை நிறைய பூ வைத்து
பூ வாசம் மூக்கேறும் முன்
அறுத்து வீசினர்!

கை நிறைய வளையல்களுடன்
கொலுசு மெட்டி அணிவித்து
அடுத்த நொடியே உடைத்து நொறுக்கினர்.

பின்பு கதறி அழச்சொன்னார்கள்
அவளும் கதறி அழுதாள்
அந்த அழுகை துக்கத்தினால் அல்ல
பலபேர் பார்க்க
தாலி அறுத்த அவமானத்தில்
வந்த அழுகை!

கையாலாகாத கணவன் கொடுத்தது
தாலி மட்டுமே!
பூ பொட்டு வளையல் எல்லாம்
பிறந்த வீடு கொடுத்தது.
குழந்தைப் பருவம் முதல்
அவள் சுமந்து வந்த உரிமைகளை
அழிக்கவும் அறுக்கவும் உடைக்கவும்
யார் உரிமை தந்தது?

மனதிற்குள் கொதிப்புடன்
தாலி சுமந்த பாவத்திற்காக
சமாதியின் மீது பூக்களை
தூவிக்கொண்டிருந்தாள் வள்ளி!



மகளதிகாரம் 2 - Mano Red


அலாரம் வைத்ததுபோல்
நடுராத்திரியில் அழுது
கொட்டாவி விடுவதைக்கூட
கவிதையாகச் சமைத்து
மதிப்பெண் குறைவுக்கு
பென்சிலைக் குற்றவாளியாக்கி
புதிய நபர்களுக்கெல்லாம்
‘டாட்டா’ சொல்லி விடைபெற்று
கதையில் பலியான மானுக்காக
“பாவம்” என்று ‘உச்’ கொட்டி
அமாவாசை நிலவை
டார்ச் அடித்துத் தேடி
பெரியவளாகிறேன் என்று சொல்லி
இடுப்பில் சிறுகுடம் சுமந்து
இப்படி எல்லாத் திசைகளிலும்
பிம்பங்களைப் பொருத்தி
வீடுஉலா வரும் மகளே
உன் ஃபோட்டோக்களிலும்
பால் வாசம் வீசுகிறது!

கடவுளின் கெமிஸ்ட்ரி! -Mano Red


தீச்சுழல் நறுக்கி
பெரும்பிளம்பின் வாய்வழியே
நடுவூடாகத் தெரியும்
மின் தொடைகளில்
ஒரு வைராக்கிய சங்கீதம்!
இச்சைகளின் இரவுகளை
பிச்சையெடுக்க
மீளாத் துயரின் நவரசங்களில்
எச்சில் வடிய
நாக்கு ஒன்று தலைகீழ்
தொங்குகிறது.
அச்சமயம் ஆதி இருளொன்று
கடவுளின் முந்தானை பிடித்து
அய்யோவென கூவி
காதலுக்கு அழைத்தபோது
கடவுளின் காதல் வேதியியல் பாதியில்போனது
வீதியில் நிற்கும்
குடுகுடுப்பைக்காரனிடம்!
-Mano Red

மகளதிகாரம்! -Mano Red



ஏய்... நிஞ்சா, டோராக்களே
டிவியில் விளையாடும் உங்களை
என்றாவது ஒருநாள்
வீதிக்கு இழுத்துச் சென்று
விளையாடப் போகிறாள்
எச்சரிக்கையாக இருங்கள்!
*
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
என்பதெல்லாம்
அவளுக்குக் கைவந்த கலை!
*
“ஒண்ணு மூணு ஆறு” என்றபடி
தப்புத் தப்பாக
மழலை மொழியில்
மழைத்துளியை எண்ணுகிறாள்.
சந்தோஷமாகச் சிதறுகிறது
ஏகப்பட்ட மழைத்துளிகள்!
*
“அப்பா... இந்தப் பாப்பா அழகா இருக்குல்ல”
என்றவாறு
கண்ணாடி முன் நின்றுகொண்டு
தலை சாய்க்கிறாள்
தெரிகிறது தெய்வீகச் சாயல்!
*
“அப்பா... A for Appleதானே?”
என்ற மகளிடம்
அல்ல மகளே
உன் அப்பன் தமிழன்
“ஆ என்றால் ஆப்பிள்” என்றேன்.
“ஆப்பிள் தமிழ் இல்லப்பா?” என்றவாறு
தலையில் கொட்டுகிறாள்
தமிழ் இனிக்கிறது!
*
கண்ணை மூடியபடி
எதிரில் ஒளிந்துகொண்டு
வீடு முழுக்கத் தேடச் சொல்கிறாள்
‘பாப்பாவைக் காணோமே’ என்றபடி
உலகம் சுற்றிவருகிறேன்.
*
வீட்டின்
பத்துக்குப் பத்து அறைக்குள்
பல மைல்கள் நடக்கிறாள்.
ஓடப் பழகிவிட்டது
நடை பயிலும் வண்டி!
*
முத்தமொன்று கொடுத்து
திருப்பி வாங்கிவிட்டு
“அப்பா... எச்சிப்பா"
எனத் துடைப்பதுதான்
மகளதிகாரத்தின் உச்சம்!

03 September 2016

எழவுக்குப் போய்ட்டு வரேன்! - Mano Red


ஊரின் எல்லை தாண்டி
ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த
ஒப்பாரிச் சத்தமும்
முற்றத்துக் கூட்டத்தில் கேட்ட
முனுமுனுப்புச் சத்தங்களும்
சாவு வீட்டை
சலசலப்பாக்கி இருந்தது.
அழுதழுது ஓய்ந்தவர்கள் 
காபிக்களிலும் சோடாக்களிலும்
மூழ்கி இருக்க,
கொல்லி தயார் செய்யவும்
கோடித்துணி கிழிக்கவுமென
சாதி வாரியாக 
வேலைகள் ஒருபுறம் 
நடந்துகொண்டிருந்தன.
எல்லாமே முடிந்த
இறுதி ஊர்வலத்திலும்
ஆளாளுக்கு ஒரு கதை பேசி
மாட விளக்கொன்றை 
அணைத்துவிட்டு
வீடு திரும்பும்போது
”எங்க போய்ட்டு வர்றீங்க” என்று கேட்ட
எதிர்ப்பட்டவரிடம்
“எழவுக்குப் போய்ட்டு வரேன்” என்று 
வழக்கம்போல சொல்லிவிட்டு
கால் தேய்த்துக் கழுவியதில் 
கரைந்து ஓடின 
மூன்று தலைமுறை கண்ட
கந்தசாமிப் பாட்டனின் நினைவுகள்!